21

21

இறுதிப்போர் தொடர்பான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை முற்றுமுழுவதாக நிராகரிக்கிறோம் – ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் !

ஐ.நா தீர்மானங்களின் கீழ் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை முற்றுமுழுவதாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது பரந்துபட்ட அளவில் சட்ட மற்றும் அரசியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என இன்றைய ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை அரச பிரதிநிதி, அரசியலமைப்புக்கு உட்பட்டே பொறுப்புகூறல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர்,

தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு மத்தியிலும் அரசியலமைப்புக்கு உட்பட்டு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறலுக்கான நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்திவருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. தேவையான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படும் அதேவேளை, சமூக பாதுகாப்பு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை அனைத்து சமூகங்களுக்கு இடையிலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவது குறித்து அரசாங்கம் மனதில் வைத்து செயற்படுகின்றது.

சட்டரீதியான மறுசீரமைப்புக்கள் நிறுவன செயற்பாடுகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளின் விடுதலை, அதிகாரப் பகிர்வு,உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தேசிய காணி பேரவை, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஆகியன குறித்து குறித்து கடந்த 8 ஆம் திகதி அதிபர் சந்திப்பொன்றை நடத்தினார்.

 

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து அனைத்து தரப்பினருடனும் மேலதிக கலந்துரையாடல்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

 

உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யும் அதேவேளை சர்வதேச தரத்திற்கு அமைய அதனை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஊழல் எதிர்ப்புச் சட்டம், உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, அது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது.

 

கடந்த மார்ச் மாதம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் தென்னாபிரிக்காவிற்கு சென்று, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அனுபவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தனர்.

இந்தப் பொறிமுறை இலக்கைக்கு பொருத்தமானதாக இருக்கும் அதேவேளை, அதனை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக ஆலோசனைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

 

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தை அமைப்பதற்கு அதிபர் செயலாளரை அனுமதிக்கும் வகையில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

காணாமல் போனோர் அலுவலகம் 3 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

 

காணாமல் போனோர் பற்றிய சான்றிதழை வழங்குவதையும் அதிபர் துரிதப்படுத்தியுள்ளார்.

இராணுவம் வசமிருந்த 92 வீதமான காணிகள் உரிய உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

 

மோதல்களின் பின்னர் வன இலாகா வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையககப்படுத்தப்பட்ட மீதமாக உள்ள காணிகளை உரிய தனிப்பட்ட நபர்களை கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம் உட்பட வடக்கு கிழக்கு மக்களின் நீண்டகால பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு கீழ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது” – என்றார்.

“புலம்பெயர் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தாது எங்களுடன் பேசுவதற்கு முன்வர வேண்டும்.” – பிரிட்டனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தாது பேசுவதற்கு முன்வர வேண்டும் எனவும், எந்த வேளையிலும் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தான் தயாராகவே உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தீர்மானம் குறித்து, பெரும்பாலான உறுப்பினர்கள் ஒத்துழைப்புகளை வழங்கி வரும் அதேவேளை சிலர் முரண்டு பிடிப்பதாவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரித்தானியாவிற்கு பயணம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை எதிர்த்து பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் குழுவினர் ஒன்று எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேரரின் வங்கிக்கணக்கில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அனுப்பிய 8 கோடி ரூபாய் !

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சத்தாரதன தேரரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான விசாரணையின் போது, ​​குவாத்தமாலாவில் உள்ள வங்கிக் கணக்கொன்றிலிருந்து எட்டு கோடி ரூபா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

குவாத்தமாலாவில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தப் பணத்தை அனுப்பியதன் பின்னணியில் உள்ளார்களா என்பதை கண்டறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

இங்கிலாந்தைச் சேர்ந்த பின்சிறி என்ற நபர் ஆலயத்தின் அபிவிருத்திக்காக எட்டு கோடி ரூபாவை அனுப்பி வைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது. இந்தப் பணப் பரிவர்த்தனைக்குப் பின்னணியில் ஒரு தொலைக்காட்சி நடிகர் இருப்பதும் தெரியவந்துள்ளது.

