21

21

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1,700 ரூபா – மலையக நகரங்களில் போராட்டங்கள் !

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1,700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் இன்று (21) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிவில் அமைப்புகள் மற்றும் நகர வர்த்தகர்கள் தரப்பில் இருந்தும் பேராதரவு வழங்கப்பட்டது.

நகர் பகுதிகளில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன். நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், கொட்டகலை, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, டயகம, அக்கரப்பத்தனை, நானுஓயா, இராகலை உள்ளிட்ட நகரங்களில் இ.தொ.காவின் ஏற்பாட்டில் சம்பள உயர்வுக்கான அழுத்தம் கொடுக்கும் போராட்டங்கள் இடம்பெற்றன.

பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, ஹாலிஎல, ஹப்புத்தளை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது.

கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி, புசல்லாவ, மடுல்கலை, உளுகங்கை, ரங்கல உள்ளிட்ட பகுதிகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பின்னவல, கஹாவத்தை, இறக்குவானை உள்ளிட்ட நகரங்களிலும், மாத்தளை நகரில் மற்றும் களுத்துறை மத்துகம பகுதியிலும், அவிசாவளை உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றன.

இ.தொ.காவின் அரசியல் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், தொழிலாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலர் போராட்டங்களில் பங்கேற்றிருந்தனர்.

ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் தங்கியிருந்த ஈராக்கிய தளமொன்றின் மீது தாக்குதல் – பின்னணியில் அமெரிக்கா ..?

ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் தங்கியிருந்த ஈராக்கிய தளமொன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ள அதேவேளை இந்த தாக்குதலை மேற்கொண்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈராக் இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள முன்னாள் ஈரான் ஆதரவு குழுவான ஹசெட் அல் சபியின் தளத்தின் மீது வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் இடம்பெற்றதாக ஈராக்கின் உள்துறை அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களில் மூன்று ஈராக்கிய படையினரும் உள்ளனர் .

விமானதாக்குதலே இடம்பெற்றது என ஈராக் அதிகாரிகள் இருவர் குற்றம்சாட்டியதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர் இழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹசெட் அல் செபி அமைப்பு தனது பகுதிகள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஈராக்கிய படையினர் யார் தாக்குதலை மேற்கொண்டனர் என்பதை தெரிவிக்கவில்லை ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றதா என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தவில்லை..

இதேவேளை அமெரிக்கா இந்த தாக்குதலை தான் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

ஈராக்கின் மீது குறித்த தினத்தில் தாக்குதலை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் அமெரிக்க படையினர் தாக்குதலை மேற்கொண்டனர் என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் பொய்யானவை எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஐஎஸ் அமைப்பிற்கு  எதிராக போரிடுவதற்காக உருவாக்கப்பட்ட ஹசெட் அல் சாபி அமைப்பு தற்போது ஈராக்கிய இராணுவத்தின் ஒரு பிரிவாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலோடு தொடர்புடைய சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் !

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலோடு தொடர்புடைய சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்று 5 வருட நினைவுதினத்தை முன்னிட்டு சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி சமூக செயற்பாட்டாளர்கள் ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து காந்தி பூங்காவின் முன்னால் பொதுமக்கள் அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்றுதிரண்டனர்.

‘அரசே கொலையாளிகளை மறைக்காதே’, ‘குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது செய்’, ‘சர்வதேசமே மெனத்தை கலைத்து ஈஸ்ரர் குண்டுவெடிப்பின் நீதியை தா’, ‘வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’, ‘ஐ.நாவில் வழங்கிய வாக்குமூலம் என்னாச்சு’, ‘5 ஆண்டு கடந்தும் அவலத்துக்கு நீதி இல்லையா?’ போன்ற சுலோகங்கள் ஏந்தியும், கோஷம் எழுப்பியும் சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நாட்டினை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வெலிமடை அம்பகஸ்தோவ பொது விளையாட்டரங்கில் இன்று (21) இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி நிவாரணம் வழங்கும் 2024 தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், முழு நாட்டையும் உள்ளடக்கிய குறைந்த வருமானம் பெறும் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் பத்து கிலோ அரிசி வழங்கப்படும்.

பதுளை மாவட்டத்தின் பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 191,548 பயனாளி குடும்பங்கள் அரிசி மானியம் பெறத் தகுதி பெற்றுள்ளன. ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வின் அடையாளமாக இன்று 25 பயனாளிகளுக்கு ஜனாதிபதியின் கைகளால் அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“இன்று இந்நாட்டு மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் புத்தாண்டை கொண்டாடுவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழ்நிலையில் நாடு இருந்தது. கடந்த காலங்களில் தேவையான எரிபொருள், எரிவாயு, உரம் போன்றவற்றை வழங்க முடியாமல் மிகவும் கடினமான சூழலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

நான் 2022 தமிழ், சிங்கள புத்தாண்டை கம்புருகமுவ பிரதேசத்தில் கழித்தேன். அங்குள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக மக்கள் இரவு வரை காத்திருப்பதைக் கண்டேன். ஆட்சியாளர்களை மக்கள் கடுமையாக குற்றம் சாட்டினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து இன்று நாடு அடைந்திருக்கும் முன்னேற்றத்தை சிலருக்கு நினைத்துக்கூட பார்ப்பது கடினமாக உள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அந்த முடிவுகள் மக்கள் விரும்பாத முடிவுகள் என்றே சொல்ல வேண்டும்.

முன்னர் இந்த நாட்டின் அரசாங்கங்கள் ஒரு கட்சிக்கு உரிதானதாகவே இருந்தன. இது தவிர இரண்டு அல்லது மூன்று கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும். ஆனால் இந்த அரசு அப்படியானதல்ல. ஐக்கிய தேசியக் கட்சியில் நான் மட்டுமே இருந்தேன். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி என அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்தனர். அந்த அரசாங்கம் நாட்டின் தேவைக்காகவே உருவாக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சிலர் கூறினர்.

எப்படியிருந்தாலும், நாட்டு நலனுக்கான நோக்கங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினோம். அதற்காக பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆளுநர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பெரும் சேவை செய்துள்ளனர். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டதால்தான் இன்று இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று, சுற்றுலா வணிகம் எதிர்பாராத வகையில் வளர்ச்சியடைந்து வருகிறது. அதன் மூலம் மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. மேலும், கிராமப்புற பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். அந்த பணம் இன்று அரச மற்றும் தனியார் துறைகளில் சம்பள உயர்வு மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி நாம் அனைவரும் கடினமான காலங்களில் கஷ்டப்பட்டோம். இன்று நாடு அபிவிருத்தியடைந்து வருகின்ற போதிலும் ஒரு பிரிவினர் இன்னமும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி , தொழிற்துறை வீழ்ச்சி, வேலை இழப்பு போன்ற காரணங்களால் இன்னும் பலர் சிரமத்தில் உள்ளனர்.

நாட்டின் வளர்ச்சியின் பயனை அனைவரும் பெற வேண்டும். எனவே, அஸ்வெசும திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பலனை மூன்று மடங்காக உயர்த்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அத்துடன் தமிழ், சிங்கள, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தலா 10 கிலோ அரிசியை இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த அரிசியை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து வாங்கவில்லை. சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து. இவற்றை வாங்கும் போது சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். அப்போது அந்த சிறு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் கட்டியெழுப்புவதில் யாரையும் கடந்து செல்வதற்கோ அல்லது விட்டு விடவோ நாம் தயாரில்லை. எனவே, நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று, சுற்றுலாத்துறை மூலம் கிராமங்களுக்கு பணம் கிடைக்கிறது. மேலும், விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. வலுவான ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று சொல்ல வேண்டும்.

