பொலிசாரால் சுட்டக்கொல்லப்பட்ட சிறுவன் – போராட்டக்களமான பிரான்ஸ் !

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாந்த்ரே பகுதியில் உள்ள சிக்னலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து டிரைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த காரை ஓட்டி சென்ற ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த நேல் என்ற 17 வயது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து காருக்குள்ளேயே இறந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

 

போலீசாரின் இந்த நடவடிக்கை பிரான்ஸ் நாட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் வெடித்தது. கார்கள், பள்ளிகள், போலீஸ் நிலையங்கள், குப்பைத்தொட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல பகுதிகளில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. வன்முறைகளில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.

 

நேற்று இரவும் 3-வது நாளாக கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 40 கார்கள் சேதம் அடைந்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 170 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் 180-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக 40 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 

அவர்கள் முக்கிய நகரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையை தடுக்க பாரீஸ் புறநகர் பகுதியான கிளமார்ட் பகுதியில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருகிற திங்கட்கிழமை வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் நாட்டில் பொதுமக்களின் போராட்டம்-வன்முறை சம்பவங்கள் நீடித்து வருவதால் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உயர் மட்ட குழுவை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இம்மானுவேல் மேக்ரான் கூறும் போது சிறுவன் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். குற்றவாளி தண்டிக்கப்படுவார். பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். பள்ளிகள்,போலீஸ்நிலையங்கள்,குடியரசுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்து உள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *