ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, விடுதலைப் புலிகளின் பொங்கு தமிழ் நிகழ்வில் மேடையேறிய தேசத்துரோகிகளான மனோ கணேசன், ரவூப்ஹக்கீம் ஆகியோருடனும் தேசத்தைக் காட்டிக்கொடுத்த ரணில், மங்கள சமரவீரவுடனும் ஜெனரல் சரத் பொன்சேகா இணைந்து கொள்வது இன்னொரு துரோகச் செயலுக்காகவா எனவும் கேட்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாடு ஈட்டிய யுத்த வெற்றியை ஜெனரல் சரத் பொன்சேகா காட்டிக்கொடுக்க முற்படுவதாகவும் விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு சுமத்தினார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார்.
ஜே.வி.பி.தலைவர் ரோஹன விஜேவீரவை கொலை செய்தவர்களில் ஒருவராக காணப்படும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருடன் ஜே.வி.பி.யினர் ஒரே மேடையில் தோன்றி மக்கள்முன் செல்லப்போகின்றனர். இவர்களுக்கு வெட்கம், மானம், ரோசம் என்பன கிடையாதா எனக் கேட்கவிரும்புகின்றேன்.
ஜே.வி.பி.யின் நோக்கமென்ன, ஒரு இராணுவ அதிகாரியால் ஜனநாயக ஆட்சியை நடத்த முடியுமா? நாட்டில் இன்னொரு பிரளயத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியிலேயே ஜே.வி.பி.யினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பேராபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டுமெனவும் விமல் வீரவன்ஸ கேட்டுக் கொண்டார்.