தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

Varathakumar_and_EPDP(படம்: இறுதிநிமிட உடன்பாட்டு முயற்சியில் வி வரதகுமாரும் அமைச்சர் தேவானந்தா தனது கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசணையில் இருந்த போது.)

நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற தமிழ் – முஸ்லீம் கட்சிகளின் மாநாடு பெயரளவு இணக்கப்பாட்டுடன் முடிவடைந்தது. குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய பொது உடன்பாட்டை எட்ட இந்த மாநாடு தவறியுள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளுக்கான இலக்கு என்ன? அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் என்ன? என்ற விடயத்தில் பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அனைத்துக் கட்சிகளும் பொது உடன்பாட்டுக்கு வருகின்ற பட்சத்தில் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டு வெளியிடுவதாக இருந்த புரிந்துணர்வு உடன்பாடு அவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வரத்தவறியதால் ஒரு வேலைத்திட்டத்திற்கான ஆவணமாக்கப்பட்டது. பின்னர் அந்த வேலைத்திட்டத்திற்கான ஆவணத்திலும் இலக்குகளை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இம்மாநாட்டில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்ற இலக்கும் அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான விடயங்கள் என்ற விடயத்திலுமே பிரதான முரண்பாடு ஏற்பட்டது. இரண்டு தேசங்களைக் கொண்ட அரசு, இந்தியன் மொடல், சமஸ்டி என்ற விவாதங்கள் நடைபெற்றது.

EPDP_Discussion(படம்: மாநாட்டில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக எஸ் தவராஜா ஈபிடிபி கட்சி உறுப்பினர்களுக்கு விளக்குகின்றார்.)

அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது என்ற இலக்கை ஏற்றுக்கொள்வது பற்றிய மிகநீண்ட விவாதம் இடம்பெற்றது. அதில் ‘சிங்கள மக்களுக்குள்ள அதே உரிமை சம உரிமை தமிழ் மக்களுக்கும் உண்டு என அமைச்சர் தேவானந்தா கூறியதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஈபிடிபியின் கனடியப் பிரதிநிதி மித்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஈபிடிபியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘தென்பகுதி மக்களை அச்சப்படுகின்ற பதங்களை பாவிப்பது உசிதமானதல்ல’ என்றும் ‘இலங்கை அரசுடன் இணக்கப்பாடான அரசியலை மேற்கொள்வதன் மூலமே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும்’ எனவும் தெரிவித்தாக மித்திரன் சுட்டிக்காட்டினார். ‘ஐநா சாசனம் சொல்கின்ற சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கும் உரித்துடையது. அதே வரைவிலக்கணத்தை உடன்பாட்டுக்குரிய ஆவணத்தில் பதிவு செய்துகொளலாம் ஆனால் சுயநிர்ணய உரிமை என்ற பதத்திற்குப் பதிலான ஒரு பதத்தை பயன்படுத்த வேண்டும்’ என்றும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்ததாக மித்திரன் மேலும் தெரிவித்தார்.

இச்சொல்லாடல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் சுயநிர்ணய உரிமை என்ற பதத்தை உபயோகிக்க வேண்டும் எனவும் ஏனைய தமிழ்க் கட்சிகள் அச்சொல்லாடலை தவிர்க்க முடியும் என்ற நிலையிலும் நீண்ட முடிவற்ற விவாதத்தை நடத்தின. குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி இவ்விவாதத்தில் மிக இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்தது.

இது பற்றி தேசம் நெற்றுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் தேவானந்த ‘தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்று அவர்களை வாழ வைப்பதே எனது நோக்கம்’ என்றும் ‘இன்னுமொரு முள்ளிவாய்க்காலினுள் அந்த மக்களை தள்ளிவிடுகின்ற வார்த்தை ஜாலங்களுக்கு தன்னால் ஒரு போதும் உடன்பட முடியாது’ எனவும் தெரிவித்தார். இந்தப் பதத்தில் மட்டும் இவர்கள் தொங்கிக் தமிழ் தேசியத்தை உசுப்பிவிட்டு தங்கள் வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்கே அல்லாமல் மக்களுடைய நலனுக்காக அல்ல என்றே எண்ணத் தோண்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வை நோக்கிய பயணத்திற்கு 13வது திருத்தச்சட்டம் பிளஸ் பிளஸ் தான் ஆரம்பமாக அமையும் எனவும் தெரிவித்தார். தன்னையொரு யதார்த்தவாதி என்று தெரிவித்த அமைச்சர் தேவானந்தா சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டே தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Suresh_Premachandranஇதுவிடயமாக தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த ஈபிஆர்எல்எப் (சுரேஸ் அணி) சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்கள் அனாதரவான நிலையில் உள்ளனர் என்ற தோல்வியுணர்வுடன் அரசியல் தீர்வு விடயங்களை அணுகுபவர்கள் அரசிடம் பணிந்து செல்ல வேண்டும் என்றும் 13வது திருத்தச் சட்டம் போன்ற 20 வருடங்கள் பழமையான காலாவதியான விடயங்களுக்குச் செல்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்கள், உயர் பாதுகாப்பு வலயம், மக்களின் சுதந்திர நடமாட்டம் போன்ற விவாதிக்கப்பட அவசியமற்ற விடயங்களில் பெரும்பாலும் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் இலக்கு, அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் பற்றிய விடயமே மாநாட்டின் பெருமளவு நேரத்தை எடுத்திருந்தது. மாநாட்டின் இறுதி நாளின் இறுதி நிமிடங்கள் வரை இது தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் மாநாட்டு ஏற்பாட்டாளர்களதும் மாநாட்டில் கலந்துகொண்டவர்களதும் முகத்தைப் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் அறிக்கையைத் தயாரிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

