இந்தோனேசியாவின் ஜவாத் தீவின் மேர் துறைமுகக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகு அகதிகளின் அவலம் 8வது வாரமாகத் தொடர்கிறது. இந்தப் படகு அகதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்ட சோசலிஸ்ட் கட்சியின் தேசிய ஒழுங்கமைப்பாளர் அன்ரொனி மைன் 40 முதல் 50 பேர் வரை மட்டுமே பயணிக்கக் கூடிய 30 மீற்றர் நிளமான மரப்படகில் 260 பேர் வரை அடைபட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கப்பலில் உள்ள ஒவ்வவொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த அன்ரொனி மைன் வயிற்றோட்டம், மலேரியா, போன்றவற்றால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் டயபிரிக்ஸ் போன்ற நீண்ட கால நோயுடைய நோயாளிகளும் அங்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். Eyewitness report from refugee boat in Merak -Anthony Main
இதற்கிடையே ஓசானிக் வைக்கிங் கப்பலில் இருந்து தஞ்சம் கோரிய தமிழர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அவுஸ்திரேலிய அரச அதிகாரிகளின் உறுதி மொழிக்கு இணங்கித் தரையை அடைந்தனர். தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நான்கு முதல் 12 வாரங்களில் அவர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். நவம்பர் 12ல் 22 பேரைக் கொண்ட ஒரு பகுதியினரும் ஏனைய 56 பேரும் நவம்பர் 18லும் தரையிறங்கினர்.
மேர்க் கடற்பரப்பில் ஒரு சிறிய கப்பலில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ளவர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. கப்பலில் இருந்து வெளியேற விரும்புபவர்களுக்கும் கப்பலில் தங்கள் போராட்டத்தைத் தொடர விரும்புகிறவர்களுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டு அது சிறு மோதலையும் ஏற்படுத்தியதாக இவ்வகதிகளுக்கு உதவியளிக்கும் மேற்கத்தைய உதவி நிறுவனத்தின் சிரேஸ்ட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் ஒரு இளைஞர் காயப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து 15 பேர் படகில் இருந்து தரையிறங்கியதாகவும் தெரியவருகின்றது. படகில் உள்ள அத்தனை அகதிகளும் தரையிறங்கிய பின்னரேயே அவர்களது தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலிக்க் ஐநா அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. இம்முடிவு அங்கு இரு தரப்பினருக்கும் இடையேயான பதட்டத்தை மேலும் தூண்டியுள்ளது.
மேலும் கிறிஸ்மஸ் தீவில் நெருக்கமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்கான் – தமிழ் அகதிகளிடேயே நவம்பர் 23ல் மோதல் வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 10 பேர் அப்பகுதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் 37 பேருக்கு அங்கேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாண்டு ஒக்ரொபர் வரை 12 544 அப்கானியர்களுக்கு வீசா வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இலைகையருக்கு 21 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு இருந்தது. இதுவே மோதலுக்கான காரணமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் தடுப்பு முகாமில் உள்ள குறைந்தபட்ச வசதிகளைப் பயன்படுத்துவதில் உள்ள நெருக்கடியும் இம்மோதலுக்கு வழிவகுத்தள்ளது.
விலங்குகளை வளர்ப்பதற்கே அவற்றிற்கான வாழ்விடத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அவுஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகள் அகதிகள் என்று வரும்போது எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அவர்களுடைய மனித உரிமைகள் கோசமும் தங்களுடைய தேவையைப் பொறுத்தே அமைகின்றது.
50 பேர் கொண்ட மற்றுமோர் படகு நவம்பர் 20ல் வழிமறிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. அதே தினம் அங்குள்ள தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலித்து 69 பேருக்கு நிரந்தர வீசா வழங்கி அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிற்குக் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 46 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு:
ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்
மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!