கழிவு நீரை வீட்டு வளவுகளுக்குள் விட்டதற்கு மேற்கு மீசாலை மக்களிடம் அதிகாரிகள் மன்னிப்புக் கோரினர் !
தாங்கிகள் கழுவிய இரசாயனங்கள் கிருமிகொல்லிகள் கொண்ட தண்ணீரை வீடுகளுக்குள் பரவவிட்டதற்காக நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மேற்கு மீசாலை மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அவர்களின் கிணறுகளையும் இறைத்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி 8ல் இக்கழிவு தண்ணீர் காணிகளுக்குள் விடப்பட்ட தகவல் தேசம்நெற்க்குத் தெரிவிக்கப்பட்டதும் ஊடகங்களின் தலையீடுகள் வரும் என்பதை உணர்ந்த அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு மறுநாளே தங்களுடைய தவறுக்காக மன்னிப்புக் கோரி பாதிக்கப்பட்டவர்களின் கிணற்றையும் இறைத்துக் கொடுத்தனர்.
எதிர்காலத்தில் இத்தண்ணீரை குழாயைப் பொருத்தி குடிமனைகள் இல்லாத பகுதிக்கு திசை திருப்புவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்துச் சென்றுள்ளனர். தங்களுடைய தவறை உணர்ந்து அதனைச் சரிசெய்ய முயன்றமையை அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.
ஆனால் இவ்வாறான திட்டமிடப்படாத பொறுப்பற்ற செயல்கள் தவிர்க்கப்பட்டால் தேவையற்ற செலவுகள் பாதிப்புக்களை குறைக்க முடியும். அதிகாரிகளும் பணியாளர்களும் வினைத்திறனுடன் செயற்திறனுடன் பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுடைய தவறைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுத்தமை பாராட்டத்தக்கது.