12

12

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் – அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சாவின் அறிவிப்பால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது, ஈரானுக்கான விமான சேவை ரத்து தொடரும் என்று லுஃப்தான்சா அறிவித்துள்ளது.

 

ஈரானில் இருந்தும் ஈரானுக்குள்ளும் சனிக்கிழமை வரையில் விமான சேவைகளை முன்னெடுப்பதில்லை என்றே லுஃப்தான்சா அறிவித்துள்ளது.

ஏப்ரல் 13ம் திகதி சனிக்கிழமை வரையில் ஈரானுக்கு அல்லது ஈரானில் இருந்து எந்த முன்னெடுக்கப்படாது எனவும், விரிவான ஆய்வுக்கு பின்னரே இந்த முடிவெடுத்துள்ளதாகவும் லுஃப்தான்சா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்கா உளவுத்துறை அந்த நாட்டை எச்சரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஈரான் பதிலடி அளிக்கும் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

அது நேரடியாகவோ ஹவுதிகள் அல்லது ஹிஸ்புல்லா அமைப்புகளாலோ ஈரான் முன்னெடுக்கலாம் என்றே அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

 

இஸ்ரேலின் தாக்குதலில் 63 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு !

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதலில் 63 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 33,545 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 76,094 பேர் காயமடைந்துள்ளனர்.

 

மேலும் ஒக்டோபர் 7 முதல் தெற்கு இஸ்ரேலிய எல்லை மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் காசாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிங்கள தேசிய இனவாதத்தை உடைக்க தமிழ் தரப்புக்கள் பிரதான போட்டியாளர்களான சஜித், அநுரவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் – தயான் ஜயதிலக்க

உள்நாட்டில் நீண்டகாலமாக அரசியலில் புரையோடிப்போயிருக்கின்ற சிங்கள, பௌத்த தேசிய இனவாதத்தினை களைவதற்கு பொருத்தமான தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் தரப்புக்கள் பிரதான போட்டியாளர்களான சஜித், அநுரவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், தமிழர்களின் அரசியல் போக்கு அவரோணகத்தில் சென்றுகொண்டிருக்கையில், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துகின்ற முயற்சியானது பொருத்தமான வியூகமாக அமையப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வடக்கு,கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முஸ்தீபுகளை எடுத்துள்ள நிலையில் அதுதொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு உபாயங்களை முன்னெடுத்துள்ளனர். இருப்பினும் அந்த உபாயங்களால் தமிழ் மக்களுக்கு போதுமான அளவில் பிரதிபலங்கள் கிடைத்திருக்கவில்லை.

 

அவ்வாறான பின்னணியில் தற்போது தமிழ் அரசியல் தரப்புக்கள் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

 

அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் ஒருமித்து நின்று செயற்பட்டுவதற்கு முன்வருகின்ற பட்சத்தில் சாத்தியமானதொரு வியூகமாகும்.

 

ஆனால் கள யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வியடத்தில் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இடையில் ஏகமனதான நிலைமைகள் வரப்போவதில்லை.

 

இதன்காரணமாக, தமிழ் கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற உறவுகள் தற்போதைய நிலைமையை விடவும் மோசமானதாகவே அடையப்போகின்றது.

 

அவ்விதமான நிலைமையில், நிறுத்தப்படும் தமிழ் வேட்பாளரால் அதியுச்ச கோரிக்கையான சுயாட்சி உள்ளிட்டவற்றை முன்வைப்பது மிகக் கடினமானதாகவே அமையும்.

 

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 1977இல் தேர்தலுக்கு முகங்கொடுத்த நிலைமைகள் தற்போது இல்லை. தமிழர்களின் அரசியல் போக்கு அவரோகணத்திலேயே உள்ளது. அவ்விதமானதொரு சூழலில் பொதுவேட்பாளர் முடிவானது பொருத்தமான நகர்வாக அமையாது.

 

மேலும் தென்னிலங்கையில் அடுத்த ஜனாதிபதி தோதலில் பிரதான வேட்பாளராக இருக்கப்போகின்றவர்கள் சஜித் பிரேமதாசவும், அநுரகுமார திஸாநாயக்கவுமே.

