அரசியல் மயப்படும் வாள்வெட்டு: தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் !
நேற்று சுன்னாகம் மற்றும் கொட்டடிப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு எதிராக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது இருவர் காயப்பட்டதாக தெரியவருகின்றது. சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு கடல்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் க இளன்குமரன் ஆகியோர் விரைந்து நிலைமைகளைப் பார்வையிட்டனர். தொலைபேசியில் அச்சுறுத்திவிட்டு பத்து நிமிடங்களுக்கு உள்ளாக வந்து இந்த வாள்பெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் உள்ளுரில் உள்ள சமூகப் பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இந்த சமூகவிரோத சக்திகளால் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இந்த சமூக விரோத சக்திகளுக்குப் பின்னால் இவர்களைப் பிணை எடுத்துவிடும் சட்டத்தரணிகளின் அரசியல் செல்வாக்கு இருப்பதாக நீண்டகாலமாகக் குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் யாழ் சித்தன்கேணியில் வன்முறைத் தாக்குதலை நடத்திவிட்டு தலைமறைவாகிப் பின்னர் சரணடைந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. சில மாதங்களுக்கு முன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்த மணிவண்ணனின் மான் அணியினர் நடத்திய கூட்டத்திலும் வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலும் அரசியல் காரணங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என முன்னாள் மேயர் மணிவண்ணன் குற்றம்சாட்டியிருந்தார். வட மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா தேசம்நெற்க்கு அன்றைய நாட்களில் வழங்கிய நேர்காணலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிணை எடுக்கும் ஆவா குழு உறுப்பினர்களைப் பயன்படுத்தவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
கிளிநொச்சியில் கள்ள மண் ஏற்றுபவர்கள், கள்ள மரம் வெட்டுபவர்கள், காசிப்பு காச்சுபவர்கள் எல்லோரும் தமழரசுக் கட்சி பா உ சிறிதரனுக்கு வேண்டப்பட்டவர்கள் என அப்பகுதிகளில் குற்றச்சாட்டுகள் உள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை பொதுக் கட்டமைப்பிற்குள் கொண்டுவருவதற்கு எடுத்த முயற்சிக்கு எதிராக இந்த சமூகவிரோத சக்திகளே ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
தான் தாக்கப்பட்டதற்கு சமூகவிரோத சக்திகளை அம்பலப்படுத்தியதே காரணம் என்றும் பொலிஸாரும் சமூகவிரோத சக்திகளும் இணைந்து செயற்படுவதாகவே மக்கள் நம்புகிறார்கள் என்றும் சூழலிலயல் ஊடகவியலாளர் மு தமிழ்செல்வன் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.
அண்மையில் பா உ இளன்குமரன் முன்னாள் பா உ அங்கஜனின் தந்தை காணி ஒன்றைப் பிடிக்க முயன்ற தகராற்றில் அவரோடு முரண்பட்ட காணொலி ஒன்று வெளியாகி இருந்தது. அதன்பின் சுன்னாம்புக்கல் கடத்த முயன்ற சம்பவத்தை இளன்குமரன் அம்பலப்படுத்தியதும் தெரிந்ததே. இந்தக் காரணங்களின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியை அரசியல் ரீதியில் பழிவாங்கா முடியாமல் அடியாட்களை ஏவி வன்முறையை அரசியல்மயப்படுத்தும் போக்கு வடக்கில் ஆரம்பமாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகட்டங்களிலும் கள்ளக் கடத்தல், தெருச்சண்டித்தனங்களில் ஈடுபட்டவர்களே போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களிடம் அரசியல் தெளிவு இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்த முடிவைச் சந்தித்ததற்கு இவைகளும் ஒரு காரணம். இன்று மீண்டும் சமூகவிரோத சக்திகளிடமே தமிழ் தேசிய அரசியல் போய் சரணடைந்துள்ளது. ஆவா குழுவில் உள்ள பிரசன்னா முதல் பல்கலைக்கழகத்தில் உள்ள ரகுராம் வரை தங்கள் சமூகவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க தமிழ் தேசியம் போர்த்துவதே அவர்களுக்குப் பாதுகாப்பு. ஆனால் மக்களுக்கும் மாணவிகளுக்கும் சீரழிவு.