நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இஸ்ரேல் அரசுக்கு ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குவது தொடர்பாக 1.2 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர்த் தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இஸ்ரேல் ராணுவத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிகள் வழங்குவது நியாயமற்றது என்று கூறி, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, நியூயார்க், கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் சில ஊழியர்கள் 10 மணி நேரத்துக்கு மேல் எதிர்ப்பு போராட்டம் செய்தனர். கூகுள் நிறுவனத்தின் புகாரையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 9 பேரை காவல் துறை கைது செய்தது.
இந்நிலையில், மறுநாள் புதன்கிழமை கூகுள் நிறுவனம் அதன் 28 ஊழியர்களை நீக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்புப் பிரிவின் தலைவர் கிரிஸ் ராக்கோ இது குறித்து ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தப் போராட்டத்தில் தொடர்புடைய 28 பேர் நிறுவனத்திலிருந்து நீக்கப்படுகின்றனர். இத்தகைய செயல்பாடுகளை கூகுள் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என்று குறிப்பிட்டுள்ளார்.