23

23

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

Varathakumar_and_EPDP(படம்: இறுதிநிமிட உடன்பாட்டு முயற்சியில் வி வரதகுமாரும் அமைச்சர் தேவானந்தா தனது கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசணையில் இருந்த போது.)

நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற தமிழ் – முஸ்லீம் கட்சிகளின் மாநாடு பெயரளவு இணக்கப்பாட்டுடன் முடிவடைந்தது. குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய பொது உடன்பாட்டை எட்ட இந்த மாநாடு தவறியுள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளுக்கான இலக்கு என்ன? அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் என்ன? என்ற விடயத்தில் பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அனைத்துக் கட்சிகளும் பொது உடன்பாட்டுக்கு வருகின்ற பட்சத்தில் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டு வெளியிடுவதாக இருந்த புரிந்துணர்வு உடன்பாடு அவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வரத்தவறியதால் ஒரு வேலைத்திட்டத்திற்கான ஆவணமாக்கப்பட்டது. பின்னர் அந்த வேலைத்திட்டத்திற்கான ஆவணத்திலும் இலக்குகளை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இம்மாநாட்டில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்ற இலக்கும் அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான விடயங்கள் என்ற விடயத்திலுமே பிரதான முரண்பாடு ஏற்பட்டது. இரண்டு தேசங்களைக் கொண்ட அரசு, இந்தியன் மொடல், சமஸ்டி என்ற விவாதங்கள் நடைபெற்றது.

EPDP_Discussion(படம்: மாநாட்டில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக எஸ் தவராஜா ஈபிடிபி கட்சி உறுப்பினர்களுக்கு விளக்குகின்றார்.)

அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது என்ற இலக்கை ஏற்றுக்கொள்வது பற்றிய மிகநீண்ட விவாதம் இடம்பெற்றது. அதில் ‘சிங்கள மக்களுக்குள்ள அதே உரிமை சம உரிமை தமிழ் மக்களுக்கும் உண்டு என அமைச்சர் தேவானந்தா கூறியதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஈபிடிபியின் கனடியப் பிரதிநிதி மித்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஈபிடிபியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘தென்பகுதி மக்களை அச்சப்படுகின்ற பதங்களை பாவிப்பது உசிதமானதல்ல’ என்றும் ‘இலங்கை அரசுடன் இணக்கப்பாடான அரசியலை மேற்கொள்வதன் மூலமே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும்’ எனவும் தெரிவித்தாக மித்திரன் சுட்டிக்காட்டினார். ‘ஐநா சாசனம் சொல்கின்ற சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கும் உரித்துடையது. அதே வரைவிலக்கணத்தை உடன்பாட்டுக்குரிய ஆவணத்தில் பதிவு செய்துகொளலாம் ஆனால் சுயநிர்ணய உரிமை என்ற பதத்திற்குப் பதிலான ஒரு பதத்தை பயன்படுத்த வேண்டும்’ என்றும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்ததாக மித்திரன் மேலும் தெரிவித்தார்.

இச்சொல்லாடல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் சுயநிர்ணய உரிமை என்ற பதத்தை உபயோகிக்க வேண்டும் எனவும் ஏனைய தமிழ்க் கட்சிகள் அச்சொல்லாடலை தவிர்க்க முடியும் என்ற நிலையிலும் நீண்ட முடிவற்ற விவாதத்தை நடத்தின. குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி இவ்விவாதத்தில் மிக இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்தது.

இது பற்றி தேசம் நெற்றுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் தேவானந்த ‘தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்று அவர்களை வாழ வைப்பதே எனது நோக்கம்’ என்றும் ‘இன்னுமொரு முள்ளிவாய்க்காலினுள் அந்த மக்களை தள்ளிவிடுகின்ற வார்த்தை ஜாலங்களுக்கு தன்னால் ஒரு போதும் உடன்பட முடியாது’ எனவும் தெரிவித்தார். இந்தப் பதத்தில் மட்டும் இவர்கள் தொங்கிக் தமிழ் தேசியத்தை உசுப்பிவிட்டு தங்கள் வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்கே அல்லாமல் மக்களுடைய நலனுக்காக அல்ல என்றே எண்ணத் தோண்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வை நோக்கிய பயணத்திற்கு 13வது திருத்தச்சட்டம் பிளஸ் பிளஸ் தான் ஆரம்பமாக அமையும் எனவும் தெரிவித்தார். தன்னையொரு யதார்த்தவாதி என்று தெரிவித்த அமைச்சர் தேவானந்தா சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டே தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Suresh_Premachandranஇதுவிடயமாக தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த ஈபிஆர்எல்எப் (சுரேஸ் அணி) சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்கள் அனாதரவான நிலையில் உள்ளனர் என்ற தோல்வியுணர்வுடன் அரசியல் தீர்வு விடயங்களை அணுகுபவர்கள் அரசிடம் பணிந்து செல்ல வேண்டும் என்றும் 13வது திருத்தச் சட்டம் போன்ற 20 வருடங்கள் பழமையான காலாவதியான விடயங்களுக்குச் செல்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்கள், உயர் பாதுகாப்பு வலயம், மக்களின் சுதந்திர நடமாட்டம் போன்ற விவாதிக்கப்பட அவசியமற்ற விடயங்களில் பெரும்பாலும் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் இலக்கு, அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் பற்றிய விடயமே மாநாட்டின் பெருமளவு நேரத்தை எடுத்திருந்தது. மாநாட்டின் இறுதி நாளின் இறுதி நிமிடங்கள் வரை இது தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் மாநாட்டு ஏற்பாட்டாளர்களதும் மாநாட்டில் கலந்துகொண்டவர்களதும் முகத்தைப் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் அறிக்கையைத் தயாரிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

தேசம்நெற் இல் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இம்மாநாடு மூடுமந்திரமாகவே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தேசம்நெற்றில் வெளியான தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன், கட்டுரை மாநாட்டின் முதல்நாள் அமர்விலேயே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இம்மாநாடு இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ரெஜீம் சேன்ஜ் க்கான தேர்தலையொட்டிய மாநாடு என அக்கட்டுரை குற்றம்சாட்டி இருந்தது. கட்டுரையின் பிரதிகள் மாநாட்டில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு மாநாடு பற்றிய முழுமையான விபரங்கள் கோரப்பட்டது. கோரிக்கை வலுவடையவே சுவிஸ் வெளிநாட்டு அமைச்சகமும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD அமைப்பும் இம்மாநாட்டின் செலவீனங்களை பொறுப்பேற்றதாகவும் இலங்கையில் மீள்கட்டுமானம், மீளுறவு, மீளுருவாக்கமும் தமிழ் அரசியல் தலைவர்களின் பாத்திரம் பற்றியும் கருத்துரை வழங்குவார்கள் எனவும் தமிழர் தகவல் நடுவத்தின் தலைவர் வி வரதகுமார் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலும் அங்கு வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சி நிரலில் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் சிரேஸ்ட்ட ஆலோசகரும் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜோன் பெக்கர் நிகழ்வுக்கு தலைமை தாங்குவதாகவும் வேறு வேறு தலைப்புகளில் ஆய்வுரை வழங்குவதாகவும் இருந்தது. பேராசிரியர் ஜோன் பக்கருடன் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் இணைப்பாளர் கிராக் கொலின், Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் அரசியல் மற்றும் சட்ட ஆலோசகர் ஸ்டென்கா மச்நிகோவா ஆகியோரும் வேறுவேறு விடயங்களில் விளக்க உரை வழங்குவதாக இருந்தது.

நீண்டகால பிரச்சினைகள் தொடர்பாக பொதுப் புரிந்தணர்வையும் விதிகளையும் நோக்கிச் செல்வது என்று ஆரம்பிக்கும் 2ம்நாள் நவம்பர் 22ம் திகதி நிகழ்வில் வருகின்ற தேர்தல் பற்றிய அடிப்படை உடன்பாடு பற்றி விவாதிக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வேறுவேறு தலைப்புகள் எடுக்கப்பட்டு இருந்த போதும் தேர்தல் விடயமாகப் பேசுவதற்கே கூடுதலான நேரம் – மூன்று மணிநேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

Dujglas_Devananda_and_John_Packer(படம்: மாநாட்டில் முரண்பட்டு ஜோன் பக்கரது தலைமையை நிராகரித்த அமைச்சர் மாநாட்டுக்கு வெளியே தன்னுடைய நிலைப்பாட்டை விளக்குகின்றார்.)

