03

03

காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட விவகாரம் – மன்னிப்பு கோரினார் இஸ்ரேலிய ஜனாதிபதி !

காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளை, இத்தாக்குதல் ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

 

காஸாவில் இஸ்ரேல் திங்கட்கிழமை (01) நடத்திய தாக்குதலால் தனது ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் எனும் தொண்டு நிறுவனம் நேற்று தெரிவித்தது.

 

இதையடுத்து காஸாவில் தனது பணிகளை இடைநிறுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அவுஸ்திரேலியா, போலந்து, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களுடன்; அமெரிக்க கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் மற்றும் பலஸ்தீனியர் ஒருவர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஹேர்ஸி ஹலேவி தெரிவித்துள்ளார்.

 

‘இச்சம்பவம் ஒரு கடுமையான தவறு. அது நடந்திருக்கக் கூடாது’ என அவர் கூறியுள்ளார்.

 

இதேவேளை, இத்தாக்குதல் தொடர்பான தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்கும் மன்னிப்பு கோருவதற்காகவும் வேர்;ல்ட் சென்ட்ரல் கிச்சன் நிறுவனத்தின் தலைவர் ஜோஸ் அன்;ரெஸுடன் தான் உரையாடியதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹேர்ஸோக் தெரிவித்துள்ளார்.

 

இத்தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதல்ல என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளார். எனினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. இது ஒரு துயர சம்பவம் எனக் கூறியுள்ள அவர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளார். பொதுமக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொண்டு நிவாரண ஊழியர்களை பாதுகாப்பதற்கான போதிய நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்ளவில்லை எனவும் பைடன் கூறியுள்ளார்.

 

இச்சம்பவத்தை கண்டித்துள்ள ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ், இந்த யுத்தத்தில் மனிதாபிமானப் பணியாளர்கள் 196 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

 

உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தின் அவசியத்தை இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

தாய்வானை தாக்கிய பூகம்பம் – தொடரும் மீட்பு பணிகள்!

தாய்வானை தாக்கிய பூகம்பம் காரணமாக127 பேர் மற்றும் சுரங்கப்பாதைகள் மற்றும் இடைநடுவில் பேருந்ர்களிலும் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஹ_வாலியனில் மலைகளிற்கு அடியில் உள்ள ஜின்வென் கிங்சூய் சுரங்கப்பாதைகளில் 77 பேர் சிக்குண்டுள்ளனர் என தீயணைப்புதுறையினர் தெரிவித்துள்ளனர்.

டராகோ தேசிய பூங்காவில் உள்ள சொங்டே சுரங்கப்பாதைக்குள் ஜேர்மனியை சேர்ந்த இரண்டு சுற்றுலாப்பயணிகள் சிக்குண்டுள்ளனர்.

 

இதேவேளை டராகோ தேசிய பூங்காவில் இருந்து பயணித்துக்கொண்டிருந்த பேருந்துகளில் 50 சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை பயன்படுத்தும் இலங்கையின் 5 லட்சம் மக்கள்!

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

 

இன்று (3) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார இதனை தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு வகையான போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். இது தவிர, புதிய வகையான போதை மாத்திரைகளும் சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் இவ்வாறான போதை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.

 

இந்நிலையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 25 வகையான இரசாயனப் பொருட்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் அவற்றினால் புதிய வகையான போதை மாத்திரைகளை தயாரிக்க முடியும். எனவே இந்த இரசாயனப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதற்கு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அனமதி அவசியம் என்றார்.

 

“இழக்கப்படுகின்ற கல்வி உரிமைகளை வென்றெடுப்போம்!” – யாழ் வருகின்றார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க !

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஆசிரியர்களின் அபிமானமிகு வடமாகாண மாநாடு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பின் மாநாடு ஆகிய இரு நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளார்.

 

குறித்த மாநாடானது, நாளைய தினம் (04.04.2024) இடம்பெறவுள்ளது.

 

அதன் முதல் நிகழ்வாக ஆசிரியர்களின் அபிமானமிகு வடமாகாண மாநாடு பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டல் சங்கிலியன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

“இழக்கப்படுகின்ற கல்வி உரிமைகளை வென்றெடுப்போம்! ஆசிரியர் – மாணவர்களின் உரிமைகளை வென்றெடுப்பது எப்படி?” எனும் கருப்பொருளில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாநாட்டில் அச்சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க மற்றும் தேசிய அமைப்பாளர் தோழர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதனையடுத்து யாழ்ப்பாண மாவட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பின் மாநாடு பிற்பகல் 6.30 மணிக்கு ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

 

இந்த மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் வசந்த சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர்,வங்கி மற்றும் நிதி அமைப்பின் உறுப்பினர்களான தோழர் சமீர அல்விஸ், தோழர் சதானந்தம் நேசராஜன் மற்றும் தோழர் பூலோகராஜா சிறிதரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் இறுக்கமான வகையில் போக்குவரத்து நடைமுறைகள்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று (03) முதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

யாழ்ப்பாணக் குடாநாட்டின் போக்குவரத்தைச் சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

 

யாழ்ப்பாணத்தில் தலைக்கவசம் இல்லாமல் வாகனங்களைச் செலுத்துகின்றவர்கள், தொலைபேசிகளை பேசியப்படி வாகனங்களை செலுத்துபவர்கள், பாதசாரிகள் கடவைகள் இருக்கத்தக்கதாக அதற்கு அருகாக வீதியைக் கடக்கின்றவர்கள், வீதிகளில் வாகனங்களின் பயணப்பாதையில் எச்சில், வெற்றிலை என்பனவற்றைத் துப்புகின்றவர்கள், போக்குவரத்து ஒழுக்க மீறல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது இன்று முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

 

அத்துடன், பாடசாலைகள், கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அருகாகவும் நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்று முதல் பலப்படுத்தப்படுகின்றன.

