பரீட்சை கட்டணத்தை நீக்கவும் – யாழ்.பா.உ ரஜீவன் பாடசாலைகள் நீதி கேட்கக் கூடாது !
வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் பரீட்சை கட்டணம் செலுத்துவதால் எதிர்நோக்கும் சிரமங்களை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் பாடசாலைகள் பெற்றோரிடம் மாணவர்களிடம் நிதி கேட்கக் கூடாது என முன்னர் ஆளுநர் வேதநாயகன் குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பா.உ ரஜீவன் அரசு கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியில், வருடாந்த நிதி ஒதுக்கீடு மூலம் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றார். இது அனைவருக்கும் இலவச கல்வியை உறுதிப்படுத்தும் வழி. 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில், வடக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த தேவையை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க இது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பரீட்சை கட்டணங்களால் மட்டுமன்றி பாடசாலை அபிவிருத்தி கட்டணம், அனுமதிக்கான அன்பளிப்பு கட்டணம் என பல வகைகளில் மாணவர்களின் பெற்றோரிடமிருந்து பாடசாலைகள் அறவிடுவதும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் அனைத்து நகர பாடசாலைகளிலும் வாடிக்கையாகியுள்ளது. புதிதாக மாணவர்களை உள்ளெடுக்கும் போது சில ஆயிரங்கள் என தொடங்கி லட்சம் ரூபாய் வரை அறவிடப்படுகின்றது. இதனால் திறமை இருந்தும் நகர மற்றும் வளங்கள் நிறைந்த பாடசாலைகளை மாணவர்கள் அணுக முடியாத ஓர் சூழல் உருவாகியுள்ளது. வறுமைக்குட்பட்ட மாணவர்களை உள்ளீர்க்கும் நோக்குடனேயே C.W.W கன்னங்கரா இலவச கல்வி செயற்திட்டத்தை கொண்டு வந்த போதும் கூட அக்கல்வி முறை ஏழைகளுக்கு இன்னமும் எட்டாக்கனியாகி வருகிறது.