காரத்திகை 27 மாவீரர் நாள்! புலிகள் அமைப்பில் இருந்து தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த புலி வீரர்களை மட்டும் நினைவு கூரும் நாள்! தம் சுயநலம் பாராது பொது நலனுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த இந்த மனிதங்களை நினைவு கூர வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. இயக்க வேறுபாடுகளை மறந்து இன்னுயிர்களை தியாகம் செய்த இந்த மறவர்கள் காலா காலத்திற்கு வணங்கப்பட வேண்டியவர்கள். மறுக்கப்பட முடியாத உண்மை.
ஆனால் கடந்த மே மாத நிகழ்வுகள் அதன் பின்னான அரசியல் மாற்றங்கள், அதற்கு முன்னான விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் செயற்பாடுகள் அனைத்தும் இந்த மாவீரர்களின் வீர மரண நியாயத்தை ஒரு அநியாயமான மரணமாக மாற்றி விட்டது என்பது சகிக்க முடியாத உண்மை. இன்று இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களின் வெறுப்பை விடுதலைப் புலிகள் சம்பாதித்துள்ளனர். வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் மெல்ல மெல்ல புலிகளின் பாசிச போக்கை உணர ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் புலிகள் இயக்கத்தில் இணைந்த 99 வீதமான போராளிகள் தேச விடுதலை என்ற ஒரு நோக்கோடுதான் அந்த அமைப்பில் இணைந்தார்கள். பலர் பலவந்தமாக இணைக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த இந்த போராளிகள் அனைவரும் புலிகள் அமைப்பின் இருப்பை காக்கவே பலி கொடுக்கப்பட்டார்கள் என்ற உண்மையை இன்று நாம் வெளிப்படையாக காண முடிகிறது. முள்ளிவாய்கால் முற்றுகைக்கு முன் புலிகளின் பாரிய தாக்குதலை புதுக்குடியிருப்பில் இராணுவம் முறியடித்தததை நாம் அறிவோம். அந்த தாக்குதலில் புலிகளின் அதி சிறந்த பல தளபதிகள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான போராளிகள் அவர்களுடன் கொல்லப்பட்டார்கள். இவர்களை அனைவரும் கொல்லப்பட்டது தனி ஒரு மனிதனை காப்பாற்றவே! பிரபாகரன் என்ற ஒரு மனிதனை காக்க புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட 500 போராளிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பின்னர் பிரபாகரனிடம் சென்ற பொட்டு ‘நாங்கள் இங்கையிருந்தால் எல்லாரும் கொல்லப்படுவோம், உடைத்துக்கொண்டு வெளியேறுவோம்’ என்று கூற இந்த சமயத்திலும் பிரபாகரன் ‘இஞ்சை பாராடா பொட்டுவுக்கு மரண பயம் வந்திட்டது’ என்று அங்கு கூடியிருந்த சகபோராளிகளிடம் நக்கலடித்தார். இறந்த தளபதிகளின் பெயர்களை வெளியிட மறுத்ததுடன் ஏனைய போராளிகளை காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் எடுக்க அவர் முனையவில்லை. மாறாக மேலும் பல போராளிகளை பலி கொடுக்கவும் மக்களை ஆயிரக்கணக்கில் பலிக்கடாக்கள் ஆக்கி வெளிநாடுகளில் இருந்து ஒரு அனுதாப அலையை பெறவே முழுமையாக முயற்சித்தார். இதன் விளைவு மக்கள் கூடியிருந்த இடங்களில் இருந்து வலிந்து தாக்கி அந்த இடங்களை இராணுவத்தின் குறிகள் ஆக்குவது.
மக்களும் போராளிகளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதும் சரணடையவோ அல்லது தப்பி செல்லவோ பிரபாகரன் முயற்சிக்கவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் முற்றுகையில் தனது புத்திர செல்வம் காயமுற்றதும் பதைபதைத்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடேசன் மூலம் இராணுவத்திடம் உடனடியாக சரணடைய உத்தரவிட்டார். பிரபாகரனை ஒரு மிகமோசமான சுயநலவாதி என்பதை அன்றுதான் பல புலிப் போராளிகள் உணர்ந்தார்கள். ஏற்கனவே தலைமையை காப்பாற்ற இவ்வளவு அழிவு வேண்டுமா என பல போராளிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார்கள். இதன் உச்சக்கட்டம் பானுவை போட்டுத்தள்ள தலைவர் பிறப்பித்த உத்தரவு பல அதிர்வலைகளை புலிகள் மத்தியில் உருவாக்கியது.
இறுதிக் காலத்திலும் தனது பாசிச குணத்தை பிரபாகரன் விடவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியது. ஆரம்ப காலங்களில் மைக்கல் என்ற விடுதலை புலி உறுப்பினரை தனது சொந்த நலனுக்காக பாயில் வைத்து சுட்டுக்கொன்ற பிரபாகரன் இறுதியில் அதேவிதமாக தன் மரணத்தை தழுவினார். பிரபாகரன் மரணம் பற்றி பல விதமான கதைகள் வந்தாலும் நான் நம்பகரமாக கேள்வியுற்றது இவரின் மெய்பாதுகாலரே இவரை போட்டுத் தள்ளியதாக! இரவு நந்தி கடலை கடக்க முயற்சிசெய்து அது முடியாது போக சற்று ஓய்வெடுத்த பிரபாகரனை அவரின் மெய்பாதுகாவலர்கள் திட்டமிட்டு நெற்றிப்பொட்டில் சுட்டுவிட்டு நந்திக் கடலில் தூக்கி போட்ட பின் அந்த பாதுகாவலர்கள் பின்னர் இறந்தவர்கள் போல் பாசாங்கு செய்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த தகவல்களை வன்னியில் இருந்து தப்பி சென்ற புலிகளின் முக்கியமான ஒரு தளபதியின் துணைவியார் உறுதிப்படுத்தினார்.