ஆனால் தேசம்நெற் கட்டுரை எழுப்பிய சந்தேகங்கள் தொடர்பான நீண்ட விவாதத்தை ஆரம்பித்த ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மாநாட்டின் திசையை மாற்றியமைத்தார். ஏற்பாட்டாளர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் கைவிடப்பட்டது. ‘சர்வதேச பொது ஸ்தாபனங்கள் தங்கள் காலனியாதிக்கத்தை புதிய வடிவத்தில் தொடர முயற்சிக்கின்றது’ என்று குற்றம்சாட்டிய அமைச்சர் தேவானந்தா மேற்படி ‘நிகழ்ச்சி நிரல் கைவிடப்பட வேண்டும்’ என்றும் ‘வந்திருக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகளே இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க வேண்டும்’ என்றும் கோரியதுடன் இம்மாநாட்டுக்கு தங்களை வரவழைத்த ‘தமிழர் தகவல் நடுவத்தின் தலைவர் வி வரதகுமார் அல்லது சட்டத்தரணி மனோகரனே தலைமை தாங்க வேண்டும்’ என்றும் வெள்ளைநிற மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கோரியதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஈபிடிபியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மனோ தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இம்மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள தேசம்நெற் சார்பில் இம்மாநாட்டுக்குச் சென்றிருந்த போதும் கட்சித் தலைவர்கள் தவிர்ந்த ஏனையோரை அனுமதிப்பதில்லை என்ற மாநாட்டு ஏற்பாட்டாளர்களது பொதுவிதியின்படி தேசம்நெற் க்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தேசம்நெற்றை பார்வையாளராக அனுமதிக்கும்படி கேட்டிருந்த போதும் வேறு சில கட்சித் தலைவர்(கள்) மறுப்புத் தெரிவிப்பதாகக் கூறிய சட்டத்தரணி மனோகரன் தேசம்நெற்றுக்கான அனுமதியை மறுத்தார். இருந்த போதும் மாநாட்டுக்கு வெளியே கட்சித் தலைவர்களுடன் உரையாடி அவர்களது கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடிந்தது.

Sambanthan_Rதேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்த ஈபிஆர்எல்எப் – சிறிதரன், மலையக மக்கள் முன்னணி – பொ சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணி – மனோ கணேசன், புளொட் – சித்தார்த்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் – ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லீம் கவுன்சில் – என் எம் அமீன், ரெலோ – ஹென்ரி மகேந்திரன், தமிழரசுக்கட்சி – ஆர் சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி – வி ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் (சுரேஸ் அணி) – சுரேஸ் பிரேமச்சந்திரன், கிழக்கு மாகாணசபை – எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா ஆகியோர் இம்மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் கலந்தரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டதாகவும் சில விடயங்களில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். விவாதங்கள் சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் ஆரோக்கியமாக அமைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அரசியல் தீர்வுக்கான இலக்கு, அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் பற்றிய கருத்தொற்றுமை ஏன் எற்படவில்லை? எனக் கேட்டபோதும் எல்லா விடயங்களிலும் ஓரிரு நாட்களிலேயே கருத்தொற்றுமை ஏற்பட்டு விடும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் பேசுகின்ற தமிழ் – முஸ்லீம் கட்சிகள் சந்தித்த இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்பதைச் சுட்டிக்காட்டிய கட்சிகளின் தலைவர்கள் இம்மாநாட்டை பயனுள்ள ஒன்றாகவே தாங்கள் பார்ப்பதாகத் தெரிவித்தனர். பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டவர்கள் முதற் தடவையாக சந்தித்து ஒருவருக்கொருவர் ‘ஹலோ’ சொல்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஒருவருக்கொருவர் ‘ஹலோ’ சொல்கின்ற நிலையை ஏற்படுத்த எத்தனை ஆயிரம் உயிர்களும் எத்தனை ஆயிரம் டொலர்களும் தேவைப்பட்டிருக்கின்றது என்ற முணுமுணுப்பு மாநாட்டுக்கு வெளியே ஏற்படத் தவறவில்லை.

இம்மாநாட்டுக்கு தமிழ் – முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களே அழைக்கப்பட்டு இருந்தனர். இச்சந்திப்பில் சிறிரொலோ கலந்துகொள்ளவில்லை அல்லது அழைக்கப்படவில்லை. பேரியல் அஸ்ரப் அழைக்கப்பட்டு இருந்த போதும் அவர் இம்மாநாட்டில் கலந்தகொள்ளவில்லை. சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் தமிழ் – முஸ்லீம் கட்சி உறுப்பினர்கள் அல்லாததால் அவர்கள் இம்மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாண வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெற இருந்ததால் நவம்பர் 21 இரவு நாடு திரும்பினார். இச்சந்திப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.

சுவிஸ்லாந்தில் உள்ள 26 கன்ரோண்களில் ஒன்றான துர்கா கன்ரோனில் இம்மாநாடு நடைபெற்றது. சூரிச் நகரிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இப்பகுதி தமிழ் மக்கள் பெரும்பாலும் இல்லாதவொரு கன்ரொன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுவாக குறைந்தது 3 மாதகால விசா வழங்கப்படுவதற்கான நடைமுறையைக் கொண்டுள்ள இந்நாட்டில் இம்மாநாட்டு க்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மாநாட்டுக் காலப்பகுதியில் தங்குவதற்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் மாநாடு முடிந்த மறுதினம் நாட்டுக்குச் செல்ல வலிறுயுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அகதிகளுக்கு நடமாடும் சுதந்திரம் ஐ.நா. செயலாளர் நாயகம் வரவேற்பு

ban-ki.jpgவவுனியாவில் இராணுவத்தின் காவலுடன் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு நடமாடும் சுதந்திரத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.

வட இலங்கையிலுள்ள முகாம்களில் தற்போது வசிக்கும் இடம்பெயர்ந்த மக்களின் நடமாடும் சுதந்திரத்தை அதிகரிப்பதென இலங்கை அரசு மேற்கொண்ட தீர்மானத்தை செயலாளர் நாயகம் வரவேற்றுள்ளார் என்று அவரின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளையே இலங்கை அதிகாரிகளுக்கு நீண்டகாலமாக ஐ.நா. வலியுறுத்தி வந்தது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்காக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ வவுனியாவில் நிருபர்களிடம் கூறியிருந்தார். ஜனவரி இறுதிவரை கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனவரி இறுதியில் சகலரும் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

பாதுகாப்பு வீரர்களுக்கான ‘ரணஜயபுர’ நேற்று ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

mahinda0.jpgஅநுராதபுர இப்பலோகமவில் அரசாங்கத்தால் பாதுகாப்புப் படை வீரர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள ‘ரணஜயபுர’ வீடமைப்புத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து படையினர்களிடம் கையளித்தார். 180 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணியில் சகல வசதிகளையும் கொண்ட 1509 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

புதிய வீடுகளுடன் மருத்துவ நிலையம், சிறுவர் பாடசாலை, வங்கி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அழகிய அமைதி சூழ்ந்த பிரதேசத்தில் இவ்வீடுகள் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்று முற்பகல் மேற்படி ‘ரண ஜயபுர’ வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படை வீரர்களின் பிள்ளைகளால் வரவேற்கப்பட்டார்.  முப்படைத் தளபதிகள் மற்றும் படை உயரதிகாரிகளுடன் உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சார்க் வர்த்தக தலைவர்களின் 3வது மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பம்

சார்க் வர்த்தக தலைவர்களது மூன்றாவது மாநாடு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது. தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு நடைபெறவிருக்கும் இம்மாநாட்டின் நேற்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கை வர்த்தக சம்மேளனமும் சார்க் வர்த்தக சம்மேளனமும் இணைந்து, ‘தெற்காசியாவில் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான பிராந்திய ஒத்துழைப்பு’ எனும் தொனிப் பொருளில் இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந் தது. இம்மாநாட்டில் தெற்காசிய பிராந்தியத்தின் காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

ஒரு நாட்டின் அபிவிருத்தி தனியே அந்த அரசாங்கத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. தனியார் துறையின் பங்களிப்பும் இதற்கு மிக அவசியம்.

எமது நாட்டினுடைய எதிர்காலம் எமது கைகளிலேயே உள்ளது. தெற்காசிய பிராந்தியத்¨தைச் சேர்ந்த நாம் கைகோர்த்து செயற்படுவதன் மூலமே எமது நாடுகளை வளம் மிக்கதாக ஆக்க முடியும்.  அதற்கு வர்த்தக சம்மேளனத்தின் ஒத்துழைப்பு அவசியம் தேவையென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தனது உரையில் குறிப்பிட்டார்.

