17

17

தமிழ் அமைப்புகளை கைப்பற்றும் பிரிஎப் இன் முயற்சி தோல்வி!!! : த ஜெயபாலன்

BTF_Bannerபிரிஎப் இன் பெட்டிசத்தால் கிங்ஸ்ரன் கவுன்சிலுக்கு 10000 பவுண்கள் செலவு!
பிரிஎப் அடித்த பெட்டிசத்திற்கு ஆதரவளிக்க பிரிஎப் உறுப்பினர்களே முன்வரவில்லை!!

(குறிப்பு: அண்மையில் பிரிஎப் பற்றி வெளியான செய்திகள் தொடர்பாக பிரிஎப் இன் கருத்தை அறித்து கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் : Letter_to_BTF )

ரொல்வேர்த் பெண்கள் பள்ளியில் இயங்கிவரும் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு எதிராக பிரிஎப் – பிரித்தானிய தமிழ் போறம் அடித்த பெட்டிசம் தள்ளுபடியானது. பிரிஎப் அடித்த பெட்டிசத்திற்கு ஆதரவளித்து சாட்சியமளிக்க பிரிஎப் உறுப்பினர்களே முன்வராததால் பெட்டிசம் தள்ளுபடியானது. கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலைக்கு இரண்டாம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட 12989 பவுண்களை வழங்க கவுன்சில் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

பிரித்தானிய பிரிஎப் தலைவர் நாதன் குமார் (நல்லைநாதன் சுகந்தகுமார்) கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியைப் பற்றிய குற்றச்சாட்டுக்களையும் தகவல்களையும் கிங்ஸ்ரன் எதிர்க்கட்சி ரொறி கவுன்சிலர் ஹவார்ட் ஜோன்ஸிடம் பெப்ரவரியில் இடம்பெற்ற நிதியுதவி அளிப்பது தொடர்பான கூட்டத்திற்கு முன்னதாக வழங்கி இருந்தார். ஆனால் ஒக்ரோபர் 20ல் ஸ்குறுட்னி பனலுக்கு முன்வந்து நின்ற பிரிஎப் தலைவர் நாதன் குமார் தான் வழங்கிய குற்றச்சாட்டுக்களும் தகவல்களும் இரண்டாம் நபரூடாகக் கிடைத்ததாகவும் அக்குற்றச்சாட்டுக்களை ஆதரிக்க யாரும் முன்வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Kinsston_Tamil_Schoolசுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9500 பவுண்களை (வரிச்சலுகையையும் உள்ளடக்கி 11 000 பவுண்) கிங்ஸ்ரன் பள்ளி அனுப்பி வைத்தது. கவுன்சில் வழங்கும் நிதியை சுனாமி நிவாரணத்திற்கு அனுப்பியதாக பிரிஎப் குற்றம்சாட்டி இருந்தது. சுனாமி நிவாரணத்திற்கு கவுன்சில் வழங்கும் நிதியை வழங்கியதால் தமிழ் பள்ளிக்கு நிதி அதிகம் வழங்கப்படுகின்றது என்பது குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் சுனாமிக்கு அனுப்பப்பட்ட நிதி கிங்ஸ்ரன் கவுன்சில் வழங்கிய நிதியல்ல. அது கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நண்பர்கள் வழங்கிய நிதி. 30 000 பவுண்கள் சேமிப்பில் உள்ளது என்றும் அதனை தங்களுக்கு ஒரு கட்டடம் வாங்குவதற்காக சேமிப்பில் வைத்திருந்ததாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் முன்னாள் கவனரும் தற்போதைய உறுப்பினருமான டொக்கடர் பகீரதன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். விசாரணைகளில் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் மீதான குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது.

இந்த விசாரணைகளுக்கு முன்னதாக கிங்ஸரன் கவுன்சில் மேற்கொண்ட விசாரணையிலும் குற்றாசாட்டுகள் அடிப்படையற்றவை என நிரூபிக்கப்பட்டதாக டொக்டர் பகீரதன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். ஆயினும் பிரிஎப் தொடர்ச்சியாக கவுன்சிலின் எதிர்க்கட்சியினூடாக அழுத்தம் கொடுத்து ஸ்குறுட்னி பனலினூடாக இந்த விசாரணையைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்விசாரணைகள் பற்றி கருத்து வெளியிட்ட கவுன்சிலர் ஹவாட் ஜோன்ஸ் பிரிஎப் தலைவர் நாதன் குமாரை தான் முதலில் சந்தித்த போது கேள்விப்பட்டவற்றின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது நாதன் குமார் சொல்வதன்படி அவரால் அவற்றை நிரூபிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆவணங்களைத் தந்தவர்கள் இது தங்களுடைய ஆவணம் அதற்கு தாங்கள் ஆதரவளிக்கின்றோம் என்று எவரும் முன்வரவில்லை எனவும் கவுன்சிலர் ஹவாட் ஜோன் தெரிவித்தார்.

பிரிஎப் வழங்கிய மேற்படி மொட்டைப் பெட்டிசத்தை விசாரிப்பதற்கு 173 மணித்தியாலங்கள் 10300 பவுண் பொதுப் பணம் செலவிடப்பட்டதாகவும் கிங்ஸ்ரன் கவுன்சில் கணக்கை கண்காணிக்கும் ஓடிட் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஓடிட் அலுவலகத்தின் உள்ளக இயக்குனர் ஜெரிமி கைற் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு நிதி உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் கேட்கப்பட்ட தொகையிலும் குறைவான நிதியுதவி போதுமானது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஓடிட்டர் அலுவலகம் சில பரிந்துரைகளையும் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு வழங்கி உள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் சார்பில் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியும் கிங்ஸ்ரன் கவுன்சிலும் நீண்ட காலமாக இணைந்து செயற்படுகின்றது என்று தெரிவித்த கிங்ஸ்ரன் கவுன்சிலர் பொப் ஸ்ரீட் கவுன்சில் வழங்கும் நிதியுதவி குறைக்கப்பட்டால் தமிழ் பள்ளி நிதிக் கஸ்டத்தை எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.

பிரிஎப் பெட்டிசத்தின் பின்னணி : 

தொண்ணூறுக்களின் ஆரம்ப காலத்தில் தங்களை தமிழ் மக்களின் ஏகதலைமையாக அறிவித்துச் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்ட தன்னார்வ அமைப்புகள் தமிழ் பள்ளிகள் ஆலயங்கள் என்பனவற்றின் நிர்வாகத்தில் இருந்த ஓட்டை உடைசலுகளுக்குள் புகுந்து தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்குலகில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமி நிறுவனங்களாக இயங்கிய அமைப்புகள் அந்தக் கட்டுப்பாட்டை தங்களுக்குள் வைத்திருந்தன. பிரித்தானியாவிலும் பிரித்தாகிய தமிழ் போறம் என்று பெயரளவில் இயங்கினாலும் பிரித்தானிய ரைகர் போறம் என்றளவிலேயே அதன் செயற்பாடுகள் அமைந்தது.

Surrey_Tamil_Schoolஅந்த வகையில் 1986ல் உருவாக்கப்பட்ட கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் நிர்வாகத்தில் இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் குடும்பத்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் அரசியல் சாராத பலரும் அப்பள்ளியின் நிர்வாகத்தில் உள்ளனர். அவர்கள் இலங்கை அரசியலை பிள்ளைகளின் கல்வியுடன் கலக்கத் தேவையில்லை என்கின்றனர். ஆனால் பள்ளியின் நிர்வாகத்தில் இருந்த பிரிஎப் உறுப்பினர்கள் சிலர் ஏனைய அமைப்புகள் போல் கிங்ஸ்ரன் பள்ளியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்தனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் கடந்த ஆண்டு யூன் 7ல் போட்டியாக மற்றுமொரு பள்ளியை ஆரம்பித்தனர். சறே தமிழ் பள்ளி என்ற பெயரில் இயங்கும் இப்பள்ளி கோம்பே ஆண்கள் பள்ளியில் செயற்படுகின்றது. விஜயகுமார், விமலதாசன், சிவானந்தராசா, டொக்டர் மகிதரன், டொக்டர் புவி ஆகியோரே இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர். ‘படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் – கிங்ஸ்ரன் பிள்ளைகளின் பெயரில் மோதல்’ என்ற தலைப்பில் லண்டன் குரலின் 24 இதழில் இதுபற்றிய விரிவான செய்தி வெளியானது.

தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர முடியாது போனதால் கிங்ஸ்ரன் பள்ளிக்கு பல வகையிலும் பிரிஎப் இல் உறுப்பினராக இருந்தவர்கள் நெருக்கடி வழங்கினர். மொட்டைத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. தங்கள் புதிய பாடசாலைக்கு மாணவர்களையும் பெற்றோரையும் கவர்ந்திழுக்கும் போட்டி ஒன்றும் அங்கு பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றது. இந்தப் பழிவாங்கலின் தொடர்ச்சியாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளி மீது பெட்டிசங்களும் அடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பிரிஎப் உறுப்பினர்கள் இருந்தனர் என்பதையும் அன்று லண்டன் குரலில் சுட்டிக்காட்டி இருந்தோம்.

Suren_Surendiranஇது தொடர்பாக பிரிஎப் இன் அப்போதைய தலைவர் சுரேன் சுரேந்திரனிடம் லண்டன் குரல் இதழ் 25க்காக ஒரு நேர்காணலைச் செய்திருந்தோம். அப்போது ‘பிரித்தானிய தமிழர் பேரவை, கோயில்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் நிர்வாகங்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாக  அண்மைக்காலமாக சில குற்றச்சாட்டுகள் உள்ளது. இவ்வாறான சம்பவங்கள் 1991ல் லண்டணில் இடம்பெற்றது. இவ்வாறான விசயங்களை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொள்கிறதா?’ எனக் கேட்ட போது ‘எனக்கு அந்த குற்றச்சாட்டுப் பற்றி தெரியாது. எங்கள் அமைப்பு நான் சொன்னமாதிரி, சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடக்கிற வன்முறைகள், அட்டூழியங்களை சர்வதேச ரீதியில வெளிக்கொண்டு வந்து சர்வதேச அழுத்தத்தை சிறிலங்கா அரசுக்கு எற்படுத்தவது தான் எங்களுடைய நோக்கம். குறிக்கோள். அவ்வளவு தான். வெல் டிபைன் கொன்ஸ்ரிரியூசன். தமிழ் ஸ்கூல் கோயில் எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.’ என்று பதிலளித்தார்.

அத்துடன் விட்டுவிடாமல் ‘கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலை, பிரித்தானிய தமிழர் பேரவை பாடசாலை நிர்வாகத்தில் தலையீடு செய்ததாக நேரடியாக குற்றம்சாட்டி உள்ளது.’ எனக் கேட்டபோது ‘நான் அப்படி ஒன்றும் கேள்விப்படவில்லை. ஆனால் நான் போய் நாளைக்கு ஒரு களவு செய்தால் அதை தமிழ் போறம் செய்தது என்று சொல்லேலாது என்ன. பிளவுகள் அதுகள் இதுகளுக்கு சும்மா தமிழ் போறம் காரணம் என்று சொல்றது எல்லாம் சில்லறைக் கதையல்.’ எனப் பதிலளித்தார்.

ஆனால் ஒக்ரோபர் 20ல் பிரிஎப் இன் இப்போதைய தலைவர் விசாரணைக் குழுவின் முன் தோன்றி மண்கவ்வியுள்ளார். பிரிஎப் நேரடியாக தன்னார்வ நிறுவனங்கள் தமிழ் பள்ளிகள் ஆலயங்களில் தலையீடு செய்வதும் தமது கட்டுப்பாட்டுக்குள் வராத அமைப்புகள் மீது தங்கள் உறுப்பினர்களை கொண்டு பெட்டிசம் அடிப்பதும் மொட்டைக்கடிதம் அடிப்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.

