பா உ அர்ச்சுனாவை தேடி பிரச்சினைகள் வருகிறதா ? அல்லது பிரச்சினைகளை தேடி அவர் போகிறாரா ?
மீண்டும் போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக சென்றவேளை, அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகள் பொருத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த காணொளியில் பொலிசாருடன் தர்க்கம் செய்யும் பா உ இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டை தராதது அரசாங்கத்தின் பிழை. நீ என்ன படித்திருக்கிறாய்? சிங்கள எம்.பி ஒருவரை உன்னால் நிறுத்த முடியுமா? ஜனாதிபதி அனுர குமாரவின் வாகனத்தை நிறுத்துவியா? ஜனாதிபதி அனுரtpனால் தான் நாங்கள் சொந்த வாகனத்தில் பாராளுமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது என தனது ஆவேசத்தை வெளிப்படுத்துவதை அக்காணொலி காட்டுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதனிடையே பாஉ அர்ச்சுனா கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற அமர்விலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நேற்றைய தினம் பா உ அர்ச்சுனா தனக்கு பேசுவதற்கு நேரம் தரவில்லை என முறைப்பாடு செய்துள்ளார்.