தரமிழக்கும் இலங்கையின் இலவச மருத்துவ கல்வியும் – மருத்துவ சேவையும் !

தரமிழக்கும் இலங்கையின் இலவச மருத்துவ கல்வியும் – மருத்துவ சேவையும் !

வடக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் சிலர் கடமையாற்றுகின்றார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காலங்களில் இலவச மருத்துவமானது தனியார் வைத்தியசாலைகளாலும் – மருத்துவ மாஃபியாக்களின் கைகளிலும் சிக்குண்டு அதன் தரத்தை இழந்துவருவது தொடர்பில் பல தரப்பினரும் அதிருப்பதி வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ் மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைத்தனர்.

மேலும் மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று இலங்கையின் மருத்துவர்களாக தெரிவாகும் வைத்தியர்கள் கூட நாட்டிற்கான இலவச சேவையை வழங்காது நாட்டை விட்டு வெளியேறும் தொகை அதிகமாகுவதையும் அவதானிக்க முடிகிறது. நாட்டின் ஏனைய அரச துறை அதிகாரிகளுடன் ஒப்பிடும் போது அதிகமான சலுகைகளை பெறும் வைத்திய அதிகாரிகள் சிலர் தமது கடமை நேரத்தை துஷ்பிரயோகம் செய்வது தொடங்கி தனியார் வைத்தியசாலைகளை நோக்கி நோயாளர்களை ஊக்குவிப்பது வரையான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இலங்கையின் வைத்தியர்கள் தொடங்கி அரச ஊழியர்களில் பலர் பின்தங்கிய கிராமப் புறங்களில் பணியாற்ற தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தனது அதிருப்தியையும் அண்மையில் வெளியிட்டிருந்தார். நகர்ப்புறங்களில் பணியாற்றும் அரச அதிகாரிகள் கிராமப்புறங்களை எட்டியதும் இல்லை. மாறாக அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இவர்கள் இடமாற்றம் ஏதுமின்றி இருக்கின்றனர் என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

போரால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு பகுதியில் மனநல மருத்துவர்களின் தேவையும் அதிகமாக உள்ளது. இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மனநல மருத்துவர்களின் தேவை அதிகமாக உணரப்பட்டு வரும் நிலையில் 60 மருத்துவமனைகளிலேயே மனநல மருத்துவர்கள் உள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் முல்லைத்தீவுமாவட்ட மருத்துவமனைக்கு மனநல மருத்துவராக நியமிக்கப்பட்ட ஒருவர் குறித்த இடமாற்றத்தை நிராகரிக்க முற்பட்டு வருவதும் வைத்தியதுறையினரிடையே விசனத்தை ஏற்படுத்தி வருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *