புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருட்கள் தற்போது எங்கிருந்து வருகின்றன ..? – ரவிகரன் எம்.பி கேள்வி
வட பகுதி எங்கும் விடுதலைப்புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் பாவனை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் அதிகரிப்பை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை என முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வடபகுதி எங்கும் புதுவிதமான பல போதைப்பொருட்கள் பெருகிவருவதாக மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். யுத்தம் மௌனிக்கப்பட்ட பிறகு, கடந்தகால அரசாங்கங்கள் எமது தமிழ் மக்களை அழிக்கும் நோக்கில் இந்த போதைப்பொருள் பாவனையை எமது பகுதிகளில் ஊடுருவச் செய்து வேடிக்கை பார்த்தனர் .
தற்போதும் பெரியவர்கள் முதல் இளையோர் வரை பெருமளவானோர் போதைப்பொருள் பாவனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசிடம் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.