வவுனியாவில் இராணுவத்தின் காவலுடன் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு நடமாடும் சுதந்திரத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.
வட இலங்கையிலுள்ள முகாம்களில் தற்போது வசிக்கும் இடம்பெயர்ந்த மக்களின் நடமாடும் சுதந்திரத்தை அதிகரிப்பதென இலங்கை அரசு மேற்கொண்ட தீர்மானத்தை செயலாளர் நாயகம் வரவேற்றுள்ளார் என்று அவரின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளையே இலங்கை அதிகாரிகளுக்கு நீண்டகாலமாக ஐ.நா. வலியுறுத்தி வந்தது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்காக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ வவுனியாவில் நிருபர்களிடம் கூறியிருந்தார். ஜனவரி இறுதிவரை கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனவரி இறுதியில் சகலரும் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.