ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு
இலங்கை அரசியலில் இருந்து விரைவில் விலகப் போவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரத்தில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை. தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன்” என தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு அனுராதபுரத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் காவல்துறையினரால் கைதான பா.உ அர்ச்சுனா, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஒருபுறம் இதுவரை ஜனநாயக தேர்தலில் வாக்களிக்காத ஒரு நபரை யாழ்ப்பாண மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். மறுபுறம் புலிகளின் காலத்தில் தான் ஒரேநாளில் எழுபத்து ஐந்து தடவைகள் கள்ள வாக்குகள் அளித்த சிறீதரனை தெரிவுசெய்துள்ளார்கள் என குறைபடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.