வவுனியா வடக்கு மீள்குடியமர்த்தும் தினம் பற்றி இன்று முடிவெடுக்கப்படும்

260909srilanka.jpgவவுனியா வடக்கில் மீள்குடியேற்றத்துக்கு தயார் நிலையிலிருக்கும் ஆறு கிராமசேவகர் பிரிவுகளிலும் அனைத்து உட்கட்டமைப்பு பணிகளும் இவ்வாரத்துக்குள் பூர்த்தியாக்கப்படுமென வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

மோதல் காரணமாக வவுனியா வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப் போரில் முதற் கட்டமாக 300 குடும்பங்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் தினம் தொடர்பாக தமது தலைமையில் இன்று கூடி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

வவுனியா வடக்கிலுள்ள 20 கிராம சேவகர் பிரிவுகளில் 06 கிராம சேவகர் பிரிவுகள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நிலையில் மீள்குடி யேற்றத்துக்கு தயார் நிலையிலுள்ளன. இப்பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் துரித கதியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அனைத்துப் பணிகளும் இவ்வாரத்துக்குள் பூர்த்தியாக்கப்படுவதுடன் அனைத்து அலுவலகங்கள் மற்றும் உப அலுவலகங்களும் இவ்வாரம் முதல் செயற்படுமெனவும் அரசாங்க அதிபர் கூறினார்.

இதேவேளை மேற்படி ஆறு கிராமசேவகர் பிரிவுகளிலும் உள் வீதிகளை புனரமைப்பு செய்வதற்கென உலக வங்கி 25 மில்லியன் ரூபாவினை வழங்கியிருப்பதாகவும் புனரமைப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருதாகவும் அவர் மேலும் கூறினார். நிவாரணக் கிராமங்களில் நேற்றைய திகதிக்கு ஒரு இலட்சத்து 27 ஆயிரம் பேர் வரையிலானோரையே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளது.

இவர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா வடக்கைச் சேர்ந்தவர்கள். அனைவரும் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மீளக்குடியமர்த்தப் படவுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தோரை விரைவில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் வவுனியா வடக்கில் மீதமாகவுள்ள 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் கண்ணிவெடியகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

அதேவேளை நிவாரணக் கிராமத்திலுள்ள 800 பேர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கில் மீளக்குடியமர்த்தப்பட விருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். கடந்த வாரம் இங்கு 1100 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மீன்பிடித்துறை அபிவிருத்திக்கு 1165 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

fisherman.jpgவட மாகாணத்தில் மீன்பிடித்துறை அபிவிருத்திக்கான மத்திய கால திட்டத்திற்காக 1165 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்தது.

இதன்படி யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைதீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

வடக்கிலுள் மீன்பிடித்துறைமுகங்கள், இறங்குதுறைகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதோடு நாரா நிறுவன பிரதேச அலுவலகங்களும் அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டங்களும், சிறிய மீன் குஞ்சுகளை வளர்க்கும் நிலையங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசக்கல்வி

இலங்கை அகதிகளின் பிள்ளைகள் குறிப்பாக தமிழ் நாட்டிலுள்ள அகதிகளின் பிள்ளைகள் பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பை இலவசமாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு அனுமதியளிப்பதென அப்பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

அடுத்த கல்வியாண்டு தொடக்கம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகத்தில் இலவசக்கல்வி வழங்கப்படும்.விசேடமாக தொலைக்கல்வியூடாக கல்வியை முன்னெடுக்க விரும்புவோருக்கு இந்தவசதி மேற்கொள்ளப்படும்.அகதிகள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மட்டும் தீர்வாக அமையாது. இந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மேம்படுத்த சரியான கருவி கல்வியேயாகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம் கூறியதாக “ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் கடந்த வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது.அத்துடன், பி.எச்.டி. நெறியை பல்கலைக்கழகங்கள் அல்லது இணைக்கப்பட்ட கல்லூரிகளில் முன்னெடுக்க விரும்புவோருக்கு இடஒதுக்கீட்டை மாநிலமட்டத்தில் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2010 முதல் இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று பேராசிரியர் திருவாசகம் கூறியுள்ளார்.

மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கி வானை கடத்திய மர்ம மனிதர் வானுடன் கைது

arest.jpgவானில் பயணம் செய்தோரை மயக்கி வேனை அபகரித்துச் சென்ற மர்ம மனிதரை பொலிஸார் வேனுடன் கையும் மெய்யுமாக கைது செய்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்தார்.

