மேலதிக வரி அதிகரிப்பை எந்தவிதத்திலும் மேற்கொள்ளாத வகையில் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க நிதி பெற்றுக் கொள்ளப்படும் என்று நிதி மற்றும் அரச வருவாய்த்துறை அமைச்சருமான ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிப் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. சபையில் விசேட அறிக்கை விடுத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தபடி அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். 2009ம் ஆண்டு நவம்பர் முதல் செயற்படும் வகையில் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு வழங்கப்படும். இது விடயத்தில் அரசாங்கம் தீர்க்கமான முடிவை எடுத்திருக்கின்றது. அமைச்சுக்களுக்கும், திணைக்களங்களுக்குமாக ஒதுக்கங்களின் பயன்பாடு வருடத்தின் இரண்டாவது நான்கு மாதங்களின் தொடக்கத்தில் வேகமடைய ஆரம்பிக்கும்.
அந்த வகையில் தற்போது இடைக்கால கணக்கறிக்கை மூலம் அமைச்சுக்களுக்கு நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஒதுக்கீடு சம்பள அதிகரிப்புக்குப் போதுமானது. சில சமயம் இந்த ஒதுக்கீடு போதாது போனால் நிதி திட்டமிடல் அமைச்சின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் வெவ்வேறு செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திணைக்களத்திற்கு 7000 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அமைச்சுக்களுக்கு நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு ஒதுக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டில் மூன்றிலொரு பங்கு இடைக்கால கணக்கறிக்கை மூலம் அந்தந்த அமைச்சுக்களுக்கு நிதியொதுக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம், பாதுகாப்பு அமைச்சுக்குக் கூட கடந்த வருடம் வரவு – செலவுத் திட்டம் மற்றும் குறைநிரப்பு பிரேரணை மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றிலொரு பங்குக்குச் சமமான நிதி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதாபிமான நடவடிக்கைக்காக கடந்தாண்டுகளைப் போன்று 2010 இலும் செலவிட நேரிடாது. ஆகவே அந்நிதியைக் கொண்டு பாதுகாப்பு படையினருக்குச் சம்பள உயர்வு வழங்கவும், நலன்புரி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் செலவிடப்படும்.
2005ம் ஆண்டில் அரச ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளம் ரூ. 8140.00. இதனை நாம் 2009ம் ஆண்டாகும் போது ரூ. 11,730.00 ஆக்கியுள்ளோம். இதேநேரம் சகல அரச ஊழியர்களுக்கும் ரு. 4500.00 படி வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.