28

28

மே தின கூட்டங்களுக்காக மக்களை திரட்ட சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடும் இலங்கை கட்சிகள் !

பிரதான அரசியல் கட்சிகள் தமது அதிகாரத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் மே தினக் கூட்டங்களில் அதிகம் மக்களை பங்குபற்ற செய்வதற்காக சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாக கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு, பிரதான அரசியல் கட்சிகள், மே தினக் கூட்டங்கள் மூலம் தமது அதிகபட்ச அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில், மே தினத்தில் இவ்வளவு பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மே பேரணிகளில் பங்கேற்கும் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பயண வசதி செய்து கொடுக்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் பேருந்துகளுக்கும் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படும்.

இந்தத் தொகையுடன், மே பேரணி நடைபெறும் இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள், கட்-அவுட் அலங்காரங்கள், மேடைகள், ஒலிபெருக்கிகள் அமைக்க பல இலட்சம் செலவை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளவுள்ள

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் கொழும்புக்கு வரவுள்ளன.

மேல் மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கு ஒரு பேருந்துக்கு 30,000 முதல் 35,000 ரூபாய் வரையிலும், அனுராதபுரம் போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்து கொழும்பு வரும் பேருந்துக்கு 1,50,000 ரூபாய் வரையிலும் கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவருக்கு மதிய உணவுக்கு 300 முதல் 450 ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது

இதற்கு முக்கிய அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்படும் பணம் போதாது என்பதால், தொகுதி அமைப்பாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் பணம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வல்லவராகவும் நல்லவராகவும் தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியே தமிழ் மக்களின் வெற்றியாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஒப்பீட்டளவில் வல்லவராகவும் நல்லவராகவும் தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேணடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமகால அரசியல் நிலவரங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சு சார்ந்த முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பிலும், அவை சரியான முறையில் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் வகையில் குறித்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

 

அதன்போது, தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடைய செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பான விமர்சனத்தினையும் முன்வைத்துள்ளார்.

 

அத்தோடு, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவலங்களையும் அரசியல் கோஷங்களாக பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்கள், தமது நலன்களுக்காக தமிழ் மக்களை இன்னுமொருமுறை பலிக்கடாவாக்க முனைகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும், இவ்வாறான முட்டாள்தனமான முயற்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட குழுக்களினாலும் மிதவாத தமிழ் தலைமைகளினாலும் பலமுறை முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவற்றினால் எமது மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை என்றும் மாறாக மீளமுடியாத பின்னடைவுகளையே ஏற்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தமிழ் கலவன் பாடசாலையை முஸ்லிம் பாடசாலை என மாற்ற முயற்சி..? – மாகாணக் கல்வித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு !

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் (அ.த.க) பாடசாலையின் பெயரில் எந்தவித மாற்றமுமில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் இதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறும் பணப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் நியமனம் வழங்கப்பட்ட கல்லூரியின் தற்போதைய அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற முத்திரையை பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதாவது இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் பெயர் மாற்ற சர்ச்சை: கல்வித் திணைக்களம் விடுத்துள்ள பணிப்புரை | There Will Be No Change In The School Name

எனினும் அந்தப் பாடசாலையின் அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பதவி முத்திரையைப் பயன்படுத்தி கையொப்பம் இட்டிருந்தமை மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை சரியானது என்பதையும் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்று பயன்படுத்துவது தவறென்பதையும் கல்வித் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ் பொதுவேட்பாளர் மண் கவ்வுவார் ! கொன்சவேடிவ் கட்சி தொழிற்கட்சிக்கு வாக்களியாதீர்கள் !

