ஜனாதிபதி அனுர காலத்தில், நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழர்கள் நம்புகிறார்கள் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூஸிலாந்துத் தூதுவர் டேவிட் பின்னியிடம் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார மேம்பாடு தொடர்பிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநரிடம், தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பாகவும் அதன் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும், கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துவது தொடர்பிலும், நியூஸிலாந்துத் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார்.
பொருளாதார நெருக்கடியின் தாக்கம் வடக்கு மாகாணத்தில் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பிலும், வடக்கில் அதிகரித்துள்ள உயிர்கொல்லி போதைப் பொருள் பாவனை மற்றும் அதனது தாக்கங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டியதன் அவசியம், மீள்குடியேற்றம், உள்கட்டுமான அபிவிருத்தி தொடர்பிலும் ஆளுநர், தூதுக் குழுவினருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.