03

03

சிதைவடையும் யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை – எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் மாணவர்கள் !

யாழில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருப்பதாகவும், இப்படியான மோசமான நிலை யாழில் காணப்பபடுவதாக பிரதேச செயலர்கள் கடந்த புதன்கிழமை (31-05-2023) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் இடைவிலகிய மாணவர்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் பிரதேச செயலர்கள் சுட்டிக்காட்டும்போதே இவ்விடயத்தை தெரிவித்தனர்.

பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்களை மீளவும் தரம் 9 இல் சேர்க்கும்போது அவர்களுக்கு எழுத, வாசிக்கத் தெரிவதில்லை. அவர்கள் அந்த வகுப்பிலே பேசாமல் இருக்கின்றனர்.

இவ்வாறு பல வகுப்புக்களில் நடைபெறுகின்றன என்று பிரதேச செயலர்கள் தெரிவித்தனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவ்வாறு இடம்பெறுவதை ஏற்றுக்கொண்டனர். ஆரம்பக் கல்வியை சரியாகப் பயிலாத மாணவர்களால் இந்த நிலைமை ஏற்படுவதாகக் குறிப்பிட்டனர்.

இதனைத் தீர்ப்பதற்கு பாடசாலைகளில் அவ்வாறான மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு ஆரம்பக் கல்வி போதிக்கப்படுகின்றது.

எனினும் இது நடைமுறையில் முழுமையான சாத்தியமான விடயமல்ல என்றும் தெரிவித்தனர்.

இதேவேளை, கொரோனா காரணமாக இவ்வாறு ஆரம்பக் கல்வியை முறையாகப் பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை அண்மையில் யாழ். மாவட்டத்தின் தற்போதைய கல்வி நிலை குறித்து வெட்கமாக உள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கல்வியில் முதலிடத்திலிருந்த மாவட்டம் தற்போது இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? மேலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது. பிள்ளை தனது பிரச்சினைகள் குறித்து பெற்றோரிடம் உரையாடுவதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதில்லை. இதனாலேயே பிள்ளைகள் தவறான வழிநடத்தலின் கீழ் சென்று இவ்வாறு தவறான வழியில் பயணிக்கின்றனர். இது குறித்து பெற்றோர்கள் அதீத கவனம் எடுக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களின் நலத்தில் அக்கறை எடுக்க வேண்டும்.” என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த எங்களிடம் ஆளணி இல்லை – பொலிசார் முறைப்பாடு !

யாழ். மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிசாருக்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் கடந்த புதன்கிழமை(31) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து இருப்பதாக தெரிவித்த பிரதேச செயலர்கள் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரிகள் பல இடங்களில் காவல்துறை ஆளணிப் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காவல்துறை ஆளணியை அதிகரிப்பதற்கு தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் எனக்கு கடிதம் மூலம் ஒரு கோரிக்கையை விடுத்தால் தான் அதனை அதிபருடன் கலந்துரையாடி காவல்துறை ஆளணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், உதவிப் காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் பிரதேச செயலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளம் குடும்பப் பெண்னை கடுமையாக தாக்கிய கணவன்!

கிளிநொச்சி கோனாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாமடைந்த இளம் குடும்பப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் குடும்ப பெண் அவரது கணவரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு இரண்டு கண்கள் மற்றும் தலைப்பகுதியில் பல காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்துள்ளது. இதனையடுத்தே இது பற்றி பலரும் ஆராய முயன்றுள்ளனர்.

மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வுகளையும் அல்லது வன்முறை வன்முறைகளை ஏற்படுத்துவர்களை தண்டிப்பதற்கு அரச உயர் அதிகாரிகள் முதல் பொலிஸாரோ முன் வருவதில்லை. குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் பாதுகாக்கப்படுவதாகவே பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இவ்வாறு குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி 3 ஆவது கட்டமாக நடாத்தாப்படும் போராட்டம் !

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 ஆவது கட்டமாக நடாத்தாப்படும் போராட்டத்தின் நான்காம் நாள் போராட்டம் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் யாழ். மாவட்ட மாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஊடக பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க முன்வாருங்கள் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இந்த பொசன் பௌர்ணமி தினத்தில், நாட்டில் ஏற்பட்ட, தற்போது படிப்படியாக தீர்க்கப்பட்டு வரும் அரசியல், சமூக பொருளாதார குழப்பங்கள் தீர்ந்து இலங்கையை உலகின் மீண்டும் முன்னேற்றம் அடைந்த நாடாக உயர்த்துவதற்கு இந்த பௌர்ணமி தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொசனை முன்னிட்டு ஜனாதிபதி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது. மேலும், அதன் மூலம் நாம் எண்ணற்ற   சமூக, கலாசார மற்றும் அரசியல் மதிப்புகளை பெற்றுள்ளோம்.

மஹிந்த தேரர் போதித்த வாழ்க்கை முறையின் மூலம் பெருமைமிக்க நாடாகவும் தேசமாகவும் நாம் முன்னோக்கி வந்துள்ளோம்.

குறிப்பாக குளங்கள், வயல்கள், தூபிகள் ஆகியவற்றினால் கட்டமைக்கப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு வழிகாட்டிய தர்ம கருத்தாடல்கள் மற்றும் அரசியல் சமூக கலாசார கருத்தாடல்களும் மஹிந்த தேரரின் வருகையுடனேயே உருவாகின.

இந்த பொசன் பௌர்ணமி தினத்தில், மஹிந்த தேரரின் வருகையால் கிடைத்த தூய பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க தங்களை அர்ப்பணிக்குமாறு அனைத்து பௌத்த மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் பொசன் பௌர்ணமி தின வாழ்த்துக்கள் !

“தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய வேண்டும்.” – அமைச்சர் டக்ளஸ் அறிவுரை!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்களின் நலனுக்காக இந்திய தூதுவரை சந்திப்பதற்கான தமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டிருப்பது அவர்களின் சுயநல அரசியலை வெளிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 

சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்காக நன்கொடையாக பெற்றுக் கொண்ட மண்ணெண்ணையை பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக இன்று வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில் முறைகளையும் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக, கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் மறுதினம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமது நிலைப்பாட்டினை அவர்கள் மாற்றியிருந்தனர். இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணத்தில் வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இளைஞன் ஒருவர் வீடொன்றிற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது இனம் தெரியாத நபர்கள் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

 

பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் (வயது 50) என்பவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) எனும் இளைஞன் கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மூன்றாம் குறுக்குத் தெருவில் சுகுமார் என்பவரின் வீட்டுக்கு வெளியே அதிகாலை வேளை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் சுகுமாரின் வீட்டினுள் , அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழு சுகுமார் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உயிரிழந்த இளைஞன் இரவு நேரம் எதற்காக அந்த வீட்டுக்கு அருகில் சென்றார் என்பது தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடாத்தி உள்ளமை காவல்துறைக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியாவின் ஒடிசாவில் ரயில் விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு !

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார்.

 

கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் ​வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புகையிரதம் யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் புகையிரதத்துடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் 18-க்கும் அதிகமான புகையிரதபெட்டிகள் கவிழ்ந்து இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

 

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.