மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினமான (நவம்பர் 26 ஆம் திகதி) நேற்று தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. மும்பையில் மீண்டும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் இந்திய கடற்படையும் கடலோர காவல்படையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பாக்கு நீரினை சந்தியில் இந்திய கடற்படையினரும் கடலோர காவல்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சிபுலியில் உள்ள விமான கண்காணிப்பு நிலையம் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன், பாக்ஜலசந்தி,மன்னார் வளைகுடா பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டக்கூடாது என்றும் தங்களுடைய அடையாள அட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.