பாராளுமன்றம் தொடங்கி யாழ் பல்கலை வரை பாலியல் குற்றவாளிகள் !
கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத்தில் பணிபுரியும் சில பெண் ஊழியர்கள்இ பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில், “மூத்த அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பெண் ஊழியர்களை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். எனக்குக் கிடைத்த தகவலின்படி, சில சந்தேக நபர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு கட்டாய ஓய்வு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரிகள் அங்குள்ள பெண் ஊழியர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக செய்திகள் வந்துள்ளன” என்றார்.
எனினும் முஜிபுர் ரஹ்மானின் கருத்துக்கு பதிலளித்த ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை எனவும் ஊகத்தின் அடிப்படையில் எந்த கருத்துக்களையும் முன்வைக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டதனை அடுத்து சபை அமலி துமளியாகியது.
இதேவேளை அண்மையில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழக மாணவிகள் மீது பாலியல் ரீதியான – பாலின ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெறுவது பற்றியும் தனது விசனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.
அண்மையில், யாழ் பல்கலைக்கழகத்தில் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெற்றது . இதில் உரையாற்றிய துணைவேந்தர், பேராசிரியர் சி சிறிசற்குணராஜா, பால்நிலை வன்முறைகள் பல்கலைக்கழகங்களிலும் தலைதூக்கியுள்ளன. சில விரிவுரையாளர்கள் இரவு நேரங்களில் அவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இது சிக்கலான ஒரு பிரச்சினை எனவும் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள், வன்முறைகளால் பெண்கள் தொடர்ந்தும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். ஆயினும் அவை தொர்பான முறையான விசாரனைகளோ, சட்ட ரீதியான நடவடிக்கைகளோ இடம்பெறுவதில்லை. இது தொடர்பில் தேசம்நெற் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றது. இந்த பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கவனம் செலுத்துமா என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.