வீட்டுக்குப் பக்கத்திலேயே பணியிடத்தை கேட்கும் அரச அதிகாரிகள் – ஆளுநர் வேதநாயகன் அதிருப்தி !

வீட்டுக்குப் பக்கத்திலேயே பணியிடத்தை கேட்கும் அரச அதிகாரிகள் – ஆளுநர் வேதநாயகன் அதிருப்தி !
அரசாங்க வேலை கிடைத்தவுடன் தமது வீட்டுக்குப் பக்கத்தில் பணியிடம் கேட்கும் போக்கில் மாற்றம் தேவை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவிலில் நேற்று இடம்பெற்ற (17.01.2025) வடக்கு மாகாண பொங்கல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விவசாயத்தை வருமானம் அதிகம் தரக்கூடிய துறையாக மாற்ற வேண்டும். இன்றைய இளையோருக்கு விவசாயத்தின் மீதான நாட்டம் குறைந்து வருகின்றது. அரசாங்க வேலையையே அவர்கள் கோருகின்றனர். ஓய்வூதியம் மற்றும் பணிச்சுமை குறைவான வேலை என அதை அவர்கள் தெரிவு செய்கின்றார்களோ தெரியவில்லை. குடும்பம் முக்கியமானது. அரச பணியைப் பெற்றுக்கொண்டால் அதையும் சிறப்பாக செய்யவேண்டும் என்றார்.
தாம் நிர்வாக சேவைக்கு நுழைந்த காலத்தில் தொலைத்தொடர்பு வசதிகளோ ஏனைய வசதிகளோ இல்லை என்றும் மிகக் கஷ்டமான காலத்திலும் மனநிறைவான, சந்தோசமாக பணியாற்றியதையும் குறிப்பிட்ட ஆளுநர் இன்று பல வசதிகள் இருந்தும் மக்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கவில்லை எனவும் வேதனை வெளியிட்டார்.
அரச அதிகாரிகளுக்கான வருடாந்த இடமாற்றங்கள் வடக்கின் அனைத்து அரச அலுவலகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடமாற்றங்கள் தொடர்பான விடயங்கள் பேசுபொருளாகியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற அபிவிருத்தி குழுகூட்டத்தில் பேசியிருந்த பா.உ ஜெகதீஸ்வரன், நகர்ப்புற ஆசிரியர்கள் பின்தங்கிய கிராமப்புறங்களுக்கு இடமாற்றம் பெற்று சேவையாற்ற செல்வது கிடையாது எனவும் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். வடக்குமாகாண வேலையில்லா பட்டதாரிகளும் அரச வேலை மட்டுமே செய்வோம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *