சிறு பிள்ளைகளோடு உரையாடல் நடத்தினால் “நீங்கள் யாரைப் போல் வரப்போகின்றீர்கள்? என்னவாக வரப் போகின்றீர்கள்?” அவர்களும் தங்களுக்கு தெரிந்ததைச் சொல்வார்கள். ஊரில் கேட்டால் டொக்டர், என்ஜினியர் என்பார்கள். அன்று அப்படித்தான் இருந்தது. இன்றும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். புலம்பெயர் நாடுகளில் கேட்டால் புட்போல் ப்பிளேயராக, யூரியூப்பராக, விடியோ கேம் டிசைனராக என்று சொல்வார்கள். ஏனெனில் இத்தொழில்களில் வருமானம் அதிகம். அவர்கள் வளர்ந்து பதின்ம வயதை அடையும் போது தங்கள் உண்மைநிலையை உணர்ந்து அதற்கமைய தங்கள் தெரிவுகளை மேற்கொள்வார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய தேவை என்ன என்பதை அடையாளம் கண்டுகொண்டால் தான், அத்தேவையை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பட முடியும். இது தனிப்பட்டவர்களுக்கு மட்டுமானதல்ல.
சமூகத்திற்கும் இதே பிரச்சினை இருக்கின்றது. ‘தமிழர்களுக்கு என்ன தேவை?’ என்பதில் இதுவரை எந்தத் தெளிவும் உடன்பாடும் இல்லை. ஆனால் ஜனவரி முதலாம் திகதி நேற்று பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனின் வீட்டில் வைத்துத்தான் தமிழ் பேசும் தலைவர்களின் ஒருமித்த நிலைப்பாடு இறுதி செய்யப்பட்டதாம். அப்படி என்றால் 2021 டிசம்பர் 31 வரை இவர்களிடம் ஒருமித்த நிலைப்பாடு இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்றதும் தெரியாது. டிசம்பர் 31 கொழுத்திப் போட்ட வெடிச்சத்ததில் எழும்பி சனிக்கிழமை ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அந்த நிலைப்பாடு என்ன என்பது தமிழ் சனத்துக்கு தெரியாது.
இந்தத் தமிழ் பேசும் தலைவர்கள் யார் என்பதிலேயே தெளிவில்லை. ரிஎன்ஏ யும் முஸ்லீம் காங்கிரஸ்ம் தான் தமிழ் தலைவர்கள் என்று யார் சொன்னது? முதலில் இந்தச் சொல்லாடல்களை வைத்து ரீல் விடுகின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அதற்குத் துணை போனவர்கள் இன்று தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக தங்கள் கறள்கட்டிய சைக்கிளை எடுத்து ஓடுகின்றனர். தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்க கொண்டு வந்தது சிங்கள மக்களின் நலனுக்காக அல்ல. அதேபோல் அதனை எதிர்த்தவர்கள் தமிழர்களுடைய நலன்களுக்காக மட்டும் அதை எதிர்க்கவில்லை.
எழுபதுக்களில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்பிரச்சினை தமிழ் மக்களுடைய பிரச்சினையாக்கப்பட்டது. உண்மையில் அது யாழ்ப்பாணத்தில் இருந்த படித்த சமூகத்தின் ஒரு பிரச்சினையே. ஏனைய தமிழ் மாவட்டங்களைப் பொறுத்தவரை இந்த மாவட்டரீதியான தரப்படுத்தல் ஏனைய தமிழ் மாவட்டங்களில் இருந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் இணைந்து தமிழிர் விடுதலைக் கூட்டணியாக ‘தமிழீழம்’ என்ற கோசத்தை தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்கும் செயற்திட்டமாக முன்வைத்தனர். அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டனர். ஆனால் ‘தமிழீழம்’ அமைப்பது கூட்டணியின் எண்ணமாக ஒருபோதும் இருக்கவில்லை.
