23

23

10 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து சிகரெட்டினால் சூடு வைத்த கொடூரம் !

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் சிறுமியின் உடலின் சில இடங்களில் சிகரெட்டினால் சூடுவைத்த சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (22) நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சிறுமியை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸாரால் பெறப்பட்ட சட்ட வைத்திய அறிக்கைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொண்டு, சிறுமியை அவரது தாயின் பராமரிப்பில் வைத்தியசாலையில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட வகுப்பு ஆசிரியர் சிறுமியை வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் அழைத்துச்சென்றார்.

இதன்படி, சிறுமியை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, சிறுமி எட்டு தடவைகள் பாரிய பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் பாரிய மனித புதைகுழிகள் – விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் அமைப்புக்கள்!

இலங்கையின் உள்நாட்டு மோதல்களின் போதுகாணாமல் போனவர்களின் உடல்கள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐந்து மனித சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள்விடுத்துள்ளன .

கடந்தகால குற்றங்களை கையாள்வது குறித்து இலங்கை அரசாங்கம் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையில் இலங்கை அரசாங்கம் தோண்டவேண்டும் என ஐந்து சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன .

மனிதபுதைகுழிகள் குறித்து கடந்தகாலங்களில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றைவெளியிட்டுள்ள ஐந்துஅமைப்புகளும் இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளில் எவ்வாறு தலையிட்டன என்பது குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளன .

கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெளிவான பார்வையில் – இலங்கையில் மனித புதைகுழியின் பின்னால் – உண்மையை தேடுதல் என்ற விவரணச்சித்திரமும் வெளியிடப்பட்டது – இந்த விவரணச்சித்திரம் காணாமல்போனவர்களின் உறவுகள் எவ்வாறு நீண்ட போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் என்பதை விபரிக்கின்றது முன்னாள் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றியவேளை- மாத்தளை பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போனார்கள் அவ்வேளை அவர் அந்த பகுதியின் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றியவேளை- மாத்தளை பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போனார்கள் அவ்வேளை அவர் அந்த பகுதியின் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு அவரது பெயரையும் தனது விசாரணைகளின் போது குறிப்பிட்டிருந்தது என ஐந்து அமைப்புகளும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன .

அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தின் 247ஆம் ஆண்டு நிறைவு விழா இலங்கையில் !

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தின் 247ஆம் ஆண்டு நிறைவினையும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த பங்காண்மையின் 75ஆம் ஆண்டு நிறைவினையும் குறிக்கும் வகையில், ஜூன் 22ஆம் திகதி கொழும்பில் ஒரு வைபவத்தினை நடத்தினார்.

இதில் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் ஸ்தாபகத் தந்தைகள் 1776 ஆம் ஆண்டு பென்சில்வேனியாவிலுள்ள பிலடெல்பியாவில் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்காக ஒன்றுகூடிய ஜூலை 4 ஆம் திகதியினை உலகெங்கிலுமுள்ள அமெரிக்க குடிமக்கள் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

 

அப்பிரகடனத்துடன், வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைப் பின்தொடர்தல் மற்றும் ஆளப்படும் மக்களின் ஒப்புதலுடன் பெறப்பட்ட அரச அதிகாரங்கள் உட்பட சில பராதீனப்படுத்தவியலாத உரிமைகளின் அடிப்படையிலமைந்த தன்னாட்சியினை நோக்கி அமெரிக்கா தனது முதல் படியினை எடுத்து வைத்தது.

இவ்வைபவத்தில் உரையாற்றிய தூதுவர் சங்,

 

“ஒரு நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய விசையாற்றல் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றுடன் இணைந்து அதைப் பாதுகாக்கும் அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை என்பன சுதந்திரம், தனியுரிமை மற்றும் மகிழ்ச்சியைப் பின்தொடர்தல் ஆகியவற்றிலிருந்தே ஊற்றெடுப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அமெரிக்காவிலும், இலங்கையிலும், மற்றும் எல்லா நாடுகளின் விடயத்திலும் அது உண்மையாகும்.” எனக் குறிப்பிட்டார்.

 

அமெரிக்காவானது இலங்கையின் மிகவும் பழமையான பங்காளர்களில் ஒன்று என்பதை முன்னிலைப்படுத்திக்கூறிய தூதுவர் சங், பரஸ்பர மதிப்பீடுகள் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு என்பன இரு நாடுகளும் இணைந்து வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்துள்ளன என வலியுறுத்தினார்.

