2011 ஆம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் (கொமன்வெல்த்) மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. இந்த மாநாட்டை அவுஸ்திரேலியாவில் நடத்துவதென நேற்று முன்தினம் சனிக்கிழமை ரினிடாட் அன்ட் டுபாக்கோவில் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பிரிட்டன்,அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உட்பட சில நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அதேநேரம், பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளில் 45 நாடுகள் இந்த மாநாட்டை அடுத்த வருடம் இலங்கையில் நடத்த ஆதரவு வழங்கின.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே இலங்கைக்கு இந்த ஆதரவு கிடைத்தது.எனினும், பிரதான நாடுகளான பிரிட்டன்,அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகள் தெரிவித்த கடும் எதிர்ப்பையடுத்து இந்த விடயம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு இந்த மாநாட்டை அவுஸ்திரேலியாவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதேநேரம்,2013 இல் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.