இவர்கள் இனவாதத்துக்கு எதிராக ஒன்றுதிரண்ட ‘அரகல’வின் சக்தியை அறிந்தவர்கள். ஆகவே அவர்கள் மீண்டும் சிங்கள, பௌத்த இனவாத விடயங்களை மையப்படுத்தி அரசியல் செய்வதற்கு விளைய மாட்டார்கள்.

 

அவ்விதமான சூழலில் நாட்டில் தற்போது, சிங்கள, பௌத்த இனவாதத்தினை அரசியலில் இருந்து துடைத்தெறிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை தமிழ்த் தரப்பினர் சரியாக பயன்படுத்த வேண்டும்.

 

ஆகவே,அவர் சஜித், அநுர ஆகியோருடன் நீண்டகாலமாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகள் சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுத்து தீர்வினை எட்ட வேண்டும்.

 

அதேநேரம், ஸ்பெயினின் கட்டலோனியாவில் நடைபெற்ற விடயத்தினையும், குர்திஸ்லாந்தில் ஏற்பட்ட நிலைமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

அதுமட்டுமன்றி, பிரித்தானிய பிரமர் தட்சருக்கு எதிராக போராடிய சின்பிங் அமைப்பின் வியூகத்தினையும் முன்னுதாரணமாகக் கொண்டு தீர்மானங்களை எடுக்கவும் முடியும்.

 

அதனடிப்படையில் தமிழ்த் தரப்பு பொருத்தமான தருணத்தினை பயன்படுத்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதே பொருத்தமானது என்றார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு இணக்கம் என்கிறார் சிறீதரன்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லை.

 

ஆகவே, எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும். அந்த வகையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும்.

 

அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிக்கின்றேன். எனினும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் இந்த விடயம் சார்ந்து கலந்துரையாடி கட்சியாக தீர்மானம் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது.

ஆகவே, குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றார்.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் இன்னுமொரு முக்கிய உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தமிழர் சார்பில் பொது ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதன் பின்னணியில் ராஜபக்சக்கள் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டம் – திட்டமிட்டு குழப்பம் போய்கொண்ட மறவன்புலவு சச்சிதானந்தம் குழுவினர் !

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தை தொடரவும் முடிவு எடுத்துள்ளனர்.

வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மட்ட தெரிவுகளுக்கான பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (12) காலை ஒலுமடு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஆலய பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், ஆலய பக்தர்கள்,  வேலன் சுவாமிகள், வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்தோர் என பலரும் கலந்து கொண்டு கூட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது, ஆலய நிர்வாகத்தின் அழைப்பின்றி சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், விபுலானந்த சுவாமிகள் உள்ளிட்ட ஒரு குழுவினர் அங்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த குழுவினர் குருந்தூர் மலை விகாராதிபதியை இரகசியமாக சந்தித்து அதற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி, மக்கள் குறித்த குழுவினரை வெறியேறி நிர்வாகத் தெரிவுக்கு ஒத்துழைக்குமாறு கோரினர்.

அத்துடன் சிவசேனை முன்னிலையில் நிர்வாகத் தெரிவு இடம்பெறமாட்டாது எனவும், வெடுக்குநாறி மலையில் பல பிரச்சனைகள் நடந்தும் சிவசேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எனவும் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை எனவும் மக்கள் தெரிவித்ததுடன், அவர்களை வெளியேறுமாறு கோரினர்.

எனினும், சிவசேனை அமைப்பினர் வெளியேறாமையால் ஆத்திரமடைந்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆலய பக்தர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியதுடன், ஒரு வருடத்திற்கு தற்போதைய நிர்வாக சபையே தொடர்ந்து இயங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதுடன், மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர். மக்கள் சென்ற பின்னும் சிவசேனை அமைப்பினர் பொது நோக்கு மண்டபத்தில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் – பின்னணியில் ராஜபக்சக்கள் என்கிறார் சுமந்திரன்!

தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நடவடிக்கையின் பின்புலத்தில் ராஜபக்ஷக்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக கட்சியாக விரைவில் ஒரு தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

குறிப்பாக, தற்போது அரசியல் ரீதியாக தோற்றுப்போயுள்ள ராஜபக்ச தரப்பினர் இதன் பின்னணியில் செயற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

 

ராஜபக்ஷக்கள் கடந்த காலத்தில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை தங்களுடைய தேர்தல் வெற்றிக்கானதொரு யுக்தியாகக் கையாண்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.