 

“அமெரிக்காவின் தேசிய சுதந்திரம் மற்றும் எமது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு ஆகியவற்றை நாம் கொண்டாடுகையில், உண்மையில் அனைத்து குடிமக்களுடனும் இலங்கை அரசாங்கத்துடனும் எமக்கிருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பங்காண்மையினை நாம் கொண்டாடுகிறோம். அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, எங்கள் ஸ்தாபகர்கள் அதைத் தெளிவாகக் கூறியுள்ளனர், இன்றுவரை, அவர்கள் வகுத்த பாதையினை நாங்கள் பின்பற்றுகிறோம் – மிகவும் பூர்த்தியான ஒரு இணைப்பினை உருவாக்குவதற்காக எங்கள் அரசியலமைப்பை நாங்கள் மரியாதையுடன் பின்பற்றுகிறோம். இலங்கையுடன் அமெரிக்கா கொண்டுள்ள பங்காண்மையின் குறிக்கோள் அதற்குச் சற்றும் குறைந்ததல்ல.” என அவர் மேலும் கூறினார்.

 

அமெரிக்கர்களுக்கும் இலங்கையர்களுக்கும் நன்மைகளை வழங்கும் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் மற்றும் மக்களுக்கும் இடையிலான உறவுகளில் எங்களது பங்காண்மை செழித்து வளர்கிறது.

 

1956 ஆம் ஆண்டு முதல், போசாக்கு, சுகாதாரம், கல்வி, மனித உரிமைகள் மற்றும் ஆட்சி, அனர்த்தங்களின் போதான பதிலளிப்பு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் USAIDஆனது 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய உதவிகளை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டில், இலங்கை பொருளாதார நெருக்கடியின் மத்தியில்

இருந்தபோது, விவசாயிகளுக்கு உரம் வழங்கியது முதல் சிறு வணிகங்களுக்கு வழங்கிய நிதி உதவிகள் வரை 270 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுதியுடைய புதிய உதவிகளை அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக நிலையாக வளர்ச்சியடைந்துள்ள எமது இராணுவங்களுக்கிடையிலான உறவானது, இருதரப்பு பயிற்சி, பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்துகிறது.

இவையனைத்தும் இறுதியில் ஒரு திறந்த, சுதந்திரமான மற்றும் அமைதியான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு மீண்டெழும் தன்மையுடைய படையினை கட்டமைப்பதற்கு உதவி செய்யும்.

இலங்கை சமூகங்களில் திறன்களை வளர்த்து, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் உறவுகளை வளர்ப்பதற்காக 500இற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் தமது வாழ்வின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களை அர்ப்பணித்துப் பணியாற்றியது உட்பட 1962 ஆம் ஆண்டு முதல் மிகப்பெரிய கலாச்சாரங்களுக்கிடையிலான உறவுகளை உருவாக்குவதற்கு Peace Corps உதவி செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதியுடன், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. இலங்கையின் திறமையான மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யும் விருப்பத்திற்குரிய இடங்களில் அமெரிக்காவும்  ஒன்றாகும்.

கடந்த ஆண்டில் 3,000 இலங்கை மாணவர்கள் அமெரிக்காவிற்கு கல்வி கற்பதற்காகப் பயணித்துள்ளனர். Fulbright மற்றும் International Visitor Leadership Programs போன்ற பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக ஏனைய கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் நேரடியாக உதவி செய்கிறது. கடந்த 75 வருடங்களாக இந்த நிகழ்ச்சிகளில் ஏறக்குறைய 3,000 இலங்கையர்கள் பங்குபற்றியுள்ளனர்.

எதிர்காலத்தில் எமது மக்களுக்கிடையிலான உறவுகளின் இன்னும் பெரிய வளர்ச்சிக்கும்; பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும்; மற்றும் புவியியல் ரீதியாக எவ்வளவு முக்கியமானதாக இப்பிராந்தியம் இருக்கிறதோ அதேயளவு சுதந்திரமாகவும் திறந்ததாகவும் அது இருப்பதற்கும் நாம் கட்டமைத்துள்ள பங்காண்மையானது அடித்தளமாக அமையும்.

இலங்கையில் அமெரிக்காவின் நட்பு, அர்ப்பணிப்பு மற்றும் உதவி என்பன கடந்த 75 வருடங்களில் கொண்டாடுவதற்குத் தகுதியான பல சாதனைகளைப் படைத்துள்ளன. அந்த நட்பும், அர்ப்பணிப்பும், உதவியும் தொடர்ந்தும் நீடித்திருக்கும் என்பதுடன், ஒன்றாக இணைந்து இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை எம்மால் உருவாக்க முடியும்.

வெடித்துச் சிதறியது டைட்டானிக் கப்பலை காண செல்வந்தர்களுடன் சென்ற டைட்டன் !

டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் காணாமல் போன ரைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள், நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் இருந்த போது அழுத்தம் காரணமாக பயங்கரமாக வெடித்து சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

டைட்டானிக்(Titanic) கப்பலை பார்வையிட 5 பேருடன் கடலின் அடிக்கு சென்ற ரைட்டன் submarine இன் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர கடற்படை சற்றுமுன் அறிவித்துள்ளது.