Seevaratnam_Nஇதே போன்றதொரு முயற்சி டொக்கடர் நித்தினானந்தனின் வெஸற் லண்டன் தமிழ் பாடசாலையில் சிவயோகம் சீவரத்தினம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியில் முடிவடைந்தது. சிவயோகம் சீவரத்தினம் ஆர் ஜெயதேவனின் ஈழபதீஸ்வரர் ஆலயத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆர் ஜெயதேவன் தடுத்து வைக்கபட்ட காலத்தில் சிவயோகத்தின் பலகையை மாட்டி சிலநாட்கள் ஆலயத்தை உரிமை கொண்டாடினார். அது தோல்வியில் முடியவே அக்ரன் கார் ரென்ரலின் இடத்தை பல மடங்கு விலை அதிகம் கொடுத்து (900 000 பவுண்) வாங்கி ஈழபதீஸ்வரருக்குப் போட்டியாக ஆலயம் கட்டத்திட்டமிட்டார். ஆனால் அப்பகுதி கவுன்சில் கோயில் கட்ட அனுமதி மறுத்துவிட்டதால் மீண்டும் மண் கவ்வினார்.

அண்மையில் டெய்லி மிரர் மற்றும் சண் பத்திரிகைகளில் வெளியான உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் உண்ணாவிரத காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டது பற்றிய செய்தியை ரிவைஓ உறுப்பினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிரிஎப் உறுப்பினர்களே கசியவிட்டதாகவும் உண்ணாவிரதத்தில் முன்னின்ற தமிழ் இளையோர் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

இவை தொடர்பான பிரிஎப் இன் நிலைப்பாட்டை அறிய பிரிஎப் உடன் தொடர்பு கொண்ட போது அதன் தவைவர் நாதன் குமார் அங்கிருக்கவில்லை. எமது தொலைபேசி இலக்கத்தை அவருக்கு வழங்குவதாக அலுவலக உதவியாளர் ஜனா தெரிவித்தார். நாதன் குமார் தொடர்பு மேற்கொள்ளாமையால் அவருக்கும் பிரிஎப் முக்கியஸ்தர் சிலருக்கும் எமது கேள்விகளை மின் அஞ்சலினூடாக அனுப்பி வைத்திருந்தோம் அவை எதற்கும் எமக்கு பதிலில்லை. அதனால் அக்கேள்விகளை தேசம்நெற் இணையத்தில் பிரசுரிக்கின்றோம். Letter_to_BTF அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் அவற்றினை லண்டன் குரலிலும் பிரசுரிப்போம்.

ரிஎன்ஏ வன்னிமுகாம் விஜயம் – முரண்பட்ட தகவல்கள்

வன்னி முகாம்களில் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது அரசு மீள்குடியேற்றும் விடயங்களில் அக்கறையுடன் ஈடுபட்டு வருகின்றது என ரிஎன்ஏ குழுவில் சென்ற ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்படுபவர்கள் பெரும்பாலும் மீண்டும் வருவதில்லை என மக்கள் தன்னிடம் முறையிட்டதாக பி அரியநேந்திரன் குளோபல் தமிழ் செய்திக்கு தெரிவித்து இருக்கின்றார். ஆனால் இது பற்றி என் சிறிகாந்த டெய்லி மிரருக்குத் தெரிவிக்கையில் புலிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் கூறியதாகக் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வன்னி முகாம்களுக்குச் சென்று திரும்பிய சில மணிநேரங்களுக்குள் வெளிவந்த செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் என் சிறிகாந்தா, பி அரியநேந்திரன், சிவநாதன் கிஸோர், விநோ நோதரலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், ஆர் எம் இமாம், தோமஸ் வில்லியம் தங்கத்துரை ஆகியோரே வன்னி முகாம்களுக்கு பயணித்திருந்தனர். இவர்கள் அரசினால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பியதாக குளொபல் தமிழ்செய்தி குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இது பற்றி பிபிசி தமிழோசையில் செவ்வி வழங்கிய செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு பிரிவுகளாக வன்னி முகாம்களுக்குச் செல்லவே திட்டமிட்டு இருந்ததாகவும் இரண்டாவது பிரிவு விரைவில் வன்னி செல்லும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் நாளை சுவிஸ்மாநாட்டுக்குச் செல்ல இருப்பதால் அவருடைய வயது காரணமாக அலைச்சலைத் தவிர்க்கும்படி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் உடனடியாகவே தங்கள் வீடுகளுக்கு செல்லும் தங்கள் விருப்பத்தை வெளியிட்டதாக என் சிறிகாந்தா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்தனர். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்ததாக செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.