மேலும், பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 இலட்சம் பேருக்கு இலவச காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பில் உள்ள 50,000 குடியிருப்புகளின் உரிமையை அந்த மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேளையில் நாம் அரசியல் ரீதியாக பிளவுபடக்கூடாது. நாம் பிரிந்திருந்தால் இன்று நாட்டில் இந்த முன்னேற்றத்தை காண முடியாது. கட்சி அரசியலை மறந்து முன்னேற வேண்டும். அத்துடன், இந்த ஊவா பிரதேசத்தின் அபிவிருத்திக்காக சில பாரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இன்று வழங்கப்படும் இருபது கிலோ அரிசியின் பலன் இந்த மக்களுக்கு மிகவும் பெறுமதியானது. ஆனால் இந்த பலன்களை நீண்ட கால அடிப்படையில் மக்களுக்கு வழங்கக்கூடாது. ஜனாதிபதியின் பொருளாதாரத் திட்டத்தின்படி, மக்கள் மீண்டும் எழுந்து நிற்பதற்கு அதிக காலம் எடுக்காது.

மக்களின் கைகளுக்கு அதிக வருமானத்தை கொண்டு வரும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி தற்போது செயற்பட்டு வருகின்றார். அதனை உலகில் யதார்த்தமாக்கி வருகிறார்.

இதன் விளைவாக, இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வங்குரோத்தடைந்த நாட்டை மீட்டெடுக்க முடிந்தது. மேலும், மக்களின் சிரமமான வாழ்க்கைச் சூழலிலிருந்து காப்பாற்ற 15,000 ரூபாய் “அஸ்வெசும” மூலம் வழங்கப்பட்டது. மேலும், மக்களுக்குத் தேவையான காணிகள் “உறுமய” திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இவை வாய்ப்பேச்சிற்கு வழங்கிய வாக்குறுதிகள் அல்ல. கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி விதைத்த யதார்த்தம் இதுதான்.” என்று தெரிவித்தார்.

தமிழரசு கட்சி தேர்தலையே ஒற்றுமையாக நடத்த முடியாதவர்கள் தான் பொதுவேட்பாளர் பற்றி பேசுகிறார்கள் – பிள்ளையான்

சிறுபான்மை மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது காலத்திற்கு பொருத்தமில்லாத செயற்பாடாகும் என இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கிராமத்தில் இன்று (20) மாலை நடைபெற்ற சித்திரை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதிக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதாக ரணில் அறிவித்துள்ளார். நாட்டில் அடுத்த தலைவர் யார் என்ற பலமான கேள்வி இருக்கின்றது.எமக்கான தலைவரை தேர்வு செய்வதற்கு அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்குரிய திட்டங்களை நாங்கள் தீட்டியுள்ளோம்.

தற்போது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களை மையப்படுத்தியதாக பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற தகவல்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்த பொது வேட்பாளர் தொடர்பில் நாங்கள் ஆழமாக ஆராய வேண்டும். யாரும் அரசியலுக்காக கருத்துக்களைச் சொல்லலாம். இவ்வாறானவர்கள் முன்னரும் வடகிழக்கிலுள்ள சிறுபான்மை மக்களை ஒற்றுமைப்படுத்துவோம் என சொல்வார்கள், அதனைச் செயல்படுத்த முடியாமல் போய்விடும்.

இதற்கு நல்ல உதாரணம் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய தேசியமாநாடும், அதன் தலைவர் தெரிவும். இலங்கை அரசிடமிருந்து தீர்வு பெற்றுத் தருவோம் என்றவர்கள், அதன் நீதித்துறையின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

கட்சிக்குள்ளேயே ஒரு அமைப்பை ஒன்றுபடுத்த முடியாத தலைவர்கள் நாம் மட்டுமே தான் என சிந்திக்கின்ற யாழ்ப்பாணத்து தலைவர்கள், இந்த மண்ணுக்கும் இந்த நாட்டுக்கும் ஒன்றையுமே பெற்றுக் கொடுக்கவுமில்லை, பெற்றுக் கொடுக்கப்போவதுமில்லை.