அண்மையில் நடைபெறவுள்ள இங்கிலாந்தின் உள்ளூராட்சி தேர்தலில் மக்களின் தெரிவு எவ்வாறானதாக இருக்க வேண்டும்..? இங்கிலாந்தின் உள்ளூராட்சி தேர்தலில் பாலஸ்தீன் – இஸ்ரேல் போரின் தாக்கம் வெளிப்படுமா என்கின்ற விடயத்தில் தொடங்கி இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் அதில் தமிழர்களின் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும் – பொதுவேட்பாளர் என்ற மாய விம்பம் தொடர்பிலும் – பொதுவேட்பாளரை நிறுத்துவதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் சமூக – அரசியல் செயற்பாட்டாளர் ஏ.ஆர்.சிறீதரனுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் சமகால அரசியலை அடிப்படையாக கொண்ட பரபரப்பான நேர்காணல்…

இது தொடர்பான தேசம்திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் நெய்யவும் !

தமிழர்களுக்கு ஏன் பொது வேட்பாளர் தேவை..? – சிவஞானம் சிறீதரன் விளக்கம் !

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல துணை ஜனாதிபதியாக கூட தெரிவுசெய்யப்பட முடியாதென்பதை அறிந்துதான் அனைவரும் செயற்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு பொது வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல.

வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் இந்த பொது வேட்பாளர் மூலம் உலகறியச் செய்யப்பட வேண்டும். தமிழர்கள் தங்களது பாரம்பரிய பூமியில் இறைமையோடு வாழ்ந்தவர்கள் அத்தோடு அவர்களுக்கு அவர்களது இறைமையை மீட்டுக்கொடுக்கும் வகையிலான சமஷ்டித் தீர்வினை இந்த பொது வேட்பாளர் முன்வைப்பார்.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான ஒருகளமாக நாங்கள் இந்த ஜனாதிபதி  தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கான ஆதரவைக் கேட்போம்.

எங்கள் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகவே பொது வேட்பாளர் களமிறக்கப்படுவதைத் தமிழர்கள் பார்க்கின்றார்கள். தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல துணை ஜனாதிபதியாக கூட தெரிவுசெய்யப்பட முடியாதென்பதை அறிந்தேதான் எல்லோரும் செயற்படுகின்றார்கள்.

இங்கு முக்கியமானது தமிழர்கள் தங்களது அபிலாஷைகளுக்கான அங்கீகாரத்தை இந்த பொது வேட்பாளர் மூலம் கோருகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் விவாகரத்துக்களின் எண்ணிக்கை !

பல்வேறு காரணங்களால் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின்னர் விவாகரத்து (பிரிந்து செல்லும்) போக்கு அதிகரித்து வருவதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) சட்டத்தரணி திருமதி லக்க்ஷிகா கணேபொல தெரிவித்தார்.

பொருளாதாரக் காரணங்களும் பிற சமூகக் காரணங்களும் இதில் வேரூன்றியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

இறப்பு எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் 140,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 180,000 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பிறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக பிரதிப் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சராசரியாக, 2020 ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 280,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது – சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாராயின் சாத்தியமான நிலைமைகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு, தமிழ் மக்கள் எதிர்ப்பு வாக்கு அரசியலில் இருந்து மீள்வதுடன் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு எமது  உரிமைகளை பெற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வல்லமை அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் தேர்தல் காலங்களில் எவ்வாறு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவது என்பது தொடர்பான இக்கலந்துரையாடலின் பின்னர் அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது :

தமிழ் பேசும் மக்கள் இவ்வளவு காலமும் எதிர்ப்பு வாக்குகளில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இனிவரும் காலங்களில் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு தமது உரிமைகளை பெற முடியும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. நானும் அதை வரவேற்பேன். ஆனால், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்துவது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமற்ற விடயம்.

ஏனெனில், தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால், அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பது கேள்வியே.

தமிழ் பொது வேட்பாளரை நியமிக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும்.

ஆகவே, தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு வாக்கு அரசியல் முன்னெடுப்பதை நிறுத்தி, தெற்கு மக்களுடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவார்களாயின், தமிழ் மக்கள் சார்ந்து பிரச்சினைகளின் சாதகமான நிலைப்பாட்டினை அடைய முடியும் என அவர் தெரிவித்தார்.