 

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வுத் திட்டத்தை இந்த வருடமும் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் சீரானதும் ஆரோக்கியமானதுமான போக்குவரத்தை மேற்கொண்டு, தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என தெரிவித்தார்.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது 24 பேர் ஒரே வருடத்தில் பலி !

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது 24 பேர் கடந்த வருடம் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

 

மேலும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் 44 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கடந்த வருடம் ஆணைக்குழுவுக்கு 9,714 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை. -பேராசிரியர் சரித ஹேரத்

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை.ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

 

கொழும்பில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்ட நடவடிக்கைகள் நிறைவுப் பெறும் வரை எந்த தேர்தலையும் நடத்த போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.

 

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் செயற்பாடுகள் எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவடைவதாக குறிப்பிடப்படுகிறது.பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

 

எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதற்கு முன்னர் எந்த தேர்தலும் நடத்தப்படாது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு தான் ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை.ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

 

தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் முன்னெடுக்கும்.

 

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என்றார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான மூவர் மூவரும் 35 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் !

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து, விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் 35 ஆண்டுகளின் பின்னர் இன்று(03) இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

 

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இன்று(03) காலை அழைத்துவரப்பட்ட குறித்த மூவரும் சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

 

தற்காலிக விசாவில் குறித்த மூவரும் நாட்டிற்கு வருகை தருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

இதனிடையே, முருகனை அவரது துணைவியார் நளினி சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்து வழியனுப்பினார்.

 

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியனும் இவர்களுடன் இலங்கைக்கு பயணிக்கின்றார்.

 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 3 தசாப்தங்களாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாங்கள் 1956 ஆம் ஆண்டு எங்கே இருந்தோமோ, இப்போதும் அங்கேயே இருக்கின்றோம். – சி.வி.விக்கினேஸ்வரன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை காலமும் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பர் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கி, தமிழர் வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் விக்கினேஸ்வரன், இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

 

எனது நண்பரான வஜிர அபேவர்தன ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளராவார். எனவே பதவியில் உள்ள ஜனாதிபதியை வெற்றியடையச்செய்வதற்கு அவரால் வேறு எதைக் கூறமுடியும்? ஆனால் அவர் தமிழர்கள் என்ற கோணத்திலிருந்து நாம் முகங்கொடுக்கும் பிரச்சினையைப் பார்த்தால், இவ்வாறு கூறமாட்டார்.

 

தமிழர்களாகிய நாம் இதுவரையில் பெரும்பான்மையின சமூகத்தைச்சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் எமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்தனர்.

 

ஆனால் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அவர்களுக்கு எம்மைத் தெரியவே இல்லை. அவர்கள் வெகு இலகுவாக எம்மைப் புறக்கணித்துவிட்டனர். நாங்கள் 1956 ஆம் ஆண்டு எங்கே இருந்தோமோ, இப்போதும் அங்கேயே இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.

 

இலங்கையில் இன்றளவிலே இனத்துவப்போக்கு நிலவுகின்றது. சிங்களவர்களால் தெரிவுசெய்யப்படும் சிங்களவர்களுக்கான சிங்கள அரசாங்கமே இயங்குகின்றது.

 

தமிழர்கள் இந்த மண்ணில், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றனர் என்ற உண்மை சிங்களவர்களால் ஏற்கப்படவில்லை. பிரித்தானியர்கள் நிர்வாகத்தேவைகளுக்காக நாட்டை ஒன்றிணைத்தனர்.

 

இருப்பினும் அவர்கள் வெளியேறும்போது எமக்கு சமஷ்டி அரசியலமைப்பை வழங்கியிருக்கவேண்டும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வியை நிறைவுசெய்துகொண்டு 1926 ஆம் ஆண்டு நாடு திரும்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சமஷ்டி அரசியலமைப்பையே வலியுறுத்தினார். கண்டிய சிங்களவர்கள் டொனமூர் ஆணைக்குழுவிடம் சமஷ்டி அரசியலமைப்பையே கோரினர். ஏனெனில் கண்டிய சிங்களவர்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமைக்கான சட்டபூர்வ அதிகாரம் தமக்கு வேண்டுமெனக் கருதினர்.

இவ்வாறானதொரு பின்னிணயில் வட, கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறங்கினால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவாகமாட்டார் என்பது உண்மையே. தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்குவது தமிழர்களின் வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்ற தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது.

 

ஆனால் மிகப்பொருத்தமான தமிழ் வேட்பாளரொருவர் களமிறக்கப்பட்டால், தமிழ்மக்கள் அனைவரும் பெரும்பான்மையின வேட்பாளருக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக, அத்தமிழ் பொதுவேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். தமிழர்கள் மிகநீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

 

எனவே இதுவரை காலமும் சிங்கள அரசியல்வாதிகளால் தமிழ்மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதற்கு இது மிகச்சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். அதிகாரம் மிக்க இடத்திலிருந்து தமிழர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது மிகமுக்கியமானதாகும்.