தேசம்நெற் இல் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இம்மாநாடு மூடுமந்திரமாகவே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தேசம்நெற்றில் வெளியான தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன், கட்டுரை மாநாட்டின் முதல்நாள் அமர்விலேயே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இம்மாநாடு இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ரெஜீம் சேன்ஜ் க்கான தேர்தலையொட்டிய மாநாடு என அக்கட்டுரை குற்றம்சாட்டி இருந்தது. கட்டுரையின் பிரதிகள் மாநாட்டில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு மாநாடு பற்றிய முழுமையான விபரங்கள் கோரப்பட்டது. கோரிக்கை வலுவடையவே சுவிஸ் வெளிநாட்டு அமைச்சகமும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD அமைப்பும் இம்மாநாட்டின் செலவீனங்களை பொறுப்பேற்றதாகவும் இலங்கையில் மீள்கட்டுமானம், மீளுறவு, மீளுருவாக்கமும் தமிழ் அரசியல் தலைவர்களின் பாத்திரம் பற்றியும் கருத்துரை வழங்குவார்கள் எனவும் தமிழர் தகவல் நடுவத்தின் தலைவர் வி வரதகுமார் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலும் அங்கு வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சி நிரலில் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் சிரேஸ்ட்ட ஆலோசகரும் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜோன் பெக்கர் நிகழ்வுக்கு தலைமை தாங்குவதாகவும் வேறு வேறு தலைப்புகளில் ஆய்வுரை வழங்குவதாகவும் இருந்தது. பேராசிரியர் ஜோன் பக்கருடன் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் இணைப்பாளர் கிராக் கொலின், Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் அரசியல் மற்றும் சட்ட ஆலோசகர் ஸ்டென்கா மச்நிகோவா ஆகியோரும் வேறுவேறு விடயங்களில் விளக்க உரை வழங்குவதாக இருந்தது.

நீண்டகால பிரச்சினைகள் தொடர்பாக பொதுப் புரிந்தணர்வையும் விதிகளையும் நோக்கிச் செல்வது என்று ஆரம்பிக்கும் 2ம்நாள் நவம்பர் 22ம் திகதி நிகழ்வில் வருகின்ற தேர்தல் பற்றிய அடிப்படை உடன்பாடு பற்றி விவாதிக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வேறுவேறு தலைப்புகள் எடுக்கப்பட்டு இருந்த போதும் தேர்தல் விடயமாகப் பேசுவதற்கே கூடுதலான நேரம் – மூன்று மணிநேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

Dujglas_Devananda_and_John_Packer(படம்: மாநாட்டில் முரண்பட்டு ஜோன் பக்கரது தலைமையை நிராகரித்த அமைச்சர் மாநாட்டுக்கு வெளியே தன்னுடைய நிலைப்பாட்டை விளக்குகின்றார்.)

ஆனால் தேசம்நெற் கட்டுரை எழுப்பிய சந்தேகங்கள் தொடர்பான நீண்ட விவாதத்தை ஆரம்பித்த ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மாநாட்டின் திசையை மாற்றியமைத்தார். ஏற்பாட்டாளர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் கைவிடப்பட்டது. ‘சர்வதேச பொது ஸ்தாபனங்கள் தங்கள் காலனியாதிக்கத்தை புதிய வடிவத்தில் தொடர முயற்சிக்கின்றது’ என்று குற்றம்சாட்டிய அமைச்சர் தேவானந்தா மேற்படி ‘நிகழ்ச்சி நிரல் கைவிடப்பட வேண்டும்’ என்றும் ‘வந்திருக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகளே இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க வேண்டும்’ என்றும் கோரியதுடன் இம்மாநாட்டுக்கு தங்களை வரவழைத்த ‘தமிழர் தகவல் நடுவத்தின் தலைவர் வி வரதகுமார் அல்லது சட்டத்தரணி மனோகரனே தலைமை தாங்க வேண்டும்’ என்றும் வெள்ளைநிற மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கோரியதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஈபிடிபியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மனோ தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இம்மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள தேசம்நெற் சார்பில் இம்மாநாட்டுக்குச் சென்றிருந்த போதும் கட்சித் தலைவர்கள் தவிர்ந்த ஏனையோரை அனுமதிப்பதில்லை என்ற மாநாட்டு ஏற்பாட்டாளர்களது பொதுவிதியின்படி தேசம்நெற் க்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தேசம்நெற்றை பார்வையாளராக அனுமதிக்கும்படி கேட்டிருந்த போதும் வேறு சில கட்சித் தலைவர்(கள்) மறுப்புத் தெரிவிப்பதாகக் கூறிய சட்டத்தரணி மனோகரன் தேசம்நெற்றுக்கான அனுமதியை மறுத்தார். இருந்த போதும் மாநாட்டுக்கு வெளியே கட்சித் தலைவர்களுடன் உரையாடி அவர்களது கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடிந்தது.

