08

08

மகனுக்கு பாராளுமன்றத்தில் வைத்து பால் கொடுத்த எம்.பி – கட்சி பேதமின்றி வாழ்த்திய உறுப்பினர்கள்!

இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார்.

 

பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது. எனினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியதோடு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

“அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பது இதுவே முதல்முறை. ஃபெடரிகோவுக்கு நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம்,” என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் தெரிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். பெண் எம்பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டது. பெண் பிரதமர் பதவி வகிக்கும் இத்தாலியின் எம்பிக்களில் பெரும்பாலானோர் ஆண் உறுப்பினர்கள் என்பதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கஜேந்திரகுமார் கைது விவகாரம் – நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம்!

கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவில்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேற்று (07) காலை கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மாலை பிணையில் விடுவித்தது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், “கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான காணொளிகளை பார்த்தேன். அதில் பொலிஸார் தமது கடமைகளை சரிவர செய்துள்ளனர்.

ஆனால் கஜேந்திரகுமார் குறித்த பொலிசாரை அச்சுறுத்தும் வகையிலும் அவர்களை தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டியும் உள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது கஜேந்திரகுமார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நடந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது” எனக் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட கஜேந்திரகுமார் அவர்கள், “அந்த சந்தர்பத்தில் குறித்த இடத்திற்கு சிவில் உடையில் வந்த இருவர் தம்மை பொலிசார் என கூறினர். அவர்களிடம் நான் அவர்களின் அடையாள அட்டையை காண்பிக்கும்படிக் கேட்ட பொழுது அதற்கு மறுப்பு தெரிவித்து என்னை தாக்கினர்” என குறிப்பிட்டார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இரண்டு கேள்விகளை முன்வைத்தார் .

சிவில் உடையில் வந்து தம்மை பொலிஸார் என கூறிய இருவரும் ஏன் தமது அடையாள அட்டைகளை காண்பிக்க மறுத்தனர் ?

கஜேந்திரகுமார் தான் இன்று நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டும் என கூறிய போது அவ்வளவு அவசரமாக அவரை கைது செய்வதற்கு காரணம் என்ன ? என அமைச்சர் டிரான் அலசிடம் கேட்டார்.

பொலிசார் தமது கடமைகளை சரிவர செய்துள்ளனர். காவல்துறையினர் மீது எந்த தவறும் இல்லை என அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

இதன்போது கஜேந்திரகுமார் அவர்கள், “அப்போது பாதுகாப்பு அமைச்சரான ( டிரான் அலஸ்) உங்களின் உத்தரவின் பேரிலா என்னை கைது செய்தனர் என கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட சாபாநாயகர் இந்த சம்பவம் குறித்த பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதால் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதோடு இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் எடுத்துக் கொண்ட அர்ச்சகர் உயிரிழப்பு !

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் – நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று உயிரிழந்துள்ளார்.

ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய 15 இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலுக்கு அமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானோரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் (07) மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலியங்காடு, கோப்பாய், யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்தில் புளட் உறுப்பினருக்கு மரண தண்டனை!

வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது.

அதற்கமைவாக எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்து அவருக்கு மரணதண்டனை உத்தரவினை வழங்கினார்.

வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ்மக்கள் விடுதலை கழகத்தின்(புளட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இன்றையதினம் தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் !

வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டோருக்கு புதிய முறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றிருந்தது.

விஸ் அபிலிட்டி என்ற அமைப்பின் ஊடாக விசேட தேவைக்குட்பட்டோருக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தி பலாபலன்களை அடையும் பொருட்டு அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்தன.

இதன் செயற்பாட்டு காட்சிப்படுத்தல் விஸ் அபிலிட்டி அமைப்பினுடாக வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ஆடல் பாடலினூடாக விசேட தேவைக்குட்பட்டவர்கள் தமது அன்றாட செயற்பாடுகளினூடாக எவ்வாறு சமூகத்தில் ஏற்படும் எதிர்மறை வெளிப்பாடுகளின் கோபத்தை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி அறிதல் மற்றும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் இச் செயற்பாடு அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் ஆரம்பித்து 2300 ஆவது நாளான இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனுடன், தமிழர்களின் நிலத்தில் இனப்படுகொலை நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்கு பின்னர், இலங்கை இராணுவமும் பௌத்த பிக்குகளும் சட்டவிரோதமாக தமிழர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து, பௌத்த சிங்களவர்கள் வசிக்காத தமிழர்களின் தாயகம் முழுவதும் மகா சங்க சிங்கள பௌத்த சின்னங்களை கட்டியுள்ளனர்.

குறித்த கடன் பண்டைய இந்து கோவில்களை அழிக்க பண பலத்தை வழங்கியதுடன், அழிக்கப்பட்ட கோவில்கள் சிங்கள இனவாத பௌத்த சின்னங்களால் மாற்றப்பட்டன.

இந்த பௌத்த சின்னம் தமிழர்களால் வெறுக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சின்னம் இன அழிப்பு மற்றும் தமிழ் தாயகத்தில் தெற்கிலிருந்து சிங்களவர்களின் குடியேற்றத்தை குறிக்கிறது.

தமிழர்களின் தாயகத்தில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனினால் மேலும் ஊக்குவிக்கப்பட்டதுடன், தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள்களை ஊக்குவித்து, எதிர்கால தமிழ்ச் சந்ததியை அழிக்கின்றது என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக வாள் உற்பத்தி செய்த நால்வர் கைது !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் சட்டவிரோதமாக வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.

அதன்போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பார்வையிழக்கும் அபாயத்தில் சிறுவர்கள் – பெற்றோர்களே அவதானம் !

முதலாம் தரத்தில் பிரவேசித்த மாணவர்களுக்கென பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கண், பற்கள் மற்றும் காது தொடர்பான பரிசோதனையின்போது ஆறு பிள்ளைகளுக்கு, 10 மற்றும் 12 மீற்றர் இடைவெளியில் உள்ள எழுத்துக்களை வாசிக்க முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் அழும் போது ஆறுதல் கூறவும், அவர்களுக்கு உணவளிக்கவும், மருந்து மற்றும் திரவங்களை வழங்கவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்பள்ளி வயது முதலே கையடக்கத் தொலைபேசிகளை வழங்கி வருவதாக சுகாதாரத் துறை மற்றும் ஆசிரியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது செய்யக்கூடாத ஒன்று எனவும் இதனால் எதிர்காலத்தில் பிள்ளைகளின் கல்வி கூட பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களின் தலையீட்டில் பிள்ளைகளை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் பாவனையே சிறு பிள்ளைகளின் கண் கோளாறுகளுக்குக் காரணம் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் முன்னாள் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் தர்மா இருகல்பண்டார நேற்று (07) தெரிவித்தார்.