1912ம் ஆண்டு 2224 பேருடன் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய Titanic கப்பலை பார்வையிடுவதற்காக அதிநவீன நீர் மூழ்கிக் கப்பலில் சுற்றுலா பயணிகள் 5 பேர் சென்றனர். ஒருவர் தலா ரூ.2 கோடி கொடுத்து இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பயணம் தொடங்கிய ஒரு மணிநேரம் 45 நிமிடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நீர்மூழ்கி கப்பலுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

 

இதையடுத்து, அந்த கப்பல் எங்கு சென்றது, அதில் உள்ளவர்களின் நிலை என்ன என எந்த விபரங்களும் தெரியவில்லை. இருந்தபோதிலும், 96 மணிநேரம் நீர்மூழ்கி கப்பலுக்குள் ஒக்சிஜன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அமெரிக்கா, கனடா நாடுகள் இணைந்து நீர் மூழ்கிக் கப்பலை தீவிரமாக தேடி வருகின்றன. இதனிடையே, இந்த நீர்மூழ்கிக் கப்பலில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டதால் இதன் தொடர்பு அறுந்துபோக வாய்ப்பே இல்லை என அதனை வடிவமைத்த நிறுவனம் கூறியுள்ளது.

 

ஆழ்கடலில் மிகப்பெரிய ராட்சத மீன் ஏதாவது தாக்கி இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மர்மமான விஷயம் நடந்திருந்தால் மட்டுமே அந்த நீர்மூழ்கி கப்பல் வழிதவறி சென்று மாயமாவதற்கு வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு பல கதைகள் குறிப்பிட பட்ட நிலையில், குறித்த submarineஇன் சிதைவுகள் என சந்தேகிக்கபடும் பாகங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவிப்பு ஒன்றை சற்றுமுன்னர்வெளியிட்டுள்ளது.

 

 

 

 

மேலும் டைட்டானிக் கப்பல் சுற்றுலா தொடர்பாக காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் குறித்த சர்வதேச தேடல் தற்போது கடுமையான சூழ்நிலையில் நிறைவு பெறுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று முதல் ஆரம்பம் !

யாழ். போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிப்பதாவது – விழித்திரை சத்திர சிகிச்சை ஆனது சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினாலும் சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை.

இந்நிலையில் தற்பொழுது விழித்திரை சத்ர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ஷைலா பரதன் பதில் கடமையேற்றுள்ளார்.

அவர் தமது சேவையினை மக்களுக்கு வழங்கு முகமாக வாரத்துக்கு ஒரு முறை ஆறு பேர் வீதம் 100 சத்திர சிகிச்சைகளை இன்று (23) முதல் மேற்கொள்ள உள்ளார்.

ALAKA Foundation, Malaysia நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இந் நிகழ்ச்சித் திட்டமானது யாழ். போதனா வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மருத்துவ நிபுணர்களுக்கு பாரிய பற்றாக்குறை !

இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களுக்கான பாரிய பற்றாக்குறையை சந்தித்துள்ளது எனவும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு இது கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு செல்லுதல், சில நிபுணர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுதல், அத்தோடு சமீபத்தில் அரசு வெளியிட்ட சுற்றறிக்கை பிரகாரம் ஒய்வு பெரும் வயது 60 என அறிவிக்கப்பட்டமை என்பன இந்த விடயத்தில் தாக்கம் செலுத்தும் காரணிகளாக அமைந்துள்ளன.

2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு 4,299 விஷேட மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது.

இடமாறுதல் பட்டியலின்படி, இருதயநோய் நிபுணர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள், தோல்நோய் நிபுணர்கள், அவசரகால மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் நோயியல் நிபுணர்கள் உட்பட 750 பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் அவசரமாக நிரப்படவேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரிகள் உடனடியாகச் செயல்படத் தவறினால், அடுத்த ஆண்டுக்குள் தேவைப்படும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை 1,000 இற்கும் அதிகமாகும் என்று இந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகளை பாதுகாக்க மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் புதிய திட்டம் !

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் பாடசாலைகளில் மாணவிகளின் நலன் கருதி பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்ட வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டுமென மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என்றும், மாணவிகள் தொடர்பான அவதானிப்புக்கள் அதில் பதிவிடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயதினர் தொடர்பான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், மாணவிகள் பாடசாலைக்கு சமூகமளிக்காவிட்டால் உடனடியாக இந்தக் குழுக்கள் ஊடாக பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், மாணவிகள் பாடசாலைக்கு வரும் வாகன விவரங்கள், சாரதிகளின் கைபேசி இலக்கங்கள் போன்றவையும் இந்தக் குழுக்களில் பகிரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நடைமுறையை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் குறித்த செயற்திட்டம் அந்தந்த பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகளினால் மேற்பார்வை செய்யப்படும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த வரி அறவீடு – கடையடைப்பு போராட்டத்தில் வர்த்தகர்கள் !

பொது சந்தை வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொதுச் சந்தை வர்த்தகங்கள் இன்று சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதல் தங்களிடம் அதிகரித்த வரி அறவீடு மேற்கொள்வதற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேராட்டத்தில் ஈடுப்பட்ட சந்தை வர்த்தகர்கள் சார்பாக வர்த்தக சங்க பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை சந்தித்து கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் வர்த்தகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.