Sambanthan_Rதேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்த ஈபிஆர்எல்எப் – சிறிதரன், மலையக மக்கள் முன்னணி – பொ சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணி – மனோ கணேசன், புளொட் – சித்தார்த்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் – ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லீம் கவுன்சில் – என் எம் அமீன், ரெலோ – ஹென்ரி மகேந்திரன், தமிழரசுக்கட்சி – ஆர் சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி – வி ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் (சுரேஸ் அணி) – சுரேஸ் பிரேமச்சந்திரன், கிழக்கு மாகாணசபை – எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா ஆகியோர் இம்மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் கலந்தரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டதாகவும் சில விடயங்களில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். விவாதங்கள் சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் ஆரோக்கியமாக அமைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அரசியல் தீர்வுக்கான இலக்கு, அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் பற்றிய கருத்தொற்றுமை ஏன் எற்படவில்லை? எனக் கேட்டபோதும் எல்லா விடயங்களிலும் ஓரிரு நாட்களிலேயே கருத்தொற்றுமை ஏற்பட்டு விடும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் பேசுகின்ற தமிழ் – முஸ்லீம் கட்சிகள் சந்தித்த இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்பதைச் சுட்டிக்காட்டிய கட்சிகளின் தலைவர்கள் இம்மாநாட்டை பயனுள்ள ஒன்றாகவே தாங்கள் பார்ப்பதாகத் தெரிவித்தனர். பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டவர்கள் முதற் தடவையாக சந்தித்து ஒருவருக்கொருவர் ‘ஹலோ’ சொல்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஒருவருக்கொருவர் ‘ஹலோ’ சொல்கின்ற நிலையை ஏற்படுத்த எத்தனை ஆயிரம் உயிர்களும் எத்தனை ஆயிரம் டொலர்களும் தேவைப்பட்டிருக்கின்றது என்ற முணுமுணுப்பு மாநாட்டுக்கு வெளியே ஏற்படத் தவறவில்லை.

இம்மாநாட்டுக்கு தமிழ் – முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களே அழைக்கப்பட்டு இருந்தனர். இச்சந்திப்பில் சிறிரொலோ கலந்துகொள்ளவில்லை அல்லது அழைக்கப்படவில்லை. பேரியல் அஸ்ரப் அழைக்கப்பட்டு இருந்த போதும் அவர் இம்மாநாட்டில் கலந்தகொள்ளவில்லை. சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் தமிழ் – முஸ்லீம் கட்சி உறுப்பினர்கள் அல்லாததால் அவர்கள் இம்மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாண வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெற இருந்ததால் நவம்பர் 21 இரவு நாடு திரும்பினார். இச்சந்திப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.

சுவிஸ்லாந்தில் உள்ள 26 கன்ரோண்களில் ஒன்றான துர்கா கன்ரோனில் இம்மாநாடு நடைபெற்றது. சூரிச் நகரிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இப்பகுதி தமிழ் மக்கள் பெரும்பாலும் இல்லாதவொரு கன்ரொன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுவாக குறைந்தது 3 மாதகால விசா வழங்கப்படுவதற்கான நடைமுறையைக் கொண்டுள்ள இந்நாட்டில் இம்மாநாட்டு க்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மாநாட்டுக் காலப்பகுதியில் தங்குவதற்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் மாநாடு முடிந்த மறுதினம் நாட்டுக்குச் செல்ல வலிறுயுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Comments

  • சோழன்
    சோழன்

    சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரான சூரிச்சின் ஒதுக்குப் புறமான ஓர் இடத்தில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாடொன்றைத் தோற்றுவிப்பதற்கான கூட்டம் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டிருந்த முக்கியவிடயங்கள் குறித்து முடிவுகள் இன்றி முடிவுற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

    இந்த மாநாட்டை இந்தியாதான் ஏற்பாடு செய்துள்ளது என்று கொழும்பிலுள்ள சில அரசுக்குப் பயந்த ஊடகங்கள் தெரிவித்தாலும் உண்மை அதுவல்ல. இந்த மநாடு முழுக்க முழுக்க இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதுதான். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவுக்கு எதிரான ஒரு நடவடிக்கையே இலங்கை அரசால் சுவீசில நடத்தப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் முக்கிய முடிவாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தபின் தமிழர் கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பதுதான் இந்த மநாட்டின் முடிவு. அதாவது இந்த மாநாடு முடிந்த பின் தமிழர் கட்சிகள் அனைவரும் மகிந்த ராஜபக்சேவுக்கே எங்கள் ஆதரவு என்று அறிவிப்பை ஏற்படுத்தத்தான் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் சில கட்சிகள் உடன்படாததால் இந்த மாநாடு தோல்வியுற்றது.

    இந்த மாநாட்டின் முக்கிய சூத்திரக்காரர் இலங்கை அரசின் புலனாய்வுத் துறையின் தலைவர் கெந்தவிதாரணதான் என்பது உண்மை. கெந்தவிதாரணவின் ஏற்பாட்டில்தான் சுவீசின் வெள்ளைத்தோல் நபரான பீட்டர் பெக்கரர் (Pஏடெர் Pஅச்கெர்) என்பவரால் இந்த மாநாடு திறந்து வைக்கப்பட்டது. இந்த மாநாட்டின் செலவுக்கான காசை இலங்கை அரசாங்கமே கெந்தவிதாரணவின் மூலம் அளித்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

    சிறிலங்காவின் புலனாய்வுத் துறை தலைவர் கெந்தவிதாரணவின் கைக்கூலி கிருஸ்ணன் என்று அழைக்கப்படுகின்ற கிருஸ்ணப்பிள்ளை இந்த மாநாட்டின் முக்கியமானவராக கருதப்படுவதால் இந்த மாநாடு அரசு ஆதரவில் கெந்தவிதாரண ஏற்பாட்டில் நடந்ததாகும்.

    கிருஸ்ணப்பிள்ளை (கிருஸ்ணன்) யைப்பற்றி தீப்பொறி பல சந்தர்ப்பங்களில் கெந்தவிதாரணையின் கைக்கூலி என்பதை தெரியப்படுத்தி வந்துள்ளது. மேலும் இவர் இலங்கை அரசின் கைக்கூலி என்பது புலம்பெயர்ந்த தமிழர்கள் அறிந்த ஒன்றே. என்றாலும் அந்த கிருஸ்ணன் யாரென்று இதுவரை தெரியமல் இருந்தது. அந்த ஆவலை கிருஸ்ணன் இந்த மாநாட்டில் எடுத்த புகைப்படத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

    இந்த மாநாட்டின் மற்றொரு முக்கியமான நபர் எஸ்.வரதகுமார் என்பவராகும். இவர் கடந்த ஐந்து வருடங்களிற்கு முன்னாள் தீவிர விடுதலைப் புலிகளின் ஆதரவாளர். அவரையும் கெந்தவிதாரணையின் ஏற்பாட்டில் கிருஸ்ணன் அரச சார்பாரளரகாக இணையவைத்தார்.

