எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைக்கவே முடியாது என ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை தற்காலிக பிரதமராக நியமிக்கும் முயற்சிகள் அரசாங்கத்திற்குள் முன்னெடுக்கப்படுவதாக தெரிய வருகின்ற நிலையில், அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் சட்ட அங்கீகாரம் குறித்தும் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
ஆட்சி மாற்றம் அவசியமாக இருந்த வேளையில் இந்த ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையில் ஆட்சி மாற்றத்தை முன்னெடுத்தோம். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் மீது நம்பிக்கை வைத்தோம், அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.
ஆனால் அதன் பின்னர் அவரும் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைக்கவே முடியாது. மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாடு கடன் பொறிக்குள் சிக்கியது என்பதே உண்மையாகும்.
பஷில் ராஜபக்ஷ இன்று நாட்டை நாசமாக்கி வருகின்றார். பஷில் ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டில் சாதாரண அரச பணியாளராக கூட சேவைசெய்ய முடியாது. அதற்கு இலங்கை சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் அமைப்பில் 19 ஆம் திருத்த சட்டத்தை நீக்கி 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்தவுடன் அனைத்தும் நிவர்தி செய்யப்பட்டுள்ளது என இவர்கள் நம்புகின்றனர்.
ஆனால் 1948 ஆம் ஆண்டில் டி.எஸ்.சேனாநாயகவினால் கொண்டவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அதுதான் செல்லுபடியாகும் சட்டமாகும். ஆகவே இதற்கு அமைய பஷில் ராஜபக்ஷவினால் இந்த நாட்டில் அமைச்சுப்பதவியை மட்டுமல்ல எந்தவொரு அரச பணியில் கூட ஈடுபட முடியாது. ” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.