நிவாரணக் கிராமங்களிலிருக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதித்துள்ளதையும் தடைகள் நீக்கப்பட்டுள்ளதையும் அகில இலங்கை இந்து மாமன்றம் வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்களை மீள் குடியேற்றுவதில் அயராது உழைத்து வரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுக்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்களது வேண்டுகோளையேற்று இந்து மத குருமாரையும், முதியவர்களையும் விடுவித்தீர்கள், அதற்கும் எங்களது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரம், ஜனாதிபதி அவர்களே, பொதுமக்கள் பாவனைக்காக ஏ-9 வீதியைத் திறப்பதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கையை நாம் வர வேற்பதோடு நன்றிகளைத் தெரி வித்துக்கொள்கிறோம். அதேநேரம், நிவாரணக் கிராமங்களில் நிவாரணத் திட்டங்களுக்கு உதவிய முகவர் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக நீங்களும், உங்களது அரசாங்கமும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எங்களது ஒத்துழைப்பு தொடருமென்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.