இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களை தான் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பெரும்பான்மை சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களை அரவணைத்துச் செயற்பட வேண்டுமென்றே கூறியதாகவும் ஒருஊடகமே தனது கருத்தை திரிபுபடுத்தி வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல் யாப்பின்படி சிங்களவருக்கு உள்ளது போன்றே தமிழ்,முஸ்லிம் மக்களுக்கும் சம உரிமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஜெய்க்ஹில்டன் ஹோட்டலில் நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இராணுவத்தளபதியாக பதவிவகித்த காலத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில்;இலங்கையில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லிம்களும் உரிமை கோர முடியாதெனவும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு கீழ்ப்படிந்தே நடக்க வேண்டுமென்றும் நீங்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களிடம் உங்கள் மீதான தப்பெண்ணமும், அதிருப்தியும் நிலவி வருகின்றது. இதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் கூறியதாவது; நான் ஒருபோதும் அவ்வாறு தெரிவிக்கவில்லை. அந்த ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இந்த நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினர்களாக உள்ளனர். அதேபோன்று சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்களும் இங்கு வாழ்கின்றார்கள். அவர்களைப் புறந்தள்ளிவிட முடியாது. சிங்கள மக்கள் இந்த இரு சமூகங்களையும் அரவணைத்தே செயற்பட வேண்டுமென்றுதான் தெரிவித்தேன்.
ஆனால், எனது பேட்டியை அந்த ஊடகம் திரிபுபடுத்தியே வெளியிட்டது.எமது நாடு ஒரு ஜனநாயக நாடு. இங்கு நாம் எந்தச் சமூகத்தையும் தள்ளி வைத்துப் பார்க்க முடியாது. பெரும்பான்மைச் சிங்கள சமூகத்துக்கு இருக்கும் அதே உரிமை சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கு இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். அவர்களும் இந்த நாட்டு மக்களே.அரசியல் யாப்பின் படி சகல சமூகத்தவர்களும் சமமானவர்களாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மைச் சமூகங்களை அரவணைத்தே செயற்பட வேண்டும். இந்தக் கடப்பாட்டிலிருந்து எவரும் விடுபட முடியாது. தமிழ்,முஸ்லிம் மக்களை நான் ஒருபோதும் வேறுபடுத்திப் பார்க்க முற்பட்டதில்லை. எதிர்காலத்திலும் அவர்களைப் பிரித்துப்பார்க்க மாட்டேன்.
இந்த நாட்டின் பிரஜையான நான் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டவன். அதன் பிரகாரம் அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள விதப்புரைகளை மதித்து நடப்பவனாக இருப்பேன்.தமிழ்,முஸ்லிம் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்கலாம். நான் சகல இன மக்களையும் சமமாகவே மதிக்கின்றேன். நான் ஒரு பௌத்தன். ஆனால், சகல மதங்களையும் மதிப்பவன். எந்தவொரு மதத்தினரும் இனத்தினரும் என்னை நம்பலாம். அந்த நம்பிக்கைக்கு நான் ஒருபோதும் துரோகமிழைக்கமாட்டேனென்றும் தெரிவித்தார்.
விதி
‘புலிகளிடமிருந்து பணம் பெற்றாவது தேர்தல் பிரசாரம் செய்வேன்’ செய்தியாளர்களிடம் சரத் பொன்சேகா மாறுபட்ட கருத்துக்கள்
அரசியலுக்கு புதிய தலைவரான ஜெனரல் (ஓய்வு பெற்ற) சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்தார்.
அச் சமயம் அவர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது எதிர்க்கட்சியினரின் கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளின் கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களை கூறியிருந்தார்.
நாட்டின் பொருளாதாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பதை அச் சமயம் அவர் ஏற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சி தசாப்தங்களுக்கு முன் கடைப்பிடித்து வந்த திறந்து பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும், தான் ஜனாதிபதியாக தெரிவானால் அதனையே கடைப்பிடிக்கப் போவதாகவும் கூறினார்.