அதனை உணர்ந்த இளைஞர்களான வே பிரபாகரன் உட்பட்டவர்கள் தாங்கள் தமிழீழத்தை பெறுகிறோம் என்று கூறிக்கொண்டு சின்னதும் பெரிதுமாக ஆளுக்கொரு ஆயத இயக்கத்தைக் கட்டினர். பாராளுமன்ற அரசியல் கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு இளைஞர்கள் முன்னுக்கு வந்தனர். உடைந்தும், சேர்ந்தும், திருப்பியும் உடைந்தும் ஐந்து இயக்கங்கள் நாற்பது இயக்கங்களாகி எதற்காகவோ சண்டை பிடித்தனர். வே பிரபாகரன் உட்பட இவர்களுக்கும் ‘தமிழீழம்’ நோக்கமாக இருக்கவில்லை. தங்களின் தலைமையின் தாகங்களை, வெறிகளை தமழர்களின் தாகமாகக் கற்பிதம் செய்துகொண்டு தங்களையும் அழித்து சுற்றியிருந்த மற்றவர்களையும் அழித்து தமிழ் மக்களையும் அழித்தனர். தமிழீழத்திற்காக அல்ல தமிழீழத்தின் பெயரால்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் சர்வதேசத்தினதும் ஆதரவோடு இலங்கை அரசு வே பிரபாகரன் கேட்ட தமிழீழத்திற்கு அவரோடு சேர்த்து சங்கூதியது. வரலாற்றை சரியாகக் கற்றுக்கொள்ளாவிட்டால் அதன் திசையை மாற்றி அமைக்காவிட்டால் வரலாறு இன்னொரு சுற்று அதே ஓட்டத்தில் ஓடும். இப்போது ஆயதம் தாங்கியவர்கள் எல்லாம் ஆயதத்தை தூக்கிப் போட்டுவிட்டு மாறு வேசத்தில் வந்து மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்கின்றனர். இப்போது மீண்டும் பாராளுமன்ற அரசியல்.
தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை? என்ன தேவை? என்று இவர்கள் யாரும் அன்றும் தமிழ் மக்களிடம் சென்று கேட்டறியவில்லை. இன்றும் கேட்டறிய முயற்சிக்கவும் இல்லை. அது அவர்களுக்கு தேவையானதொன்றும் அல்ல. அவர்கள் தங்களுடைய நலன்களும் அபிலாசைகளும் என்னவென்பதை சரியாக அடையாளம் கண்டு அதற்கான திட்டத்தை மிகச் செம்மையாக வகுத்துள்ளனர். தங்களுடைய நலன்களையும் அபிலாஷைகளையும் தமிழ் மக்களினதாக மாற்றி விட்டுள்ளனர். அதனால் அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கின்றனர்.
கோயிலில் பிள்ளையார் சிலை திருட்டு முதல் வடக்கு கிழக்கு இணைவு வரை ஒரு கதையைச் சொல்லி இடையில் புத்தரையும் பிக்குவையும் செருகி அவர்கள் மக்களை வேறொரு மாயைக்குள் வைத்துள்ளனர். உலக நாணய நிதியம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும், சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் அமெரிக்காவையும் உசுப்பிவிட்டு இடையால தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பம் என்றெல்லாம் தமிழ் பேப்பரிலேயே நாலு எழுத்து வாசிக்காத தமிழ் பாராளுமன்ற சீவன்கள் அறிக்கைவிடுகின்றன.
அல்வாயில் வாழ்ந்தால் என்ன அந்தாட்டிக்காவில் வாழ்ந்தால் என்ன நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு சுத்தமாக இருக்கின்றது என்பது முதல் என்ன உணவை உட்கொள்கின்றோம் என்பது உட்பட நாம் அகற்றும் கழிவுகளுக்கு என்ன நடக்கின்றது என்பது வரை அனைத்துமே அரசியல் தான். தமிழ் மக்களுக்கும் அரசியல் பிரச்சினை இருக்கின்றது. ஆனால் அது இந்த தமிழ் பேசும் தலைமைகளின் ஒருமித்த சுத்துமாத்து கதையளப்புகள் அல்ல.
இலங்கையில் வாழும் இந்த தமிழ் மற்றும் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைக்கும் தமிழ் பேசாத மக்களுடைய பிரச்சினைக்கும் இடையே பாரிய வேறுபாடுகளும் இல்லை. மேலும் தமிழ் பேசும் மக்களுக்கு இடையேயும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றது. ஆகையால் தமிழ் பேசும் மக்களும் தமிழ் பேசாத மக்களும் தங்களுடைய பொதுப் பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொண்டு அதற்கான தீர்வுக்கான செயற்திட்டங்களை இணைந்து வகுக்க வேண்டும். ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பினர் மீது ஏவிவிட்டு தமிழ் – சிங்கள அரசியல் தலைமைகள் நடாத்தும் கூட்டுக்கலவியை தமிழ் பேசும் தமிழ் பேசாத இலங்கை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.