அங்குள்ள மக்கள் சூழ்நிலையைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள என் சிறிகாந்தா அரச அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஒரு பகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டதால் முகாம்களில் இருந்த சுகாதார மற்றும் குடிநிர்ப் பிரச்சினைகள் சற்றுக் குறைந்துள்ளதை ரிஎன்ஏ குழு சுட்டிக்காட்டி இருந்தது.

முகாம்களில் மக்களின் நிலைமை தன்னை நெகிழ்ச்சி கொள்ளச் செய்தது. – அடைக்கலநாதன் : அவர்கள் மிகவும் திருப்தியான முறையில் உள்ளனர் – கிஷோர்

kishoor.jpgவவுனியா முகாம்களில் வாழும் மக்களின் நிலைமை தன்னை நெகிழ்ச்சி கொள்ளச் செய்ததாக அவர்களைச் சென்று பார்வையிட்டுத் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதாக பீ.பீ.ஸி தமிழோசை தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்க்ள் கொண்ட குழு ஒன்று இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று வவுனியாவில் உள்ள முகாம்கள் மற்றும் வன்னியில் மக்கள் சிலர் மீள்குடியேற்றப்பட்ட இடங்கள் ஆகியவற்றைச் சென்று பார்வையிட்டுத் திரும்பியது. அந்தக் குழுவில் இடம்பெற்ற செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், தமிழோசையிடம் பேசுகையில், அந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்துக்கு தாம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போதை மழை காரணமாக முகாம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆயினும், தமது உடனடி மீள்குடியேற்றத்தையே அந்த மக்கள் அவசரமாகக் கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த விஜயம் தொடர்பாக சிவநாதன் கிஷோர் எம். பியுடன் தினகரன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்ததாக பிரதான செய்தியில் குறிப்பிட்டிருந்தது. “நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறுகிய காலத்திற்குள் எமது மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து அவர்களை மீளக்குடியமர்த்தவும் செய்துள்ளது. நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும், மீளக் குடியமர்ந்துள்ள மக்களையும் நாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த மக்கள் மிகவும் திருப்தியான முறையில் உள்ளனர். அந்த மக்கள் மத்தியில் சந்தோஷத்தை காணக் கூடியதாக இருந்தது. மக்களின் சந்தோஷமே எமது திருப்தியாகும்.”

இதேவேளை மன்னார் கட்டுக்கரைக்குளம், மன்னார் பாலம் புனரமைப்பு வேலைத் திட்டம் நடைபெறும் இடங்களுக்கும் விஜயம் செய்ததாக வன்னி எம்.பி. சிவநாதன் கிஷோர் தெரிவித்திருந்தார்.