தனது சொந்த நலனுக்காக தனது போராளிகளை மாவீரர்கள் ஆக்கிய பின்னர் அவர்களை வணங்கும் பிரபாகரன் தனது இயக்கத்தின் முதலாவது போராளி இறந்த தினத்தை மாவீரர் தினமாக பிரகடனம் செய்தார். இந்த மாவீரர் தினம் பின்னர் மாவீரர் வாரமாக ஒரு வாரம் அனுட்டிக்கப்பட்டு கார்திகை 27இல் உலகெங்கும் மாவீரர் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. தாயகத்தில் இந்த நாட்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடப்பட்டு வந்தாலும் புலம்பெயர் நாடுகளில் இது பணம் கறக்கும் சடங்காகவே மாற்றப்பட்டது. 2002 இற்கு பின்னர் புலிகளின் தொழில் நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கையில் பிரபாகரனின் கொள்கை விளக்க உரையை நேரடியாக ஒலிபரப்பும் ஒரு விழாவாக இது மாற்றப்பட்டது.
லண்டனில் நடைபெறும் மாவீரர் நிகழ்வில் வாசலில் ஒரு கார்திகை பூ ஐந்து பவுண்களுக்கு விற்பார்கள். பிறகு உள்ளே வரிசையாக கோயில் திருவிழா வியாபாரிகள் போல் உதவியாளர்கள் பலர் புலி விளம்பர பொருட்களை விற்பார்கள். இதில் புலி சின்ன கோப்பையிலிருந்து புலிச்சின்ன துவாய், புலிச்சின்ன குடை, போன்ற பொருட்களை மக்களிடம் திணிப்பதுடன் மறுபுறத்தில் கொத்துறொட்டி முதல் கொக்கோகோலாவை 3 மடங்கு விலையில் மக்களிடம் விற்பார்கள். ஆக இறந்த மறவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளையும் புலிகளின் தலைமை தனது இயக்கத்தை சந்தைப்படுத்தும் நாளாக மாற்றியது.
இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு ஐந்து மாதமாகிறது. புலிகளின் தலைவர் இருக்கிறார் இல்லை என்று முட்டாள் தனமான ஒரு விவாதத்துடன் இருக்கும் புலம்பெயர் புலி உறுப்பினர்கள் மீண்டும் கார்த்திகை 27ஐ விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். பாரிய செலவில் லண்டனில் ஒரு பெரிய மண்டபம் இந்த முறையும் இதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி திரட்டலுக்கு மாவீரர் தின ரிக்கற்றுகள் புலிகளின் லண்டன் உறுப்பினர்களால் தற்போது விற்கப்பட்டு வருகிறது. ரிக்கற் அனுமதி பத்திரமா அல்லது செலவிற்கான நன்கொடையா என்று தெரியவில்லை.
வன்னியில் தம் வாழ்விடங்களில் இருந்து மந்தைகள் போல் மிரட்டி தமது பாதுகாப்பிற்காக பிரபாகரானல் கடத்திச் செல்லப்பட்ட மக்கள் கூட்டம் இன்று அரச தடுப்பு முகாம்களில் அவல வாழ்வை எதிர் கொள்ளும் இந்த நேரத்திலும் இந்த புலிகள் மாவீரர் தினத்தை விமர்சையாக கொண்டாட மக்களிடம் ரிக்கற்றுகளை விற்பது மிகவும் கேவலமானது! இந்த புலம்பெயர் புலிகள் வன்னி இறுதி யுத்தத்திற்காக எனக்கு தெரிந்த பல நண்பர்களிடம் கெஞ்சி கூத்தாடி பின்னர் மிரட்டி கடந்த மே மாதம் கூட ஆயிரக்கணக்கான பவுன்ஸை புடுங்கினார்கள். இந்த காசு அங்கு போய் சேர முன்பே தலைவர் போய்ச் சேர்ந்து விட்டார். காசை கமுக்காமாக அடித்த புலிப் பிரதிநிதிகள் இப்ப தலைமறைவு! ஆனால் இப்ப புதிதாக சில முகங்கள் மாவீரர் தின நிதிப்புடுங்கலுக்காக புலம்பெயர் புலித் தலைமையினால் வீடுகள்தோறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் மக்கள் மௌனமாக பார்த்துக்கொண்டு பணத்தை மீண்டும் இந்த பினாமிகளிடம் கையளிப்பது வன்னியில் தடுப்பு முகாம்களில் இருக்கும் அனைத்து மக்களிற்கும் செய்யும் மிக மோசமான துரோகம்! இதை விட மிக மேசமான துரோகம் காரத்திகை 27ஐ மாவீரர் தினத்தை விமர்சையாக கொண்டாடுவது!
மாவீர்கள் என்றால் யார்? வணங்கப்பட வேண்டியவர்கள் யார்? – கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (2) : வாசு