வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
புலம்பெயர் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தாது பேசுவதற்கு முன்வர வேண்டும் எனவும், எந்த வேளையிலும் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தான் தயாராகவே உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தீர்மானம் குறித்து, பெரும்பாலான உறுப்பினர்கள் ஒத்துழைப்புகளை வழங்கி வரும் அதேவேளை சிலர் முரண்டு பிடிப்பதாவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவிற்கு பயணம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை எதிர்த்து பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் குழுவினர் ஒன்று எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.