    இவர்கள் இருவரோடும் இணைந்த மற்றொரு நபர் மனோகர் இவர்கள் எவரிடத்திலும் இந்த மாநாட்டை நடத்தக்கூடிய அளவுக்கு பொருளாதார வசதிகள் கிடையாது. இவர்கள் ஒரு விடயத்தில் இறங்குகிறார்கள் என்றால் அந்த நிகழ்ச்சியால் தங்களுக்கு ஆதாயம் இல்லாமல் இறங்கமாட்டார்கள். இவாகள் சாதாரணமாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி அதில் தேனீர் வழங்கப்பட்டாலும் அதற்கான காசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் வசூல் செய்யாமல் விட மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் பல இலட்சம் டொலர்கள் செலவு செய்து இந்த மாநாட்டை நடத்துவதற்கான பொருளாதாரத்தை எப்படிப் பெற்றார்கள் என்பதே இன்று புலன்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள சந்தேகம்.

    கிருஸ்ணப்பிள்ளை (கிருஸ்ணன்) தனது புகைப்படத்தை எந்த சந்தர்ப்பத்திலும் வெளியிட்டதில்லை. மற்றும் தனக்கு நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தனது வீட்டை காண்பிப்பதில்லை. என்றாலும் இந்த மாநாட்டின் மூலம் பல சலுகைகள் கிடைக்கும் என்பதற்காக மாநாட்டில் கலந்து கொண்டவர்களோடு தனது புகைப்படத்தையும் பதிய வைத்துள்ளார்.

    கிருஸ்ணன் ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத் தனத்தை தீப்பொறி பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஆதாரப்பூர்வமாக வெளியிடும். இந்த கிருஸ்ணனே இந்த மாநாட்டை நடத்துவதற்காக கெந்தவிதாரணவினால் ஏற்படுத்தப்பட்ட சூத்திரத்தாரி. அவரே தனது நன்மைக்காக தமிழர் தகவல் மையத்தை தேர்ந்தெடுத்து அவர்களையும் தன்னுடன் இணைத்துள்ளார் என்பதே தீப்பொறியின் கருத்து.

    எப்படியாயினும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை எப்படியாவது தமது பக்கம் இழுத்துவிட வேண்டும் என்ற கணக்கு கொஞ்சம் பொய்த்துவிட்டது என்பதே உண்மை.

    நன்றி தீப்பொறி

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று கதையளந்து மாட்டி விட்டது போல், சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்களே இந்த சந்திப்பை பின்னாலிருந்து வெளிநாட்டு வெள்ளைகளை களம் புகுத்தி, ஏதோ அவர்களே ஏற்பாடு செய்தது போல ஒரு மாயையை ஏற்படுத்தி தங்கள் எண்ணங்களைக் கச்சிதமாக களம் புகுத்த முனைந்தவர்கள் வேறு எவருமில்லை. நாடு கடந்த தமிழீழம் அமைக்கின்றோமென்று கதைவிட்டு களம் புகுந்துள்ள உருத்திரகுமாரன் குழுவினரே. புலிகளின் பல பில்லியன் பணத்தை வைத்து எல்லாரையும் விலைக்கு வாங்கி விடலாமென புலத்துப் புலிகள் கனவு காணத் தொடங்கி விட்டனர். இவர்களின் கனவுகள் கலைந்து விட்டதை இன்று வெளிவரவிருக்கும் கூட்டறிக்கைகயில் நீங்கள் காணலாம். இன்னும் தமிழர்களைக் காட்டி எப்படித் தமது அரசியல் வியாபாரங்களை நடத்தலாமென்று சிந்திக்கின்றார்களே தவிர, தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற எவரும் சிந்திக்க முன்வரவில்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘… கருத்தரங்கின் போது சிறு சலசலப்பு …’
    தேசம் நெற்

    ‘…எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று கதையளந்து….’
    தொப்பி நல்ல அளவாக இருக்கிறது என்கிறார்!!

    Reply
  • jalpani
    jalpani

    மூடின அறைக்குள் இருந்து கதைப்பார்களாம். பிறகு அறிக்கை விடுவார்களாம். தேசத்தில் நாங்கள் விழுந்து விழுந்து பின்னூட்டம் விடுவோமாம். போங்கப்பா எங்களுக்கு வேறு வேலைவெட்டி கிடையாதா?

    Reply
  • மேளம்
    மேளம்

    போற போக்கபார்த்தா கேள்விச் செவியன் செய்தியெல்லாம் தேசம் நெற் போடும்போல இருக்கு…. விடயத்துக்கு வருகிறேன்… “கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன்” ஊருக்குப்போய் இண்டையோட மூண்டு நாள். வெள்ளிக்கிழமை இரவு சூரிச்சில பிளேன் ஏறினவங்கள்…. வேணுமெண்டா பேர்ண்ல இருக்கிற துரையிட்ட கேட்டுப்பாருங்கோ… அடுத்தது… அருட்செல்வன் வி.யின் கவனத்திற்கு…. முதலின் நாடுகளின் தலைநகர் எது என்பதை தெரிந்து கொண்டு செய்தியாளராகச் செயற்படுங்கள். “சுவிற்ஸர்லாந்தின் தலைநகர் பேர்ண்” இப்பிடித்தான் வீரகேசரியில அதையும் இதையும் எழுதினவை எல்லாம் ஊடகவியலாளராக சுவிசுக்கு இறக்குமதியாகி கண்ணை மூடித்து புலிக்குப் பின்னால திரிஞ்கசு போட்டு இப்ப துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடுப்பட்டுத் திரியினம்.

