சவூதி அரேபியாவின் கந்தகார் பாலத்துக்குக் கீழே தஞ்சமடைந்துள்ள இலங்கையர் தொடர்பாக பிரதி வெளி விவகார அமைச்சர் ஹுசைன் பைலா நேற்று ஜித்தாவிலுள்ள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோரும் இங்கு சென்றுள்ளனர். இதேவேளை அங்கு தஞ்சமடைந்துள்ள இலங்கையருக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தங்கியிருப்பதற்காக இரண்டு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும் ஜித்தா செய்திகள் தெரிவிக்கின்றன.
பாலத்திற்குக் கீழ் தஞ்ச மடைந்திருப்பவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. என்றாலும் சவூதி அரேபியாவில் ஹஜ் விடுமுறையையிட்டு எதிர்வரும் 2ம் திகதிக்குப் பின்னரே இதற்கான நடவடிக்கைகள் சாத்தியமாகுமென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.