அந்த அடிப்படையில் பொது வேட்பாளர் என்ற கருத்தும் அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கின்றார்கள். அது வெற்றிபெற முடியாத, திட்டமிடல் இல்லாத ஒரு கற்பனை.அவர்கள் ஒலிவாங்கிகளுக்கு முன்னால் கருத்துக்களை வெளியிடும் ஒரு புரளியாகும்.

எனவே சிறுபான்மை மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது காலத்திற்கு பொருத்தமில்லாத செயற்பாடாகும்.”என அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கியதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை வேலையிலிருந்து நீக்கிய கூகுள் !

நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இஸ்ரேல் அரசுக்கு ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குவது தொடர்பாக 1.2 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர்த் தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இஸ்ரேல் ராணுவத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிகள் வழங்குவது நியாயமற்றது என்று கூறி, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த செவ்வாய்க்கிழமை, நியூயார்க், கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் சில ஊழியர்கள் 10 மணி நேரத்துக்கு மேல் எதிர்ப்பு போராட்டம் செய்தனர். கூகுள் நிறுவனத்தின் புகாரையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 9 பேரை காவல் துறை கைது செய்தது.

இந்நிலையில், மறுநாள் புதன்கிழமை கூகுள் நிறுவனம் அதன் 28 ஊழியர்களை நீக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்புப் பிரிவின் தலைவர் கிரிஸ் ராக்கோ இது குறித்து ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தப் போராட்டத்தில் தொடர்புடைய 28 பேர் நிறுவனத்திலிருந்து நீக்கப்படுகின்றனர். இத்தகைய செயல்பாடுகளை கூகுள் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் ஸ்மார்ட் எதிர்காலம் நடமாடும் சேவை நிகழ்வு – கலந்துகொள்ளாது புறக்கணித்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மன்னாரில் ஸ்மார்ட் எதிர்காலம் நடமாடும் சேவை நிகழ்வை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை மன்னார் நகரசபை மைதானத்தில் இரண்டு நாட்கள் இடம் பெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவையின் முதல் நாள் நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் நேற்று (20)இடம்பெற்றுள்ளது.

நடமாடும் சேவையில் 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் உள்நாட்டு தொழில் முறைமையிலான வேலை வாய்ப்புகளும் குறித்த நடமாடும் சேவையின் ஊடாக வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த நிகழ்வில் வன்னி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ் நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன்,வினோ நோர்தனாதலிங்கம், எவரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்ததுடன் முன்னால் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் குலசிங்கம் திலீபனும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

வடமாகாண வைத்தியசேவையை முன்னெடுப்பதில் ஆளணி பற்றாக்குறை – வடக்கு ஆளுநரிடம் முறைப்பாடு!

வடமாகாண சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

 

இந்த நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

 

வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கும், ஆளுநருக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சுகாதார சேவையை முன்னெடுப்பதில், மாவட்ட ரீதியில் காணப்படும் இடர்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

 

சில பகுதிகளில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும், பௌதீக வளப் பற்றாக்குறை பாரிய சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நோயாளர்களின் உரிமைகளை பாதுகாத்து கரிசனையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் காணப்படுவதாகவும், கொள்கைகளை பின்பற்றி அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் மத்திய அரசாங்கத்திடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

தரமான சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்து, அதனை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கரு வளர்ச்சிக்கான இலவச சுக நல வைத்திய நிலையம் அமைக்கவுள்ள சிவபூமி அறக்கட்டளை ஆறுதிருமுருகன்!

