தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (27) என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவர், பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச காணொளி எடுத்துள்ளார். பின்னர் அந்த காணொளிகள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார்.
இது தொடர்பான புகாரில் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்திலும் கைதாகியுள்ளார். 120 பெண்களின் 400 காணொளிகள் மற்றும் 1900 ஆபாச படங்கள் காசியின் கணினியில் இருந்து கைப்பற்றப்பட்டன.
காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்குகள் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.