இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் மைதானத்துக்கு வாடகையாக 50 லட்ச ரூபாய் கொடுக்கப்பட உள்ளது.
உத்திரபிரதேச (உ.பி.,) கிரிக்கெட் சங்கத்துக்கு என சொந்தமாக கிரிக்கெட் மைதானம் இல்லை. இந்நிலையில் இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர், கிரீன் பார்க் மைதானத்தில் வரும் நவ., 24 முதல் 28 வரை நடக்க உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த ஆண்டு இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய ஒருநாள் போட்டிக்கு வாடகையாக ஒரு கோடி ரூபாய், உ.பி., கிரிக்கெட் சங்கம் மாநில அரசுக்கு கொடுத்து இருந்தது.
இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கு கொடுக்கப்பட உள்ள வாடகை குறித்து உ.பி., கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனர் ஜோதி பாஜ்பாய் கூறுகையில்,” கடந்த ஆண்டு இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிக்கு 13 லட்ச ரூபாய் தான் வாடகை கொடுத்து இருந்தோம். ஆனால் இம்முறை 50 லட்ச ரூபாய் வாடகை தரும் படி மாநில அரசு, எங்களை கேட்டுக்கொண்டுள்ளது. போட்டியை சிறப்பாக நடத்த, வேறு வழியின்றி அதை நாங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.