யாழ். மாவட்ட மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தோரது பணம் பத்து ஆண்டுகளுக்கு மேல் உரிமை கோரப்படாது மத்திய வங்கியின் உடைமையாக்கப்பட்டிருப்பின் அதனை மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணஜீவா தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் அவர் கூறினார். யாழ்ப்பாணம், புலோலியில் மக்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தைத் திறந்து வைத்த அவர், அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார்.
வன்னிப் பிராந்தியத்தில் மக்கள் வங்கிக் கிளைகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தவர்களின் ஆவணங்கள் தொலைந்திருந்தாலும், இருக்கும் ஆவணங்களுக்கமைய திருப்பி வழங்கப்படுவதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் வங்கிக் கிளைகளில் அடகு வைத்திருந்த நகை களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் கூறினார்.
மக்கள் வங்கி யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 49 பேருக்கு முகாமைத்துவ உதவியாளர்கள் பதவிகளை வழங்கியுள்ளது. மேலும் இருபத்தைந்து பேருக்கு புதிதாக நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.