 

தகவலின்படி குற்றப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வாளர்கள் அங்கு சென்று ஆலயம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்தனர். கோயிலின் வளர்ச்சிக்கு ஐம்பது லட்சம் ரூபாய் கூட செலவிடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

 

இதேவேளை அநுராதபுரத்தில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் இருந்து எட்டு இலட்சம் ரூபா எடுக்கப்பட்டு கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சத்தாரதன தேரர் மற்றும் பிரபல டெலி நடிகருடன் இணைந்து இந்த பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தாயாரை ஆபாசமான வார்த்தைகளால் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் 28ஆம் திகதி சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஒரே வருடத்தில் குரங்குகளினால் சேதமாக்கப்பட்ட 03 மில்லியன் தேங்காய்கள் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை இணைத்து ஏற்றுமதி விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 

அதன் ஊடாக விவசாய அமைச்சு வெளிநாட்டு வருவாயை ஈட்டும் அமைச்சாக மாறும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

விவசாய தொழிற்துறைக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுத்தமையால் இம்முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது என்று தெரிவித்த அமைச்சர், ஹெக்டெயார் ஒன்றில் அதிகளவான அறுவடையை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான தொழில்நுட்ப முறைமைகளை கண்டறியும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

கடந்த காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து போராட்ட களத்திற்கு சென்ற விவசாயி தற்போது மீண்டும் விவசாய நிலத்திற்கு வந்து தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

நாட்டின் நுகர்வுத் தேவைக்காக அனைத்து விவசாயப் பொருட்களையும் வெற்றிகரமாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் விளைநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும். ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது உர வரிசை, எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை போன்ற வரிசைகள் மாத்திரமே காணப்பட்டன. நான் விவசாய அமைச்சராக பதிவியேற்றுக்கொண்ட போதும் பாரிய சவாலொன்று காணப்பட்டது. உள்நாட்டு விவசாயிகளுக்கு உரம் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அந்த சவாலை ஏற்றுக்கொண்டு முதற்கடமையாக விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுத்தேன். ஜனாதிபதியின் அறிவுரைக்கமைய விவசாயிகளுக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் தற்போது பெரும்போக விளைச்சல் போதியளவு கிடைத்துள்ளது. சிறுபோகத்திற்கு அவசியமான உரமும் தற்போது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது விவசாயிகள் விவசாய நிலத்தை விடுத்து ஆர்ப்பாட்ட பூமியில் களமிறங்கியிருந்தனர். தற்போது விவசாயிகள் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

சில அரசியல் தலைவர்களே விவசாயிகளை ஆர்ப்பாட்ட களத்திற்கு இழுத்தார்கள் என்பது ரகசியமல்ல. விவசாயிகளை விவசாய செயற்பாடுகளிலிருந்து விடுபடச் செய்து மக்களையும் பசியில் வாடச் செய்யும் அரசியல் சூழ்ச்சி செயற்பாடுகளையும் சிலர் முன்னெடுத்தனர். அந்த சவால்களுக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சாதகமான முறையில் முகம்கொடுத்தது.

 

ஜனாதிபதியின் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் ஹெக்டெயார் ஒன்றில் பெற்றுக்கொள்ளக்கூடிய அறுவடையின் தொகையை அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளது. சில விவசாயிகள் குறிப்பிட்ட பருவகாலங்களில் 11 ஆயிரம் கிலோவை அறுவடை செய்துள்ளதோடு மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்திச் செயற்பாடுகளிலும் புதிய தொழில்நுட்பத்தை உள்ளீடு செய்வதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன்கீழ் இலங்கை மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடிய வலுவான திட்டமிடல் ஒன்றை தயாரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டக்கூடிய விவசாய அமைச்சு ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு சலுகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். முட்டை வியாபாரம் மற்றும் விவசாயம் தற்போது நல்ல நிலைக்கு வருகின்றது. மக்கள் பட்டினியால் வாடுவதாக ஊடகங்கள் முன் கூறி மக்களைத் தூண்டிவிடும் நோக்கில் சில எதிர்க்கட்சிக் குழுக்கள் செயற்படுகின்றன.ஆனால் இலங்கையில் பசியால் யாரும் இறப்பதில்லை. ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்ற போது இருந்த அரிசியின் விலைக்கும் தற்போது அரிசியின் விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. இப்போது வெள்ளைப் பச்சரிசி ஒரு கிலோவை நீங்கள் 125 முதல் 130 ரூபாவுக்கு வாங்கலாம். கட்டுப்பாட்டு விலைக்கும் குறைவான விலைக்கு அரிசியை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுப்போம். அதன்படி, கடந்த ஆண்டை விட மக்கள் எளிதாக பொருட்களை வாங்க முடியும்.

 

இவ்வாறு கொள்வனவு செய்வதற்கான போதிய நிதி திறைசேரியில் இருந்து வழங்கப்படும் என எமக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறுபோக விளைச்சலை கொள்வனவு செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

 

வன விலங்குகளால் விவசாயத்திற்கு அதிகளவில் சேதம் ஏற்படுகின்றது. கடந்த வருடம் மாத்திரம் 03 மில்லியன் தேங்காய்கள் குரங்குகளினால் சேதமடைந்துள்ளன. ஆனால் இதுபற்றிப் பேசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விவசாய அமைச்சிடம் இது வரை குரங்குகளின் பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை. ஆனால் உலக நாடுகளில் விலங்குகள் பெருகியபோது அவற்றைக் கொன்று விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியாது. எனவே, அனைவரும் சேர்ந்து கலந்துரையாடி இதற்கு விரைவான தீர்வை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழில் சோழர் காலத்து கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தொல்லியல் திணைக்களம் அனுமதி !

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நல்ல தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும் பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், (19) ஆம் திகதி குறித்த பகுதிக்கு சென்று நிலமைகளை நேரடியாக அமைச்சர், நேற்று (20) சம்மந்தப்பட் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.

குறித்த கிணறு சோழர்களினால் அமைக்கப்பட்ட சிவன் கோயிலின் மூலஸ்தானத்திற்கான தீர்த்தக் கிணறு என்பது ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டமையினால் தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சருடனான சந்திப்பின் போது, குறித்த கிணற்றின் கட்டுமானங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் மக்களுக்கான குடிநீரை வழங்குவதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்(யாழ்ப்பாணம்) திரு. பந்துல ஜீவ, புனர்நிர்மாணப் பொறுப்பதிகாரி திருமதி ராகினி மற்றும் மேலாய்வு உத்தியோகஸ்தர் திரு. தஷிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம்.” – பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர்!

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு தொடர்பான புதிய சட்டமூலம் இன்று நாடாளுமன்றில், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பழைய சட்டத்தில் காணப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டே இந்தப் புதியச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க தான், இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

 

இது தவறான கருத்தாகும். நீண்ட நாட்களாக நடைமுறையில் இருக்கும் சட்டமூலம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன.

 

இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டுதான் நாம் இந்த புதிய இலஞ்ச- ஊழல் ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை தயாரித்துள்ளோம்.

 

ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் வகையில், ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பதவிகள் அனைத்தும், அரசமைப்பு பேரவைக்கு இணங்க தான் நியமிக்கப்படும்.

 

ஓய்வுபெற்ற நீதிபதிகள், பொலிஸாரை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதால், சட்டமூலத்தின் ஊடாக எதிர்ப்பார்த்த பலன் கிடைக்காது என்பதை நாம் அனுபவங்கள் ஊடாக கண்டுள்ளோம்.

 

எனவே, 62 வயதுக்கு மேற்படாத, குறித்த விடயதானத்தில் அனுபவமும் நிபுணத்துவம் வாய்ந்த நபர்களைதான் ஆணைக்குழுவுக்கு நியமிக்கவுள்ளோம்.

 

மேலும், ஜனாதிபதி முதல் ஆணைக்குழுக்களின் தலைவர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், மாகாண முதல்வர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் தங்களின் சொத்துப் பட்டியலை உறுதிப்படுத்த வேண்டும் என்ற சரத்தும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியலை வெளியிட வேண்டும். ஓய்வு பெற்றாலும், இரண்டு வருடங்களுக்கு சொத்துக்களின் விபரங்களை வெளியிட வேண்டும்.

 

அதேநேரம், அரச திணைக்களங்களில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

 

இந்தக் குற்றத்திற்கு எதிராகவும் இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புத்த பெருமானை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நகைச்சுவை நடிகைக்கு விளக்கமறியல்!

புத்த பெருமானை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவுக்கு எதிர்வரும் ஜுலை 5 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

புத்த பெருமானை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்த நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரிய, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கடந்தமாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தனது கருத்து குறித்து மன்னிப்புக் கோரிய அவர், சிங்கப்பூருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகைத் தந்தபோதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு, இவரது கருத்தை ஒளிபரப்பு செய்த ‘ளுடு ஏடுழுபு’ என்ற யூடியூப் தளத்தின் உரிமையாளர் புருனோ திவாகரனும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் இன்று கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த யூடியூப் தளத்தில் உரிமையாளர் புருனோ திவாகர நிபந்தனையுடன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.