கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென கடும்காற்று வீசியது. இக் கடும் காற்று காரணமாக களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இஹல வெல்கம கிராம சேகவர் பிரிவில் நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்ததுடன் 90 வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் களுத்துறை மாவட்ட இணைப்பாளர் மேஜர் சஞ்சீவ சமரநாயக்கா கூறினார்.
இதேவேளை பாலிந்த நுவர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பதுரலிய கெலின்கந்த வீதியில் மக்கிலிஎல்ல என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு மண்சரிவு ஏற்பட்டதாகவும் அப் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக பல இடங்களில் உயர்ந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சில பிரதேசங்களுக்கான மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கொழும்பு மாவட்ட இணைப்பாளர் எச். பி. பத்திரன கூறினார்.
கொழும்பு – 7, மலலசேகர மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றின் மீது மரக் கிளை முறிந்து விழுந்ததால் கார் சேதமடைந்துள்ளது. வீதிகளுக்கு குறுக்காக விழுந்திருந்த மரங்களும், மரக்கிளைகளும் தீயணைக்கும் படையினரதும், மாநகர சபை ஊழியர்களினதும் உதவியுடன் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
இதேநேரம், இரத்தினபுரி மாவட்டத்தின் ஒபநாயக்கா பிரதேச செயலகத்திலுள்ள மீகஹவெல கிராம சேவவகர் பிரிவிலிருக்கும் ஹேன்யாய கிராமத்தில் வீட்டுத் திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவரொருவர் மின்னல் தாக்கி நேற்று முன்தினம் உயிரிழந்தாரென இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினண்ட் கேர்னல் எஸ். எம். பி. பி. அபேரத்ன கூறினார்.
தற்போதைய இடைப் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும். அது இடி, மின்னலுடன் கூடிய மழை வீழ்ச்சியாகவே இருக்கும். அதனால் இடி, மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என வானிலை அவதான நிலைய வானிகையாளர் பிரீத்திகா ஜயகொடி கூறினார்.