    மேளம்

    Reply
  • mani
    mani

    ஜெயபாலன்!
    சூரிச் கருத்தரங்கின் குருப் போட்டோவில் ரி.ஐ.சி வரதகுமாரிற்கு பின்னணியில் இந்த கருத்தரங்குக்கான சூத்திரதாரி யார் என்று அம்பலமாகும். ஒவ்வொரு கட்சித்தலைவர்களும் இக் கருத்தரங்கின் சூத்திரதாரிகளும் நிற்கின்றனர். மனோகரனையும் வரதகுமாரையும் இதில் கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது கிருஸ்ணா தான். எனவே இனியாவது இதன் பின்னணியை வெள்ளிடை மலையாக ஒத்துக் கொள்ளுங்கள். இலங்கையரசின் மூலதனத்துடன் கம்ஸாவின் ஒத்துழைப்புடன் இலங்கையரசின் புலனாய்வு துறையின் (என்.ஐ.பி) இந்த மிக முக்கிய உறுப்பினரான கிருஸ்ணாவின் நெட் வேக்கில் இது நடந்துள்ளது. இதற்குப் பின்னும் இதற்கான காரணம் அவரை புரிந்தவர்க்கு புரியும். அவரின் திருவிளையாடல்களை மூன்று சகாப்தங்களைத் தாண்டியும் இன்றுவரை எம் போராட்டத்தையும் அதன் பின்னடைவுகளையும் உற்று நோக்குபவருக்கு தெரியும்.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    13வது சட்டத்திருத்திற்கும் மேலாக அதிகாரப்பகிர்வு தேவை என்று வலியுறுத்தல் -மனோ கணேசன்

    இலங்கையில் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் முகமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்ட கூட்டம் ஸ்விஸ் நாட்டின் ஜூரிச் நகரில் முடிவடைந்துள்ளது. இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு பரந்துபட்ட அளவில் அதிகாரப் பகிர்வு அளிக்க வழி செய்யும் வகையில் ஒன்றுபட்டு செயற்பட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இணங்கியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

    அரசியல் அமைப்பின் 13 ஆவது சட்ட திருத்தத்துக்கும் மேலாக அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்கிற கருத்திலும் ஒரு கருத்தொற்றுமை கூட்டத்தில் கலந்து கொண்டோரிடம் இருந்தது என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

    இவை தவிர நாட்டில் நிலவி வரும் மனித உரிமை மீறல்கள், மக்கள் காணாமல் போகும் சம்பவங்கள், தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவை குறித்தும் ஜூரிச் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

    அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க இயலவில்லை என்றும் மனோ கணேசன் பிபிசியின் சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    Reply
  • Nadchathiran chevinthian.
    Nadchathiran chevinthian.

    We have a long way to go. One summit cannot be a magical surgical strike nor a circuit breaker.(Please take into account, how the “advanced” and the “sophisticated” nations still struggling to agree on global warming right now) Suppose a common agenda is agreed by all the Tamil speaking parties – Can we execute the agenda in Sri Lanka right now? Please remember Sri Lanka right now is not European Union. Rule of the law has been in trouble in Sri Lanka and that applies to Sinhalese and Tamils and not just to the Tamils. Nationalism flavoured starategies will be counter productive to the Island of Sri Lanka. What I believe the organisers of this conference missed is that they failed to invite sinhalese institutions or sinhalese individuals who are ardent defenders of democracy and the rule of the law.

    However we should appreciate the fact that opposing Tamil speaking parties have gathered in the conference and agreed to disagree by their behaviour. A well beginning is half done.

    Reply
  • Saturn
    Saturn

    தமிழ் பேசும் கட்சிகளின் திசை மாறிய மகாநாடு. என்பது இக் கட்டுரையின் தலைப்பு. எனக்கு சில கேள்விகள்.
    1 என்ன திசையில் இந்த மகாநாடு சென்றது?
    2 என்ன திசைக்கு மாறியிருக்கின்றது?

    தமிழ் தேசிய கட்சிகள் எப்படி அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது தொடர்பான ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதை தவிர இந்த மகாநாட்டின் நோக்கம் இருந்ததா?

    யரர் முன்னணியில் இருந்தார்கள், யார் பின்னணியில் இருந்தார்கள், அவர்கள் வெள்ளையா கறுப்பா என்ற ஆய்வுகள் தற்போது இருக்கும் அரசாங்கத்துடன் அல்லது இனி வரும் அரசாங்கத்துடன் எப்படி உடன் படுவது என்பதை இல்லாமல் பண்ணுமா?

    இந்த மகாநாடில் புலி பின்கதவால் பங்கு கொண்டிருந்தால் அது இந்த நோக்கத்தை இல்லாமல் பண்ணுமா. அல்லது புலி ஒருபோதும் அரசுகளுடன் ஒத்துளைக்கவில்லையா?

    வெளிவந்த தகவல்களில் இருந்து டக்லஸ் தமிழ் தேசியத்தின் தலைவன் ஆனால் அதை வெளிப்படையாக காட்ட, சொல்ல விரும்பாத மாமனிதன். இந்த நிலை ஐரோப்பாவிற்கு வர முதலே இருக்கவில்லையா? சம்பந்தன், சித்தன், சங்கரி அரசுடன் ஒத்துழைப்பது தொடர்பாக டக்ளசிடம் இருந்து படிபதட்கு நிறைய – அப்ப நல்ல நிறைய இருக்கு – என்பது இரகசியமா

    தமிழ் மக்களின் தேசிய சுய நிர்ணயம் தொடர்பாக தேசம் நெட் இணை தளத்தின் நிலைப்பாடு என்ன?

