கஜாவின் அழைப்பை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி !
தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சிவிகெ சிவஞானத்திடம் வழங்கிய அழைப்பை தமிழரசுக் கட்சி புறக்கணிக்கின்றது. கடந்த 27ஆம் திகதி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடையே இடம்பெறவிருந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் தமிழரசுக்கட்சியினர் கலந்து கொள்ளாததால் கைவிடப்பட்டிருந்தது. தாங்கள் அடுத்த பெப்ரவரி 8 வரை தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக காத்திருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் தமிழ் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். ‘நாங்கள் முயற்சிகள் எடுத்தோம் தமிழரசுக் கட்சி ஐக்கியத்திற்குத் தயாரில்லை. எம் ஏ சுமந்திரன் ஐக்கியப்பட விடுகிறார் இல்லை’ என்று ஒரு கதையாடலை இதன் மூலம் அவிழ்த்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமைய போகிறது. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் உள்ள 19 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது ஒன்றிணைந்து வரவுள்ள ஒற்றையாட்சியை எதிர்க்க வேண்டும். கட்சிகள், உறுப்பினர்கள் மற்றும் கொள்கைகள் மீது பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதாக்கும் அரசியலமைப்பை தமிழ் மக்களாக நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஒற்றையாட்சி சிந்தனையோடு வரும் எந்த அரசியலமைப்பை ஏற்க முடியாது. சமஷ்டி தீர்வை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம். சமஷ்டி என்பதில் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாக சமஷ்டி தீர்வாகவே தீர்வுத்திட்டம் முன் வைக்கப்பட வேண்டும் என்றார்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் பேசியிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சமஷ்டி தொடர்பில் பெரிதாக நாம் அலட்டிக்கொள்ள போவதில்லை என்றும் மாறாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் தான் நாம் அதிக கவனம் செலுத்த முயற்சிக்கிறோம் என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது