28

28

இலங்கையின் சரக்கு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு !

இலங்கையின் சரக்கு ஏற்றுமதி வருமானம் வளர்ச்சியடைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​ கடந்த மே மாதத்தில் அது 16.6% அதிகரித்து 989.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

எனினும், 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 2023 மே மாதத்தில் 5.59% குறைந்துள்ளதாக புதிய தரவுகளிடன் படி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக இதுவரை 383,232 மேன்முறையீடுகள் !

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்து மக்களுக்கு உரிய முறையில் நன்மைகளை வழங்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி இன்று (28) அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பல தரப்பினரும் தாக்கல் செய்திருந்தனர்.

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக இதுவரை 383,232 மேன்முறையீடுகளும் 5,045 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன.

ஜூலை 10ம் திகதி வரை மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அவகாசம் உள்ளது.

இதேவேளை இலங்கையின் மலையகம் – வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் குறித்த நலன் குறித்திட்டத்தில் உள்வாங்கப்படாத மக்கள் தெருக்களில் இருந்து போராட்டங்களை மேற்கொண்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு !

வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று(28) புதன்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரின் பெற்றோர் காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்த போது இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அதேபகுதியைச் சேர்ந்த 23 வயதான அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் இன்று காலை தொழிலிற்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞர் பலி – யாழில் பலி !

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு ஐஸ் போதை பொருளை நுகர்ந்துள்ள நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொருளாதாரத்தை திவாலாக்கியதைப் போல வங்கித்துறையை திவாலாக்க அரசாங்கம் முயற்சி – சுனில் ஹதுன்நெத்தி

மூன்று நாள் வங்கி விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி அவர்கள் பொருளாதாரத்தை திவாலாக்கியதைப் போல வங்கித்துறையை திவாலாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

 

நிதித்துறையில் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் இது உள்நாட்டுக் கடனைக் குறைக்கச் செல்வதை விட அதிகமான பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறை என வர்த்தமானியில் வெளியிட்டு மூன்று நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்படாத பாரம்பரியத்தை அரசு உடைத்துவிட்டது. இந்த வங்கி விடுமுறைகள் ஏன் கொடுக்கப்பட்டது என வங்கித் தலைவர்கள் கூட அறியவில்லை. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு விவகாரம் வங்கித் தலைவர்களுடன் விவாதிக்கப்படவில்லை. .பிரான்ஸ் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியவுடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை விரைவில் மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வங்கித் துறையை பணயம் வைத்து நிதி ஸ்திரமின்மையை உருவாக்குவது இன்றைய காலத்தை விட எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், தனிப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் வணிக சமூகத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

6000 இற்கும் அதிக போதை வில்லைகளுடன் மூவர் கைது !

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 6000 இற்கும் அதிக போதை வில்லைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவ – லியனகேமுல்லயிலும் மன்னாரிலுமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லியனகேமுல்லயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 5488 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 52 வயதான சந்தேகநபர் புத்தளத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, 62 போதை வில்லைகளுடன் மன்னாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 மற்றும் 30 வயதான இருவர் மன்னார் – தோட்டவௌியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும் நெல் – கிளிநொச்சியில் விவசாயிகள் போராட்டம்!

உரிய நேரத்தில் அரசாங்கம் நெல்லுக்கான விலையினை அமுல்படுத்தப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமானது.

கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நெல் சந்தைப்படுத்தல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்ததுடன், அங்கு விவசாயிகள் தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

தற்பொழுது நெல் 48 தொடக்கம் 50ரூபாய்க்கே கொள்வனவு நடைபெறுவதாகவும், ஆனால் தமக்கு அறுவடை முடிவில் 85 ரூபாய் செலவினமாகக் காணப்படுவதாகவும்; விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபையினர் அவர்களின் களஞ்சியசாலைகள் அனைத்துமே வெறுமனே காணப்படுவதுடன், நெல் கொள்வனவு உரிய காலத்தில் உரிய விலையில் கொள்வனவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இதன்போது மகஜர்கள் மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் கையளிக்கப்பட்டன.