27

27

“எதையாவது இந்தச் சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும்.” – யாழ். மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரம்

அரசசேவையில் இணைந்துள்ள உத்தியோகத்தர்கள் எதையாவது இந்தச் சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கடமையாற்றிய திணைக்களங்கள் மற்றும் காரியாலயங்களில் அந்தந்த நலன்புரி அமைப்புகளில் ஊடாக இரத்ததான முகாம்களை கட்டாயமாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தி அந்த நடவடிக்கைக்கு அவர்களை உள்வாங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தேன்.

தற்பொழுது நான் அரசாங்க அதிபராக பதவி ஏற்றபின் சகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அந்தந்த பிரிவுகளில் இரத்ததான முகாம்களை நடாத்தி செயற்படுத்த வேண்டும் என்று கோரி இருக்கின்றேன்.

அண்மையிலும் சில பிரதேச செயலகங்களில் இரத்ததான முகாம்கள் இடம்பெற்றிருந்தமை நீங்கள் அறிந்த விடயம்.

இந்த இரத்ததான பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் எங்களுடைய அலுவலகங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என கூறி வைக்க விரும்புகின்றேன்.

இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அந்த மனப்பாங்கு குருதிக்கொடை வழங்குவதிலும் காணப்பட வேண்டும் – என்றார்.

பொலிஸ் நிலையத்தை சுற்றுவளைத்த பொதுமக்கள் – 38 தடவைகள் வானத்தை நோக்கி சுட்ட பொலிஸார்!

நேற்று (26) இரவு நுவரெலியா – ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்ததை அடுத்து பொலிஸார் எச்சரிக்கைக்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர்.

ஹங்குரன்கெத்த தியதிலகபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் ஹங்குராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

எனினும், இச்சம்பவம் கொலை என்றும், சந்தேக நபர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

குறிப்பிட்ட மரணம் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்ட போதிலும், குழு ஒன்று ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும் காவல் நிலையத்திற்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், பணியில் இருந்த அதிகாரிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 8 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதியுங்கள் – மாவட்ட செயலகத்திடம் கோரிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று முதல் 09 வரையான தனியார் வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமையினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி மாவட்ட செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரம் ஒன்று முதல் 9 வரையான தனியார் வகுப்புகளை நிறுத்துவதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் தீர்மானம் மேற்கொள்ள நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் மூடப்படும் 2000 அரச பாடசாலைகள்!

நாட்டில் ஆயிரக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம் தயாரித்துள்ளது.

தேசியக் கல்வி சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் பாடசாலைகளுக்கான மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 300 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் இரத்து – பின்னணி என்ன..?

100,000 குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை இரத்து செய்ததற்காகவும் குரங்குகள் பண்டமாற்று செய்யப்படுவதற்கானவை அல்ல என்பதை அங்கீகரித்ததற்காகவும் இலங்கை அரசாங்கத்திற்கு PETA எனப்படும் People For The Ethical Treatment Of Animals அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகளை அவர்கள் உயிரியல் மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபடுத்துவார்கள் என்பதால், அவை இறந்துவிடும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக PETA-வின் சிரேஷ்ட விஞ்ஞான ஆலோசகர் Dr. Lisa Jones-Engel தெரிவித்துள்ளார்.

குரங்குகள் சோதனைக்கூடங்களில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் என தெரிவித்து, அவற்றை ஏற்றுமதி செய்யும் திட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி முன்னதாக இலங்கை அரசாங்கத்திற்கு PETA கடிதம் எழுதியிருந்தது.

இதனிடையே, இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்த கருத்திற்கு எதிராக இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் (Wildlife and Nature protection Society of Sri Lanka ) உள்ளிட்ட 30 மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கு நேற்று(26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வனஜீவராசிகள் மற்றும் பாதுகாப்பு திணைக்களம் சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்காது என அறிவுறுத்தல்களை வழங்கியதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.

இந்த வழக்கு மீண்டும் 2023 ஜூலை 6 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

“தென்னாபிரிக்க பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையில்” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே, அவர் இதனை அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கையில் அமைப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழு சில வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகவும் தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தென்னாபிரிக்காவுடன் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை விதித்துள்ள நிபந்தனைகளில் இதுவும் ஒன்றென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வு குறித்தும், அதிகார பரவலாக்கம் குறித்தும் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் குறித்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு வார இறுதியில் இது குறித்து நாடாளுமன்ற விவாதங்கள் இடம்பெறும் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற நிதி குழுவிடம் குறித்த திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவற்றை தொடர்ந்து, இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – இரண்டு லட்சம் மேன்முறையீடுகள் – புறக்கணிக்கப்பட்ட ஏழைகள் !

‘அஸ்வெசும’ எனும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 190,000 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதன்படி, இதுவரை 188,794 முறையீடுகளும் 3,304 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்கு, பொது மக்கள், வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயற்படும் ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

 

‘அஸ்வெசும’ னும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் கீழ் மக்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் தனிப்பட்ட முறையில் கையளிப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.

இன்று (27)  காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியுடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.