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் வன்னி சென்றடைந்த எம். பிக்களை வரவேற்ற வன்னி தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து எம். பிக்கள் செட்டிக் குளம், ஆனந்த குமாரசுவாமி, அருணாச்சலம் ஆகிய நிவாரண கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அடம்பன், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்த இவர்கள் மீளக் குடியேறிய மக்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டனர். இவர்களுடன் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, வட மாகாண ஆளுநர் உட்பட பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் கருங்கண்டல் ஆகிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்தனர். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வன்னியில் இடம் பெறும் மீள்குடியேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் நிலக் கண்ணி வெடி அகற்றல் இடம்பெறும் இடங்களையும் பார்வையிட இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 2010 ஆண்டு ஜனவரியுடன் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளவர்களின் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வரும் என படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஈழக்கொடியை மீண்டும் உயர்த்த எவருக்கேனும் இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி

041109ma.jpgஈழக் கொடியை வீழ்த்த உதவியவர்கள் மீண்டும் அதனை உயர்த்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். இவர்கள் வெளிநாடுகளில் ஈழக்கொடியினை உயர்த்த முற்படுவார்களேயானால் நாட்டு மக்கள் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பர் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

அரச காணிகளிலுள்ள விஹாரைகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அங்கு மேலும் பேசுகையில், இனத்துரோகிகளுக்கு வீரர்களை உருவாக்க முடியாது. தேசப்பற்று உள்ளோரால் மாத்திரமே அது முடியும். நாம் சரியான பாதையை வகுத்துவருகிறோம். எத்தகைய சவால்களை எதிர்கொள்ளவும் நாம் தயாராகவுள்ளோம் என்றார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

ஈழக் கொடியை வீழ்த்துவதற்கு எம்மோடு உறுதுணையாக பெளத்த மதகுருமார்களுடன் மேலும் பலர் இருந்தனர். அதற்குத் தலைமைத்துவம் வழங்கியும் செயற்பட்டனர். அவர்கள் எவருமே இந்த நாட்டில் ஈழக் கொடியைக் காண விரும்பமாட்டார்கள். எனினும் எவருக்காகவாவது உலகில் எங்காவது ஈழக்கொடி உயர்த்தப்படுமானால் அதற்கு இந்நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பது உறுதி, சர்வதேச சூழச்சிகள் வெற்றி பெறுவதற்கு உதவியாக இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு ஆயுள் மிகக் குறைவானது என்பது உறுதி.

எஸ். எம். எஸ். மூலம் ஜனாதிபதியாக முடியாமற்போனது போல இணையத்தளங்கள் மூலம் ஈழக் கொடியை உயர்த்த முற்படுவதும் முடியாத காரியம். அதற்கு இந்நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் இடமளிக்க மாட்டார்கள். எவராவது அவ்வாறு கனவு காண்பார்களானால் அது ஒருபோதும் பலிக்காது.

இனத் துரோகிகளால் வீரர்களை உருவாக்க முடியாது. வரலாற்றில் தொடர்ச்சியாக தேசப்பற்றாளர்களே நாட்டை நேசிக்கும் மனிதர்களை உருவாக்கியுள்ளனர். நாட்டிற்கான புதிய பாதையை நாம் வகுத்துள்ளோம். அன்று போலவே என்றும் பயமின்றி சவால்களை வெல்வோம் என ஜனாதிபதி அங்கு கூறினார்.

பெளத்த மத விஹாரைகள் கடந்த காலங்களில் சந்தித்த அவலங்கள் சம்பந்தமாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி; கிழக்கில் பெளத்த மதத்தவர்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியாதிருந்த காலகட்டத்தைக் குறிப்பிட்டதுடன், திருகோணமலையில் புத்தர் சிலை முட்கம்பிகளால் வளைக்கப்பட்டு அதனருகே பெளத்த மதத்தவர்கள் சென்று வழிபடமுடியாமலிருந்த சம்பவத்தையும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் பெளத்த தேரர்கள் கஷ்டமான வாழ்க்கையை அனுபவித்தனர். வெளியில் நடமாட முடியாதிருந்தனர். அதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கவில்லை. அரந்தலாவையில் பிக்குமார் கொலை செய்யப்பட்ட போதும், அவர்கள் அப்பிரதேசத்தைக் கைவிட்டு ஓடவில்லை. விஹாரைகளைப் பாதுகாத்தனர்.