இச்சம்பவம் கட்டுநாயக்க பகுதியில் வெள்ளி இடம்பெற்றுள்ளது. கிரிபத்கொடையில் வேனை வாடகைக்கு அமர்த்தி மூன்று நண்பர்கள் அதில் சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது ஹோட்டல் ஒன்றில் வைத்து இடை நடுவே இந்நண்பர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு மர்ம மனிதர் நீர்க்கொழும்பு செல்வோமெனக் கூறி அதேவேனில் பயணித்துள்ளார்.

வெலிசர பகுதியில் வைத்து அனைவரும் இந்த மர்ம மனிதர் வாங்கிக்கொடுத்த குளிர்பானத்தை அருந்தியதையடுத்து மயக்கமுற்றுள்ளனர். இதனையடுத்து அம்மர்ம நபர் 16 இலட்சம் ரூபா பெறு மதியான வானை கடத்திச் சென்றுள்ளார். சனிக்கிழமை கட்டுநாயக்க எவரிவத்தை பகுதியில் வைத்து வேனை குறித்த மர்ம மனிதனுடன் கைது செய்துள்ளனர்.

சமையல் எரிவாயு விற்பனையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய அரசிடம் இருந்து ரூ.1.7 பில்லியன்; ல்காஸ் நிறுவனம் கோருகிறது

சமையல் எரிவாயுவை சூத்திரத்தின் பிரகாரம் விற்பனை செய்வதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய அரசாங்கம் 1.7 பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என்று ஷெல்காஸ் நிறுவனம் விலை மாற்ற சூத்திர உடன்படிக்கையின் கீழ் மத்தியஸ்த நியாய சபைக்கு முறைப்பாடு செய்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக சட்ட மா அதிபரை தொடர்பு கொண்டு தேவையான அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கூறப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலையை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்று ஷெல் காஸ் நிறுவனம் கேட்கிறது. ஆனால் கணக்கிடுவதில் ஏற்படும் வித்தியாசங்கள் காரணமாக அவர்கள் கேட்கும் விலை ஒரு போதும் கிடைப்பதில்லை என்று வர்த்தக, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, கூட்டுறவு மற்றும் பாவனையாளர் அலுவல்களு க்கான அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார்.

சமையல் எரிவாயு விலை வருடத்துக்கு ஆறு முறை மாற்றத்துக்குள்ளாவதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விலை நிர்ணய குழு, சமையல் எரிவாயு நிறுவனங்கள் வழங்கும் தகவல்களுக்கேற்ப எரிவாயு விலையை தீர்மானிப்பதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சமையல் எரிவாயு விலையை தீர்மானிக்கும் விடயத்தில் அரசாங்கம் தலையிடுவது தொடர்பாக கடந்த காலத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டது. ஊடகமொன்று மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தவறான கருத்து காரணமாக அரசாங்கமே சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதாக மக்கள் நினைக்கின்றனர். சமையல் எரிவாயு விலையை கம்பனிகளின் தீர்மானத்துக்கு விடுவதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என்பதே அந்த ஊடகத்தின் நோக்கமாக இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

மைதான வாடகை ரூ. 50 லட்சம்

greenpark.jpgஇந்தியா, இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் மைதானத்துக்கு வாடகையாக 50 லட்ச ரூபாய் கொடுக்கப்பட உள்ளது.

உத்திரபிரதேச (உ.பி.,) கிரிக்கெட் சங்கத்துக்கு என சொந்தமாக கிரிக்கெட் மைதானம் இல்லை. இந்நிலையில் இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர், கிரீன் பார்க் மைதானத்தில் வரும் நவ., 24 முதல் 28 வரை நடக்க உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த ஆண்டு இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய ஒருநாள் போட்டிக்கு வாடகையாக ஒரு கோடி ரூபாய், உ.பி., கிரிக்கெட் சங்கம் மாநில அரசுக்கு கொடுத்து இருந்தது.

இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கு கொடுக்கப்பட உள்ள வாடகை குறித்து உ.பி., கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனர் ஜோதி பாஜ்பாய் கூறுகையில்,” கடந்த ஆண்டு இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிக்கு 13 லட்ச ரூபாய் தான் வாடகை கொடுத்து இருந்தோம். ஆனால் இம்முறை 50 லட்ச ரூபாய் வாடகை தரும் படி மாநில அரசு, எங்களை கேட்டுக்கொண்டுள்ளது. போட்டியை சிறப்பாக நடத்த, வேறு வழியின்றி அதை நாங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.