கூட்டணியின் பங்காளி கட்சியான மக்கள் விடுதலை முன்னணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த பொருளாதார கொள்கையை முழுமையாக எதிர்த்து வருவது பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
பொன்சேகாவின் இவ்வாறான கொள்கையை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக் கொள்ளுமா என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அவ்வாறான கொள்கை உள்ளூர் கைத்தொழில்களை பாதிப்பதுடன், அரச துறையில் வேலை வாய்ப்புகளையும் குறைத்து, தனியார்மயப்படுத்தலை ஊக்குவிப்பதுடன் எரிபொருள் விலைகளையும் அதிகரித்துவிடும் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
மக்கள் விரும்பினால் மனத்திருப்திக்காக மதுபானம் அருந்தும் சுதந்திரம் அவர்களுக்கு
வழங்கப்பட வேண்டும் என்று ஜெனரல் பொன்சேகா மற்றொரு தவறான விடயத்தையும் அங்கு குறிப்பிட்டார். இதன் மூலம் நாட்டில் குடிகாரர்கள் பெருமளவில் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம்.
அத்துடன் தனது தேர்தல் பிரசாரத்துக்காக புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பெற்றோர்களிடமிருந்தும், புலிகள் ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி உதவியை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக அவர் அங்கு கூறியிருந்தது மிகவும் மோசமான ஒரு கூற்றாக அமைந்தது.
நாட்டின் ஸ்திரத்தை ஒழிக்கும் வெளிநாட்டிலுள்ள புலிகளின் சதி வேலையின் ஒரு பகுதியாக ஜெனரலின் இந்த கூற்று அமைந்திருப்பதாக பொது மக்கள் கோபாவேசத்துடன் இருக்கின்றனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமென ஜெனரல் அங்கு அழுத்தமாக கூறினார். முன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற தூரத்துக்கனவை, செய்ய முடியாத ஒன்றைப் பற்றி பேசுவதற்கு முன் அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதை பற்றி சிந்திக்க வேண்டும் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை யுத்த முனையில் தான் பதவி வகித்தபோது பல தவறுகளை செய்ததாக ஜெனரல் மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் ஒப்புக் கொண்டார்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். இதனால் தடுமாற்றம் அடைந்த ஜெனரல் பொன்சேகா அக்கேள்விகளில் பலவற்றுக்கு பதிலளிக்கும் அரசியல் அனுபவம் தனக்கு இல்லை என்று கூறியதுடன் முடிந்த வரை குறைந்த அளவு கேள்விகளையே தன்னிடம் கேட்குமாறு ஊடகவியலாளர்க ளிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
Kishore
புலிகளிடமிருந்து பணம் பெற்றாவது தேர்தல் பிரசாரம் செய்வேன்’/ / இது புலிகளைப் பொறுத்தவரை சாத்தியமானதே.
பார்த்திபன்
//வரலாற்று ரீதியாக இலங்கை, சிங்கள மக்களுக்கு சொந்தமானது. அதே நேரத்தில், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். //
பொன்சேகா எந்த வரலாற்றைப் படித்து விட்டு இப்படிக் கதையளந்தார் என்பதை முதலில் புரிய வைக்கலாமே. இராணுவத்திலிருந்து விலகியவர் இன்றுவரை புத்தவிகாரைகளுக்கே சென்று வழிபாடு நடாத்தியுள்ளார். பொது வேட்பாளராக தன்னை அறிவித்தவர் மரியாதை நிமித்தமாகவெனிலும் ஏனைய மதங்களை மதிகக்கவில்லை. இதுவே இவர் எப்படிப்பட்ட இனத்துவேசி என்பதை அடையாளப்படுத்துகின்றது.
palli
உலகம் உருண்டைதான் என்பதுக்கு இதைவிட வேறு எந்த சாட்ச்சியும் தேவையா?
சந்தனம்
சிங்கங்களிற்கு தெரியும் தமிழன் ஏமாந்த வெங்காய கூட்டங்கள் என்று பிறேமதாச தொடக்கம் மகிந்தாவரை எப்படி தமிழ் அரைஅவியல்களை ஏமாற்றினார்கள் என்று.சந்தனம்