இதனால் நாம் பெளத்த விஹாரைகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தோம். இப்போதும் சூழ்ச்சிகள் உள்ளன. எனினும் மீண்டும் இந்த நாட்டில் விஹாரைகள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்படும் யுகம் உருவாக இடமளிக்கப் போவதில்லை. இது எமது பொறுப்பு மட்டுமல்ல எமது உரிமையுமாகும்.

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் கைது

1996 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி கட்டிட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கொண்டவர் என்ற குற்றச்சாட்டின்  பேரில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றில் சமூகம் அளிக்காத நிலையிலேயே இவருக்கான தண்டனை முன்னர் விதிக்கப்பட்டிருந்தது.
 
மத்திய வங்கியின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்காக வெடிபொருள் நிரப்பிய லொறியை கொழும்பிற்கு கொண்டு வந்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு 200 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
 
இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர் தற்போது குற்றத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். செல்லத்தம்பி நவரட்னம் என்ற இவர், செட்டிக்குளம் பிரதேசத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோன்ஹோம்ஸ் இலங்கை வருகை

John_Holmes_UNஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) இலங்கை வருகிறார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் அவர் இன்று யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

இதன் போது அவர் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளதோடு வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் நலன் குறித்து நேரில் சென்று பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல்

ncet_elected.jpgநோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல்  நடைபெற்றது.  இலங்கைதீவில் இருந்து புலம் பெயர்ந்தாலும் தமிழீழ தனியரசுக்கான தேடலுடன் நோர்வேயில் வாழம் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட இலட்சியப் பணயத்தினை ஐனநாயக வழியில் மக்களின் பரந்த பங்களிப்புடன் உறுதியாக முன்னெடுத்தும் செல்லும் நோக்கில் இந்த மக்களவையானது உருவாக்கம் பெற்றுள்ளது.

தமிழீழ தனியரசு கோட்பாட்டை உறுதியாகவும் வெளிப்படையாகவும் வலியுறுத்தி தமிழ மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் நோர்வே முழுவதிலும் 16 வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டு நடைபெற்ற தேர்தலில் 2767 பேர் வாக்களித்துள்ளனர்.

தேசிய ரீதியாக போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் 5 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விபரங்கள் வருமாறு
1. பியோனார் மொக்ஸ்நெஸ்
2. பஞ்சகுலசிங்கம் கந்தையா
3. ஜெயசிறீ பாலசுப்பிரமணியம்
4. ஆதித்தன் குமாரசாமி
5. தர்மசீலன் தர்மலிங்கம்

பிராந்திய ரீதியாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் வருமாறு
வடக்கு பிராந்தியம்
1. றூபன் ஐயாத்துரை
தெற்கு தென்மேற்கு
1. றெஐி டேவிட்ராஐ்
மேற்கு பிராந்திரயம்
1. விஐயசங்கர் அசோகன்
மத்திய பிராந்தியம்
1. இராசகுமார் குமாரசாமி
கிழக்கு பிராந்தியம்
1. சிவகணேஸ் வடிவேலு
2. இராசேந்திரம் பொன்னுத்துரை
3. சிவராஐா வல்லிபுரம்
4. கண்ணன் நாகேந்திரம்
5. மேரி புளோரிடா யூடின் பிரான்சிஸ்
6. ராஐரட்ணம் வேலுப்பிள்ளை

மேற்படி தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் அனைவரும் நோர்வே ஈழத் தமிழர் அவையின் இரண்டு அவைகளில் ஒன்றான நோர்வே ஈழத் தமிழ் மக்கள் அவை(House of Eelam Tamils in Norway-HETN) என்ற அவையில் அங்கம் வகிப்பர்.
 

45 மாணவர்கள் திடீர் மயக்கம்

கட்டுவான பிரதேசத்தைச் சேர்ந்த 45 மாணவர்கள் நேற்று திடீரென உடல் உபாதைக்கு உள்ளாகி மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றுக்காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கட்டுவான அம்பகாஹேன மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே உடல் உபாதைக்கு உள்ளாகி மயங்கி விழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.