புதிய பாராளுமன்றில் முழுமையான பட்ஜட் அமைச்சர் சரத் அமுனுகம

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் ஐ.ம.சு. அரசு சிறப்பான வரவு செலவுத் திட்டத்தை புதிய பாராளுமன்றத்தில் அடுத்தவருடம் சமர்ப்பிப்பது உறுதியென பிரதிநிதியமைச்சரும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கையைச் சமர்பித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

2010ம் ஆண்டு எமக்கு பெரும் நம்பிக்கையூட்டும் ஆண்டாகும். முழு உலகமும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கித் தவித்தபோது நாம் நூற்றுக்கு நான்கு வீத பொருளாதார வளர்ச்சியை கடந்த வருடங்களில் ஈட்டிக் கொண்டுள் ளோம், அடுத்த வருடத்தில் நூற்றுக்கு ஏழு வீத பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் காட்டுவது உறுதியெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமர் ரட்னசிறி விக்கிரம நாயக்கவின் சார்பில் அமைச்சர் சரத் அமுனுகம அரசாங்கத்தின் இடைக்கால கண்கறிக்கையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். அமைச்சர் இது தொடர் பில் மேலும் தெரிவித்ததாவது, இடைக்கால கணக்கறிக்கையை அரசாங்கம் சபையில் சமர்ப்பிக்கும் இச்சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி யினர் இது நடைமுறைக்கு முரணானதென எதிர்ப்புத்தெரிவிக்கின்றனர்.

இதனை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். கடந்த காலங்களில் பல அரசாங்கங்கள் இது போன்ற இடைக்கால கணக்கறிக்கைகளை சபையில் சமர்ப்பித்து சபையின் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய நிதியமைச்சர் ரொனி டீ மெல் இதுபோன்ற கணக்கறிக்கையை சமர்ப்பித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் இது இடம்பெற்றுள்ளதென்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அரசாங்கம் சமர்ப்பிக்கும் இக்கணக்கறிக்கை க்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது, எனினும் இதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொள்ளமறுக்கிறது. இத்தகைய பாராளுமன்றத் தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளாத ஐ.தே.க. வை நாட்டு மக்கள் எப்படி எற்றுக் கொள்ளப்போகிறார்கள்? அடுத்த வருடம் ஏப்ரலில் நாம் புதிய பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்போம். எனினும், இச்சந்தர்ப்பத்தில் சபையிலிருந்து வெளியேறும் ஐ.தே.க.வினர் நிரந்தரமாக சபையை விட்டு வெளியேற நேரும். இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது தோல்வியைத் தழுவும் கட்சியே. இவர்கள் ஒருபோதும் வரவு செலவுத் திட்டத்துக்கு முகங் கொடுக்க முடியாதவர்கள். ரணில் விக்கிரமசிங்கவின் இச்செயலுக்கு அடுத்த தேர்தல் தீர்ப்பளிக்கும்.

கடந்த வருடங்களில் யுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு துறைகள் பாதிப்புற்றன. தற்போது விவசாயம், சுற்றுலாத்துறை, கைத்தொழில் போன்ற துறைகள் பெரும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தியானது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பினை வழங்கும்.

நாட்டில் சிறந்த முதலீடுகள் தற்போது இடம்பெறுகின்றன. அடுத்த வருடத்தில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு முதலீடாக வந்து சேரும். உலக நாடுகள் இலங்கை மீதான நம்பிக்கையை தற்போது அதிகரித்துள்ளன. இலங்கையுடன் பயமின்றி கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையில் சர்வதேச நாடுகள் உள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *