பெப்ரவரி இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேசத்தையும் எங்களையும் ஏமாற்றுவதற்காக வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறுகின்றது. இதில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கையில் யாரும் பங்கேற்க வேண்டாமென யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்திருந்ததது.
மேலும் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றைய தினம் யாழ் மத்திய கல்லூரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் கலாசார நிகழ்வுகள் சகிதம் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதி அமைச்சின் நடமாடும் சேவையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை உள்ளீர்க்கக்கூடாது என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த நிகழ்வுக்கு வந்த எந்த பிரதிநிதியுமே போராடிக்கொண்டிருந்த மக்களை கடமைக்கேனும் சந்தித்து பேச முன்வரவி்ல்லை என்பதே வேதனையான விடயம். நீதி பற்றி இம்மியளவும் சிந்திக்காத இந்த நாட்டில் இருந்து கொண்டு தான் – இவர்களிடம் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை எதிர்பாரத்துக்கொண்டிருக்கின்றோம்.
வந்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் கூட பரவாயில்லை. ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் நடவடிக்கைகள் தான் இன்னும் வேதனையளிக்கின்றது. இதே டக்ளஸ் தேவானந்தா தான் கடந்த வருடம் காணாமலாக்கப்பட்டோரை பற்றிய தகவல்களை கேட்டு உறவுகள் போராடிய போது இரண்டு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என ஊடகங்களில் கூறியவர். அது உண்மை போலவும் தீர்வு கிடைக்கும் போலவும் தொடர்ந்தும் தெரிவித்துக்கொண்டேயிருந்தார். அவர் இதற்கு தீர்வு தருவாதாக கூறியே பல மாதங்கள் ஆகிவிட்டன. பாவம் டக்கர் மறந்து விட்டார் போலும்.
காணமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்கு தீர்வு இரண்டு மாதங்களில் கிடைக்கும் என கூறியிருந்தார். அவர் இதனை கூறி சில நாட்களிலேயே ஐ.நாவில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ காணாமலாக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழ் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த கருத்தை எதிர்த்து தீர்வு தருவதாக கூறிய டக்ளஸ் தேவானந்தாவோ – தமிழ் தேசியம் – விடுதலைப்புலிகள் என கூவிக்கொண்டிருக்கும் எந்த தமிழ் தலைமையுமே எதிர்ப்பு நடவடிக்கைகள் எவையுமே மேற்கொண்டிருக்கவில்லை. இவ்வளவு தான் இவர்களுடைய மக்கள் மேலான பற்று. இவர்களுடைய மக்கள் மீதான அக்கறை எல்லாம் தேர்தல் துண்டுப்பிரசுரங்களில் மட்டுமே.
தாய் நிலத்தில் நிகழ்வு நடந்த பாடசாலைக்கட்டடத்துக்கு வெளியே ஒரு மக்கள் கூட்டம் உறவுகளை தேடி தெருவில் நின்று போராடிக்கொண்டிருக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேடையில் நின்று கொண்டு ,
“அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கான விடயங்களில் பாரபட்சங்களை காட்டப் போவதில்லை. இந்த அரசாங்கத்தை நம்பி அவர்களுடன் பயணிப்பதனூடாக எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.” என கூறுகின்றார். இவ்வளவு தான் தமிழர் தலைமைகளுடைய அரசியல் பார்வை.
இன்றைய தமிழ் அரசியல் பரப்பிலுள்ள எல்லா அரசியல்வாதிகளும் தம்மையும் தமது அரசியல் இருப்பையும் பாதுகாத்தால் மட்டும் போதுமானது என்பதாகவே தங்ககளுடைய அரசியலை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.
இந்த காணாமலாக்கப்பட்டோரை மீட்டு தரச்சொல்லி மக்கள் ஒரு தசாப்பதத்துக்கும் மேலாக போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர். அரசோ – அரசிலிருக்கும் தமிழ் பிரதிநிதிகளோ இதனை எப்போதும் செவியில் வாங்கிக்கொள்ளவில்லை. காணாமலாக்கப்பட்டோரை தேடிய மக்களின் போராட்டம் எப்போதெல்லாம் வலிமை பெறுகிறதோ அப்போதெல்லாம் அரசின் தமிழ்பிரதிகள் ஏதாவது சொல்லி – தீர்வு தருவதாக கூத்தாடி மக்களின் போராட்டத்தை குழப்பி விடுகின்ற சூழலே தொடர்கின்றது.
மாவீரர் தினம் – புலி அரசியல் – பிரபாகரன் கைகாட்டிய கட்சி என்றெல்லாம் கொடி பிடித்து தமிழ் மக்களின் ஓட்டுக்களை பெற்றுக்கொண்ட முக்கியமான தமிழ் தலைமைகள் யாரும் இந்த மக்களை கண்டுகொள்வதேயில்லை என்பதே நிதர்சனம். தொடர்பேயில்லாமல் இவ்வளவு நாளும் இல்லாமல் திடீரென சுடலை ஞானம் வந்ததது போல 13வது திருத்ததச்சட்டத்தை பிடித்து தொங்கிக்கொண்டு ஆளாளுக்கு போராட்டமும் – இந்திய பிரதமருக்கு கடிதமும் எழுதுவதை விட்டுவிட்டு இந்த மக்களுடைய பிரச்சினையை தீர்க்கும் வரைக்காவது ஒரு தொடர்ச்சியான போராட்டத்தை மேற்கொள்ள தமிழ்தலைமைகள் முன்வரவேண்டும்.
உறவுகளை தேடியலைந்து – கேட்டு போராடி போராடியே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலர் இறந்துவிட்டார்கள். எஞ்சியவர்களும் இறந்து போவதற்குள் சரி இவர்களுக்கான தீர்வு கொடுக்க கிடைக்க வேண்டும். அதற்காக இயங்க அனைத்து தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளும் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும். முதலில் இந்த மக்களின் உறவுகள் தொடர்பான பிரசினைகளை தீர்த்து அவர்களும் எங்களை போல குடும்ப உறவுகளுடன் சந்தோசமாக வாழ நடவடிக்கைகளை மேற்கொள்வதே தமிழ்தேசியத்தை சொல்லி அரசியல் செய்வோர் இந்த மக்களுக்கு செய்யககூடிய பாரிய கைமாறாகும்.