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    செவ்விந்தியனின் கருத்து மிகவும் யதார்த்தமானதும் வரவேற்கப் படவேண்டியதும் ஆகும். நாம் இரகசியமாகச் செய்ய வேண்டிய விடயங்களை பொது நன்மை கருதி இரகசியமாகத் தான் செய்யவேண்டும். பத்திரிகைச் சுதந்திரம் என்ற பெயரில் அனைத்தையும் பகிரங்கப்படுத்துவதிலும் அவசரப்பட்டு ஊகங்களைக் கிளப்பி விடுவதிலும் தேசம்நெற்றும் தமிழ்நெற்றும் ஒரே வேலையைத்தான் செய்தன. எமது மக்களின் அவலநிலைக்கு அனைத்து அரசியல் தலைமைகளும் பொறுப்பெடுக்க வேண்டும். இவர்களிடம் மக்கள் நலனைவிட தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளே இன்றும் எஞ்சியுள்ளதால் தான் இவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் உள்ளது. இத்தகையவர்கள் மக்களின் தலைவர்களாக உலவும் வரை இலங்கைத் தமிழ் இனம் ஒரு சபிக்கப்பட்ட இனமே..!

    Reply
  • BC
    BC

    //எமது மக்களின் அவலநிலைக்கு அனைத்து அரசியல் தலைமைகளும் பொறுப்பெடுக்க வேண்டும்.//
    புலிகளினால் ஏற்பட்ட மக்களின் அவலநிலைக்கு புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் காரணம். மற்றைய அரசியல் தலைமைகளை குற்றம்சாட்ட முடியாது.

    Reply
  • Saturn
    Saturn

    தேசம்நெட், தமிழ்நெட் எழுதுவதை பத்திரிகை சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வது என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிகின்றேன்.

    பத்திரிகை சுதந்திரம் என்ன, எப்படி எழுதுவது என்பதை தீர்மானிக்கும் உரிமை எழுத்தாளனுக்கு மட்டும் தான் இருக்கின்றது என்பது தவிர வேறொன்றுமில்லை.

    மகிந்தவின் சாத்திரத்தை பத்திரிகையில் வெளியிட்டதற்காக சாத்திரியினை பிடித்து அடைக்கும் அரசியலை பாதுகாக்கும் பரம்பரியதிட்கும் பத்திரிகை சுதந்திரதிட்கும் ஒரு தொடர்புமில்லை

    அடுத்தது தமிழ்நெட், தேசம்நெட் இனைதளங்களுக்குள் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் தற்போதைக்கு எழுதுகின்றேன்.

    தேசம்நெட் இல் யாரும் என்னவும் எழுதலாம். கட்டுரையாளன், பின்னோடக்காரன் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது எழுதுவதற்கு. ஒருவரும் ஒன்றுக்கும் பொறுப்பில்லை. ஒரு Postmodern பத்திரிகை தர்மம். காகம் கறுபபு என்றும் எழுதலாம், வெள்ளை என்றும் எழுதலாம். கறுப்போ, வெள்ளையோ என்று இறுதியில் ஒருவருக்கும் தெரியாது.

    தமிழ்நெட் வெள்ளை காகம் தொடர்பாக மட்டும் தான் எழுதும். கறுப்புக் காகம் வெள்ளை யாக மாறி இருக்கின்றது என்று எழுதும் அனல் கறுப்புக் காகம் இல்லை என்று விவாதிக்கும்.

    வேறு வார்த்தைகளில் தமிழ்நெட் யாருடைய நலன்களை பிரதிநிதிப் படுத்துகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். தேசம்நெட் யாருடைய நலன்களை பிரதிநிதிப் படுத்துகின்றது?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று கதையளந்து மாட்டி விட்டது போல்…’
    ‘…. சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்களே இந்த சந்திப்பை பின்னாலிருந்து வெளிநாட்டு வெள்ளைகளை களம் புகுத்தி, ஏதோ அவர்களே ஏற்பாடு செய்தது போல ஒரு மாயையை ஏற்படுத்தி….’
    ‘…. தங்கள் எண்ணங்களைக் கச்சிதமாக களம் புகுத்த முனைந்தவர்கள் வேறு எவருமில்லை. நாடு கடந்த தமிழீழம் அமைக்கின்றோமென்று கதைவிட்டு களம் புகுந்துள்ள உருத்திரகுமாரன் குழுவினரே…’ ‘…. இவர்களின் கனவுகள் கலைந்து விட்டதை இன்று வெளிவரவிருக்கும் கூட்டறிக்கைகயில் நீங்கள் காணலாம். …’

    பார்த்திபன் மேற்சொன்ன கருத்துகளுக்கெல்லாம் வேர் கீழே உள்ள வசனத்தில் இருக்கிறது…

    ‘…ஆனால் தேசம்நெற் கட்டுரை எழுப்பிய சந்தேகங்கள் தொடர்பான நீண்ட விவாதத்தை ஆரம்பித்த ஈபினடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மாநாட்டின் திசையை மாற்றியமைத்தார். …’

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நட்சத்திரன் செவ்விந்தியன்..
    ‘…(Please take into account, how the “advanced” and the “sophisticated” nations still struggling to agree on global warming right now…

    அவர்கள் குளோபல் வோமிங் பற்றி இழுபடுகிறார்கள் என்பதனை அடக்குமுறையை நீக்க (பாதுகாக்க?) இழுபடுவதோடு ஒப்பிட்டு ‘மன்னித்தருளி’ இருக்கிறீர்கள். அதேபோல குளோபல் வோமிங் இல இழுபறிப்படும் அமெரிக்கா பூர்வீக குடிமக்களான செவ்விந்தியர்களுக்கு எதிரான அடக்குமுறை செய்தாலும் ஒப்பிடுவீர்கள் என நினைக்கிரேன்.

    Reply
  • vinotharan
    vinotharan

    புலிகளும் அன்ரன் பாலசிங்கமும் தமிழீழப் போராட்டம் நடத்தியது போல் பத்தரிகையாளர்களை சநத்தித்தது போல் தாமே தமிழர்க்கான எல்லா முடிவுகளையும் தனிமனித விருப்பக்காக எடுத்து செய்தே முள்ளிவாய்க்காலில் முடித்தனர்.

    இந்த கூட்டமும் வரதகுமாரும் கிருஷ்ணனும் அதே பாதையை தொடர்ந்து செய்யும் முயற்ச்சியேயாகும் எந்த முள்ளிவாய்ய்காலுக்கு கான் வெட்டுறீங்கள்

    உங்கள் நோக்கம் என்ன ? எப்ப சரி யாரக்காவது சொன்னீர்களா?

    Reply
  • lamba
    lamba

    சுரிச் மாநாட அடுத்த கட்டம் என்ன? சொல்லுவார்களா இந்த தகவல் நடுவம்

    Reply
  • palli
    palli

    //தேசம்நெட் இல் யாரும் என்னவும் எழுதலாம். கட்டுரையாளன், பின்னோடக்காரன் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது எழுதுவதற்கு. ஒருவரும் ஒன்றுக்கும் பொறுப்பில்லை. ஒரு Pஒச்ட்மொடெர்ன் பத்திரிகை தர்மம். காகம் கறுபபு என்றும் எழுதலாம், வெள்ளை என்றும் எழுதலாம். கறுப்போ, வெள்ளையோ என்று இறுதியில் ஒருவருக்கும் தெரியாது.//

    இதோ இவரின் அபிலாசையை போக்க ஒரு என்னோட்டம்;

    மகாநாடா?? மர்மநாடா??
    நம்பிக்கை உணர்வோடு வந்தார்கள்;
    நம்பிக்கை இல்லாமல் பேசினார்கள்;
    நம்பிக்கை இழந்து புறப்பட்டனர்;

    போகும் போது சிலர் முனுமுனுத்த வரிகள்;
    மாயவன்; வெற்றி மீதி வெற்றி வந்து என்னை சேரும்;;;
    வரதர்;என்னை சொல்லி குற்றமில்லை உன்னை ;;;;
    சம்பந்தர்; மயக்கமா கலக்கமா மனதிலே குளப்பமா.;;
    சங்கரியர்; நாக்கு முக்கா நாக்கு முக்கா மாடு செத்தா;;;
    ரவூப்; கறுப்புதான் எனக்கு பிடித்த கலரு அது கண்ணிரண்டும்;;
    தோழர்; மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா;;;
    பிரேமசந்திரன்;அழகான அந்த பனை மரம் அடிக்கடி நினைவில்;;
    சித்தாத்தர்; எங்கே நின்மதி எங்கே நின்மதி அங்கே ஓர் இடம் ;;;
    பிள்ளையான்; தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே;;;
    அமீன்; அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு;;
    சந்திர சேகரன்; எனோ எனோ பனி துளி பனி துளி தீ மேலே;;
    சுகு;சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை ;;;;
    புல்லா; அப்படி போடு போடு போடு அசத்தி போடு;;;
    மனோ கனேசன்; தீந்தனக்க தில்லானா தீந்தனக்க தில்லானா;;;
    ஆறுமுகம்; இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ;;;

    தேசம்;போனால் போகட்டும் போடா இந்த பூமியில்;;
    தேனி; வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்;;;
    ரி பி சி;நீங்க நல்லாய் இருக்கோனும் நாடு முன்னேற;;;

    பல்லி;; பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
    நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
    தங்க கரி முகத்து தூ மணியே நீ எனக்கு
    சங்க தமிழ் மூன்றும் தா;;;

    Reply
  • palli
    palli

    ரிபிசி யில் குனரத்தினாவின் பேட்டியையும் சூரிச் மகாநாட்டையும் கூட்டி பெருக்கி பாருங்கள் பல்லியின் முட்டாள்தனம் புரியும்;

    Reply
  • vaanan
    vaanan

    இந்த சுவிஸ் கருத்தரங்கிற்கு இந்தியாவில் தற்போது நிலைகொண்டிருக்கும் ஈ.என்.டி.எல்.எப் கட்சியையும் திரு.மனோகரன் மூலம் தூதனுப்பி அழைப்பு விடுத்ததாக தற்போது கூட்டஅழைப்பாளர் ஒருவரால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. ஆயினும் ஆரம்பத்திலிருந்தே கட்சியின் தலைவர் பரந்தன் ராஜன் இதை நிராகரித்ததாகவும் தெரிகின்றது. காரணம் இக் கூட்டத்திற்கான பின்னணியும் நிதி வரவும் நோக்கமும் பற்றி மனோகரனால் உண்மையான பதில் சொல்லமுடியாத நிலையில்- இவற்றின் உண்மைகளை இக்கூட்ட அமைப்பாளர்கள் மிக பூடகமாக வைத்திருந்த நிலையில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. தற்போது லண்டனில் சில மாதங்களாக அம்சா பொறுப்பிலிருக்கும் நிலையிலும் கிருஸ்ணனின் திருவிளையாடல்கள் முழுதையும் ஈ.என்.டி.எல்.எப். உம் ராஜனும் நன்கறிந்த நிலையில் தற்போது இந்த நிராகரிப்பிற்கான காரணம் தெளிவாகின்றது.

