வடக்கில் இடம்பெயர்ந்துள்ள சகல மக்களும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான மீள்குடியேற்றத்தின் மூலம் 280,000மாக விருந்த இடம்பெயர்ந்த மக்கள் தொகையை 160,000மாக குறைக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, எதிர்வரும் 2010 ஜனவரிக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கையை பூரணப்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பல்கேரிய ஜனாதிபதி ஜோர்ஜி பார்வனோவிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு அரசியல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு ரீதியானதாக அமைந்ததுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சம்பந்தமாகவும் இதன் போது ஆராயப்பட்டுள்ளன.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொண்டுவரும் பிரயத்தனம் சம்பந்தமாகவும் அதன் பிரதிபலன்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்கேரிய ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனைச் கேட்டறிந்த பல்கேரிய ஜனாதிபதி, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் மீள நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளார்.
இன மற்றும் மத ரீதியான மக்களின் ஒத்துழைப்புடன் இலங்கையின் இறைமை மற்றும் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஜனநாயக வழியில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதிலும் நாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இடம்பெயர்ந்தோர் மீள தமது கிராமங்களில் மீளக்குடியேற்ற ப்படுவதிலும் அவர் தமது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த பல்கேரிய ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்குமிடையில் நேற்றுக் காலை ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது பல்கேரிய ஜனாதிபதியுடன் வந்திருந்த அந்நாட்டின் வர்த்தகத் தூதுக் குழுவுடனான முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையிலுமான பொருளாதாரத் தொடர்புகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப் பட்டுள்ளன. இப்பேச்சுவார்த்தையினையடுத்து பல்கேரிய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கும் இலங்கை வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்துக்குமிடையில் உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இவ்வுடன்படிக்கைக்கிணங்க இலங்கைக்கும் பல்கேரியாவுக்குமிடையில் பொருளாதார ஒத்துழைப்பை முன்னேற்றும் பல்வேறு செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
நேற்றைய இச்சந்திப்புகளுக்குப் பின் பல்கேரிய ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினருக்கு ஜனாதிபதி மாளிகை யில் நேற்று மதிய போசன விருந்தளித்து கெளரவிக்கப்பட்டது.