சிவபூமி அறக்கட்டளை செயற்பாட்டில் அடுத்தகட்டமாக யாழ்ப்பாணத்தில் கரு வளர்ச்சிக்கான சுக நல வைத்திய நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது என செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்

 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

சிவபூமி அறக்கட்டளை கடந்த 23 ஆண்டுகளாக இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதை யாவரும் அறிவர் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான பாடசாலை, முதியோர் இல்லங்கள், கீரிமலை மடம் ,குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமம், மயிலிட்டி சிவபூமி கந்தபுராண மடம், நாவற்குழி திருவாசக அரண்மனை ,நாவற்குழி சிவபூமி அருங்காட்சியகம்,திருகோணமலை சிவபூமி யாத்திரிகர் மடம் ,சிவபூமி பாடசாலை, கிளிநொச்சி கனகபுரம் சிவபூமிப் பாடசாலை ,மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை திருமந்திர அரண்மனை ,பம்பலப்பிட்டி சிவபூமி ஆத்மீக நிலையம் ,கண்டி கலகா சிவபூமி மலையக ஆச்சிரமம் , மலையக மாணவர் கல்வி விருத்தி நிலையம் இவற்றைக் கடந்த காலங்களிலே அன்பர்களின் பூரண ஒத்துழைப்புடன் மேலும் சிறப்பாக நடாத்தி வருகின்றோம்.

 

மேலும் லண்டன் அவயம் அறக்கட்டளையின் உதவியுடன் ஆனைக்கோட்டையில் சிவபூமி அவயம் இலவச வைத்தியசாலை, இயக்கச்சி சிவபூமி இலவச வைத்தியசாலை, கண்டி கலகாவில் சிவபூமி இலவச அபய வைத்தியசாலை போன்றவற்றை நடாத்தி வருகின்றோம்

 

இத்தனைக்கும் மத்தியில் எமது பணிகள் விரிவடைந்து போகும் நிலையில் ஆதரவற்ற சிறுவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த நிதி உதவி வழங்கல் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவை ஏற்படுகின்றபோது தேவைகளை செய்து வருகின்றோம்.

 

பத்திரிகை தொலைக்காட்சி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் புற்றுநோய் வைத்தியசாலைக்கு பாயாசத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகின்றோம் இந்த அரிய பணிகளை இறை அருளாள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

 

இந்த ஆண்டு புதிய செயற்றிட்டமாக யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் இரண்டு மாடிக் கட்டடத்தை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். குறிப்பாக இந்தக் கட்டடத்தை புகழ்பூத்த வழக்கறிஞர் செனற்றர் எஸ்.ஆர்.கனகநாயகம் அவருடைய இல்லத்தை அவுஸ்திரேலியாவில் வாழும் அவருடைய மகள் மருமகன் டாக்டர் பாலசுப்பிரமணியம் சாவித்திரி தேவி தம்பதிகள் எமக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள் எம்முடைய அறக்கட்டளையூடாக எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடன் இணைந்து பெண்கள் சுக நல நிலையத்தை யாழ் போதனா வைத்தியசாலையுடன் ஒப்பந்தம் செய்து திறந்து வைக்கவுள்ளோம்.

 

குறிப்பாக இங்கு கருவளச்சி சிசிக்கை நிலையம் குறிப்பாக குழந்தை இல்லாதவர்களுக்கான சிகிச்சை நிலையம் அமையவுள்ளது. அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கும் வகையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கவுள்ளோம்.

பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் சிவபூமி நடவடிக்கை எடுப்பதால் இந்த இல்லத்தை கையளிப்பதாக எமக்கு வாக்குறுதி அளித்தார் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்ஆர் கனகஈஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த சுக நல நிலையத்தை திறந்து வைக்கின்றார்.

 

மேலும் வரவேற்புரையை யாழ்.போதனா வைத்திய சாலை ந.சரவணபவன் தொடக்க உரையை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ந.சத்தியமூர்த்தி நிகழத்தவுள்ளதுடன் வாழ்த்துரைகளை யாழ். புல்கலைக்கழக துணைவேந்தனர் ஸ்ரீ சற்குணராசா மற்றும் யாழ.மருத்துவப் பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திர குமார் அறிமுக உரையை யாழ்.மருத்துவ பீட விரிவரையாளர் வைத்திய நிபுணர் பால கோபி யாழ்.வைத்திநிபுணர் சி.ரகுராமன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.