தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா நிவாரணக் கிராம மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் 31.10.2009 இல் வெளியிடப்பட்டன. இம்முடிவுகளின்படி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 5413 மாணவர்களுள் 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மாணவர்கள் கூடிய புள்ளிகளாக 175 புள்ளிகளைப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
வட மாகாணத்தின் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக 2009 ஜுன் மாத புள்ளி விபரப்படி தரம் 05இல் கல்வி பயிலும் 4872 மாணவர்கள் வவுனியா நிவாரணக்கிராமங்களில் அகதிகளாக்கப்பட்டனர். இம்மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்திற் கொண்டு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்டமாக ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும் 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது. இத்திட்டம் ஒரு நிவாரணக் கிராமத்தை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல் வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து நிவாரணக் கிராமங்களையும் கருத்திற் கொண்டே செயற்படுத்தப்பட்டது.
வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்திருந்த மாணவர்கள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலம் பாடசாலை மண்ணையே மிதிக்காமலிருந்தனர். இந்த மாணவர்களை துரிதமாகப் பயிற்றுவிக்கும் வகையிலேயே சிந்தனைவட்டம் தேசம்நெற் கல்வி நிவாரண செயற்றிட்டம் அமைந்திருந்தது. எமது வழிகாட்டிப் புத்தகங்களையும், மாதிரி வினாத்தாள்களையும் நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவித்தமையினால் 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இத்திட்டத்தை ஆரம்பிக்கும்போது 300 மாணவர்கள் சித்தியடைந்தால் போதுமென்ற இலக்கில் தான் நாம் ஆரம்பித்தோம். நாம் எதிர்பார்த்ததை விட மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை எமக்கு மன மகிழ்வைத் தருகின்றது.
2009 ஆகஸ்ட்டில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 2 லட்சத்து 98,000 மாணவர்கள் தோற்றினர். இவர்களுள் 31,000 மாணவர்களே சித்தியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். 2009 ஒக்டோபர் 02ஆம் திகதி அகில இலங்கை ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் தமிழ்மொழி மூலம் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி பின்வருமாறு அமைந்திருந்தது. கொழும்பு / கம்பஹா / களுத்துறை / கண்டி / மாத்தளை/ காலி/ மாத்தறை/ குருணாகல்/ கேகாலை மாவட்டம் 141 புள்ளிகள். நுவரெலியா 137 வவுனியா – 136, அம்பாறை 139, திருகோணமலை – 138, புத்தளம் 137, அநுராதபுரம்138, பொலன்னறுவை 140, பதுளை 138, மொனராகலை 135, மன்னார் 139 இரத்தினபுரி 134, மட்டக்களப்பு 139
வன்னி நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல வழிகளிலும் பாதிக்கப் பட்டிருந்தமையினாலும் 6 மாதங்களுக்கு மேல் கல்வியை தொடராமல் இருந்தமையினாலும், பரீட்சை நடைபெறவிருந்த காலகட்டத்தில்கூட நிவாரணக் கிராமங்களினுள் வெள்ளப் பாதிப்புக்குட் பட்டிருந்தமையினாலும் நிவாரணக் கிராமங்களின் வெட்டுப்புள்ளி குறைக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இவற்றைக் கருத்திற் கொண்டே பரீட்சைத் திணைக்களம் நிவாரணக் கிராமங்களில் வசித்த மாணவர்களின் வெட்டுப்புள்ளியை 111ஆகக் குறைத்தது.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 196 மாணவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 267 மாணவர்களும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவர்களும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்களும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். இங்கு மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு வேறு வெட்டுப்புள்ளிகள் காணப்பட்ட போதிலும் கூட, இம்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணக் கிராமங்களில் வசித்த நிலையில் இவர்கள் நிவாரணக்கிராம மாணவர்களாகவே கருத்திற் கொள்ளப்பட்டு நிவாரணக் கிராமங்களுக்குரிய வெட்டுப்புள்ளியே இவர்களுக்கு சேர்க்கப்பட்டன.
இதன்படி 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் வவுனியா மாவட்டத்தில் ஆகக் கூடிய புள்ளியாக 135 புள்ளியையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 175 புள்ளியையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 175 புள்ளியையும் மன்னார் மாவட்டத்தில் 134 புள்ளியையும் யாழ். மாவட்டத்தில் 135 புள்ளியையும் பெற்று தலா ஒவ்வொரு மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
5413 மாணவர்களது பெறுபேறுகள் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள போதும் பெருந் தொகையானோர் யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கென அனுப்பப்பட்டுள்ளனர். எனவே இவர்களுடன் சென்றுள்ள பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை அவர்களது சொந்த மாவட்ட வலய கல்வி பணிப்பாளர்களூடாக கிடைக்க வழிவகை செய்யப்படும் என வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழ்மொழி மூலமாக யாழ். வட்டுக்கோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஸ்ரீகர்ஷன் 192 புள்ளிகளைப் பெற்று இலங்கையில் முதலாவது இடத்தை பிடித்தார். இந்த மாணவனும் சிந்தனைவட்டத்தால் வெளியிடப்பட்ட தரம் 5 மாதிரிவினாத்தாள்களையும் வழிகாட்டிப் புத்தகங்களையும் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழிமூலம் 196 புள்ளிகளைப் பெற்று அம்பாந்தோட்டை ருகுணு விஜயபா மகா வித்தியாலய மாணவன் கே. ஏ. பிரமோத் டில்ஷான் முதலாவது இடத்தையும் பிடித்திருந்தார்.
சாதாரண நிலையில் போட்டிப் பரீட்சையான புலமைப்பரிசிலுக்கு தோற்றும் மாணவர்களின் நிலையைவிட வன்னி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் நிலை மிகமிக பரிதாபகரமானது. பல்வேறுபட்ட மானசீகப் பிரச்சினைகள் மத்தியிலும் போதிய கல்வி போதனைகள் இன்றிய நிலையிலும் இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 507 மாணவர்கள் சித்தியடைந்திருப்பது பெருமைப்படக்கூடிய விடயமே.
இம்மாணவர்கள் அனைவருக்கும் தேசம்நெற், சிந்தனைவட்டம் இவற்றின் நிர்வாகத்தினரும் தேசம்நெற் வாசகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றனர். அதேநேரம், பல்வேறுபட்ட சிரமங்கள் மத்தியில் இம்மாணவர்களை வழிநடாத்திய நிவாரணக்கிராம ஆசிரியப் பெருந்தகைகள் என்றும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.