    இந்திய பின்னணியில் என்றும் தமது அரசியல் தளத்தை வைத்திருக்கும் ராஜன் இதில் பங்கேற்கவில்லை என்பதற்கு பின்னாலேயே இந்தியா இதில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லையென தெளிவாகின்றது. பிழையான பின்னணியில் இக் கூட்டம் கூட்டப்பட்டாலும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் 22 பேர் ஒரு தளத்தில் சந்தித்ததால் சில நன்மை நடந்திருக்கின்ற உண்மையை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்
    1)கருணா என்றும் தமிழ் மக்களின் பிரதிநிதியல்ல என்று இலங்கை அரசே முத்திரை குத்தியுள்ளது.
    2)தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையே தேவையில்லையென சொல்பவர்களின் சொந்த முகங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.
    3)கடந்த கால பல துர் சம்பவங்களால் ஆளையால் முகம் பார்க்க முடியாமல் முரண்பட்டிருந்த சில முகங்கள் நேரே நேரே பார்த்து புன்சிரிக்க-பேச தமது பிழைகளை தாம் சற்று நின்று நிதானித்து உணர இந்த களம் உதவியது.

    கிருஷ்ணாவும் அதன் பின்னணி இலங்கைப் புலனாய்வுத் துறையும்சேர்ந்து தமிழ் மக்களுக்கு வெட்டிய கிணற்றிலிருந்து சமாதானப் பூதமோ- ஒரு புரிந்துணர்வுப் பூதமோ புறப்பட்டால் எம் மக்களுக்கான எதிர்கால நம்பிக்கை ஒன்று எங்கோ மின்னலடிக்கின்றது. கெட்டவற்றையும் நல்லதாக்கும் எம் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையுணர்வு- கதிரைகளுக்கும் அப்பால் உரிமையை தேடி முன்னெடுக்கப்பட்டடால் அந்த மின்னல் விடிவெள்ளியாக நின்று வழிகாட்டும்.
    ஏதோ நீண்ட காலமாக இலங்கையரசிற்கும் -கடந்த சில வருடங்களாக வட-கிழக்கு பிரிப்பு உட்பட கருணா-பிள்ளையான் சேர்ப்பு- கோப்பு- பிரிப்பு-உடைப்பு என அத்தனைஉல்டா விளையாட்டுக்களையும் வெற்றிகரமாக இலங்கையரசிற்கு முடித்துக்கொடுத்து பல வெற்றிவாகை சூடிய கிரஸ்ணபரமாத்மா ஐயகோ இத்திட்டத்தில் சறுக்கிவிட்டாராம். இதுதான் “பொல்லைக் கொடுத்து அடிவாங்குவதென்பது” போலும். ஐயகோ தமிழ் தலைமைகளே கவனம்! மிக விரைவில் கிருஸ்ணபரமாத்மா புதிய வடிவத்தில் தனது மாயவலைகளை விரிக்க இப்பொழுதே தொடங்கி விட்டாராம். உஷார்…உஷார்?

    Reply
  • london boy
    london boy

    இந்தக் கூட்டத்திற்கு வெள்ளையனை தலைமை தாங்க விட பிளான் போட்டிருக்கினம். நோர்வேயிலை வெள்ளையனை தெரிவு செய்திருக்கினம். இதுகளெல்லாம் தற்செயலான நிகழ்வாகப் பார்க்க முடியாது. வெள்ளையர்களை வைத்துக்கொண்டு தமது சதிராட்டங்களைத் தொடரும் ஒரு யுத்தியாகத்தான் தெரிகிறது. TIC என்பது Tigers Information Centre என்று மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது. இப்பிடித்தான் தமக்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த BTF இப்ப நாறுது. அடுத்தது TIC போலுள்ளது.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    பண்டிதத்தனமாக நினைத்துக் கொண்டு மிகப் பாமரத்தனமான அரசியல் விமர்சனங்களை மேற்கொள்ளும் சில வித்துவான்கள் தமது சமுக அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக் கொள்வதை விடுத்து தமக்குப் பிடித்தவர்களைத் துதி பாடுவதையும் பிடிக்காதவர்கள் நாறப் போயினம் என்று ஜோசியம் சொல்வதிலுமே காலத்தைச் செலவிடுவது எமது இனத்தின் சாபக்கேடே. வெள்ளைக் காரர்கள் வரக்கூடாது என்பவர்கள் இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவி அன்னி பெசன்ட் (அம்மையார்) என்பதை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. ஊர்வலஙளில் பிரித்தானியக் கொடியை பயபக்க்தியுடன் புலம் பெயர் புண்ணியங்கள் ஏந்திச் செல்வதை எதிர்த்தோ கண்டித்தோ ஒரு வார்த்தைகூட அவர்களுக்குப் பேச வராது. அவுஸ்திரேலிய குடியுரிமை கிடைத்தவுடன், அவர்கள் அவுஸ்திரேலியத் தமிழர் ஆகி விடுகின்றனர். கூட்ட்த்தை ஏற்பாடு செய்தவர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை யென்றால் உடனடியாக தீவிர காலனிய எதிர்ப்பாளர்களாக பிலிம் காட்டவேண்டியது.. இன்று இலங்கை தீவில் தமிழ் பேசும் மக்களின் சரியான நிலையை புலம்பெயர் வித்துவாஙள் சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையில் “எனக்கும் விஷயம் தெரியும்.., இதயும் கொஞ்சம் கேளுங்கோ..” பாணியில் எழுதுகிறார்கள். தயவு செய்து உங்கள் மூளையைக் கொஞ்சம் கசக்கி நீங்கள் காப்பாற்ற விரும்பும் மக்களுக்காக கொஞ்சம் தீவிரமாகச் சிந்தியுங்கள்.

    Reply