ஜனவரி மாதத்திலிருந்து சகல ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (03) அறிவித்தார். புதியதொரு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக சம்பள உயர்வு வழங்குவதோடு நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான நிலுவையும் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரத் தொழிலாளர் சங்கத்தின் ஏழாவது தேசிய சம்மேளனத்திலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பைச் செய்தார். “அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பரில் சமர்ப்பிக்கவிருந்தேன். ஆனால், புதிய பாராளுமன்றத்திற்கு முன் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து அதனைப் பாராளுமன்றத்தில் கட்டிப்போட வேண்டாமெனக் கூறினார்கள். அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.
ஆனால், ஊழியர்களின் நலனை கவனிப்பதற்கு ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்றவகையில் புதிய பாராளுமன்றம் வரை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஜனவரி மாதம் நிச்சயம் சம்பள உயர்வைப் பெறுவீர்கள். இரண்டு மாத நிலுவையும் கிடைக்கும்” என்று தெரிவித்தார் ஜனாதிபதி.
இதனைத் தாம் இதற்கு முன்பும் கூறியதாகவும் ஆனால், சம்பந்தப்பட்டவர்களைத் தனது அறிவிப்பு சரியாக சென்றடையவில்லையென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? அரசியல் பிரச்சினை!
அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி மக்களை அழுத்தத்துக்குள்ளாக்க சிலர் முயற்சிக்கின்றார்கள். எனவே சூழ்ச்சிகளுக்கு இடமளிக் காதீர்கள்” என்றார் ஜனாதிபதி. அதேநேரம் 180 நாள் வேலை செய்த அனைவரையும் நிரந்தரமாக் குவதற்கு நடவடிக்கை எடுப்பதா கவும் ஜனாதிபதி கூறினார்.
“உடன்படிக்கை செய்து, பிரித்துப் போட்ட நாடு இது! புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியெனத் தனியாகக் குறித்தொதுக்கப்பட்டது. அங்கு எமது இராணுவத்தினர் உள்ளே செல்ல முடியாது. அவர்களின் பகுதிக்குச் செல்பவர்கள் கப்பம் செலுத்த வேண்டும்.
வரி என்று நான் சொல்ல மாட்டேன்! புலிகள் நிர்வாகத்தைப் பிரித்து, பொலிஸ் படை, கடற்படை, விமானப்படை, இராணுவப் படை போன்றவற்றை உரு வாக்கும்வரை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தெற்கில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த உத்தியோகத்தரைக் கொலை செய்த சம்பவங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
எங்கே குண்டுகள் வெடிக்கும் என்று அஞ்சிய யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான போராட்டத்தில் தொழிலாளர் மக்கள் எமக்கு ஆதரவாக இருந்தனர். நாம் யுத்தத்தின் காரணமாக அபிவிருத்தியை முடக்கவில்லை. நாட்டைப்பற்றிச் சிந்தித்துதான் முன்னேறுகின்றோம்.
எதிர்க் கட்சித் தலைவரைப் போல் அந்தப் பகுதியை நீ பார், இந்தப் பகுதியை நான் பார் என்று புலிகளுக்கு நான் சொல்லவில்லை. எனக்கு என்னைவிட என் தாய் மண் மீதே கூடுதல் அன்பு. நாம் எமது பொறுப்புகளைச் செய்யவேண்டும். நாம் பதவிக்கு வர பாடுபட்டவர்கள், தற்போது வேறு யாருடனோ போவாரெனின் அது உகந்த விடயமல்ல. எனவே சிறு குழுக்களுக்கு எமது சங்கத்தை ஆட்டுவிக்க இடமளித்துவிடாதீர்கள்.
அதுபோல் நிறுவனத் தலைவர்கள் மண்ணில் கால்பதித்துச் செயற்படவேண்டும். வானத்தில் இருந்து குதித்தவர்கள்போல் செயல்படக்கூடாது.
ஜனாதிபதி தேர்தலா, பொதுத் தேர்தலா முதலில்?
இரண்டு தேர்தல்களில் எது முதலில் வரும் எனச் சிலர் கேட்கிறார்கள். சிலர் ஒரு தேர்தலைக் கூறுகிறார்கள். என்னவானாலும் எதிர்வரும் 15ம் திகதி சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் எந்தத் தேர்தல் என அறிவிப்பேன்!” என்று ஜனாதிபதி கூறியதும் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஒருமித்த குரலில் கேட்டுக் கொண்டார்கள். “சரி உங்கள் கருத்தை அறிந்துவிட்டேன்.
மாகாண சபை மற்றும் பிராந்திய தலைவர்கள் மற்றும் மக்களிடமும் கருத்தைக் கேட்பேன். ஆனால், எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உண்டு. மக்களுக்காக 2 வருடங்களைத் தியாகம் செய்யவும் தயார்” என்று கூறினார் ஜனாதிபதி.