17

17

ஆட்டநாயகன் விருதுக்காக கிடைத்த $5000 டொலர்களை இலங்கை மைதான பணியாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய சிராஜ் !

10 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்ற இந்திய அணிஆசிய கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.

51 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி ஏழாவது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் களமிறங்கிய இஷான் கிஷான் 23 மற்றும் சுப்பமன் கில் 27 ஓட்டங்களை எடுத்தனர்.

ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி 50 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

அதிலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்துவீச்சில் அனல் பறந்தது.இதனால் அடுத்தடுத்து இலங்கை விக்கெட்டுக்கள் சரிந்தன.

இறுதியில் 15.2 ஓவர்களில் 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

இலங்கை அணி சார்பாக குசல் மென்டிஸ்17,துசன் ஹேமந்த ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களைப்பெற்றனர்.ஏனைய அனைவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

பந்து வீச்சில் இந்திய அணி சர்பாக சிராஜ் 6 விக்கெட்டுகளையும் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதேவேளை போட்டியில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்ற மொஹமத் சிராஜ் தனக்கு கிடைத்த $5000 டொலர்களை கடுமையான மழையிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு செயற்பட்டு மைதானத்தை துப்புரவாக்கிய  மைதானம் பணியாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியமையானது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 1591 வீடுகள் !

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் நாளை (17) கையளிக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 79.70 கோடி இந்திய ரூபா மதிப்பில் 1591 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வேலூரை அண்மித்துள்ள மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார்.

மேலும், காணொளி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்போருக்கான வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் மாத்திரம் 11 கோடி இந்திய ரூபா மதிப்பில் 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூரில் தொடங்கி வைத்தார்.

142.16 கோடி இந்திய ரூபா மதிப்பில் 3,510 வீடுகளைக் கட்டும் நடவடிக்கை இதன்போது ஆரம்பிக்கப்பட்டது.

நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரயில் மூலம் இன்று இரவு வேலூர் செல்வதுடன், நாளை இரவு ரயில் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திலீபன் நினைவு நடைபயணத்தை இடைமறித்து நிறுத்திய பெரும்பான்மை இன மக்கள் – பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீதும் தாக்குதல்!

திருகோணமலையில் த.வி.பு அமைப்பின் உறுப்பினர் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் அதனை அடித்து நொறுக்கி, அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

திருகோணமலை – கொழும்பு வீதியில், சர்தாபுர பகுதியில் இந்த கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பொத்துவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்து, வடக்கு நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

 

திருகோணமலை மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக இன்று (17.09.2023) திருகோணமலை நகரத்தை நோக்கி, திருகோணமலை – கொழும்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்தது.

இதன்போது சர்தாபுர பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் கற்களை நடுவீதியில் போட்டு, வீதியை வழிமறித்திருந்தனர்.

அந்த பகுதியில் காவல்துறையினர், இராணுவ புலனாய்வுத்துறையினரும் பிரசன்னமாகியிருந்ததாகவும், காவல்துறையினர் தாக்குதலை தடுக்க தவறியதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

யாழில் கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் கைது !

யாழ்ப்பாணத்தில், ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முதியவரிடம் இருந்து, ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 70 வயதுமிக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைகழக தமிழ் மாணவர்களிடையே மலிந்து போகும் தற்கொலைகள் – கிளிநொச்சியில் மீண்டும் ஒரு பல்கலைகழக மாணவி தற்கொலை !

கிளிநொச்சி, கோனாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கிளிநொச்சி கோனாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியுமான வசந்தகுமார் டீலக்சியா என்பவரே தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் வீட்டில் தூக்கிட்டிருந்த நிலையில்  சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து, குறித்த சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழர் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களிடையே தற்கொலைகள் மலிந்து போய் காணப்படுவதுடன் இதன் நீட்சியால்  கல்விகற்ற இளைஞர் தலைமுறை ஒன்றை நாம் இழந்துகொண்டிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான சூழலும் உருவாகியுள்ளது. கடந்த ஜுலை 30 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக பட்டதாரி மாணவி ஒருவர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்திருந்தார். அது போல ஜுன் மாதம் தென் இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்ற இரண்டு யாழ்ப்பாண மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தனர். இதேவேளை கடந்தமாதம் (ஆகஸ்ட்) கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த சந்திரமோகன் தேனுஜன் (22) என்ற பல்கலைகழக மாணவன் தற்கொலைசெய்து இறந்திருந்த நிலையில் இன்று இந்த தற்கொலை பதிவாகியுள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள தற்கொலைகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ள இலங்கை மனநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் குறிப்பிட்ட போது,

கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 9,700  தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை அதற்கு முன்னைய வருத்துடன் ஒப்பிடும் போது 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

மேலும் தற்கொலை செய்துகொண்டவர்களில் நூற்றுக்கு 83 வீதமான ஆண்களும், 17 வீதமான பெண்களும் உள்ளடங்குகின்றனர். தற்கொலை செய்துகொண்டவர்கள்  கல்வி கற்ற தரப்பினர் என்பதுடன்  உயிரிழந்தவர்களில் 40 வீதமானவர்கள் சாதாரண தரத்தில் சித்தி அடைந்து உயர்தரத்தில் கல்வி கற்றவர்களாவர்.

இதேவேளை தற்கொலை செய்து கொண்டவர்களில் 22 வீதம் பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ஐ.நாவில் இலங்கையின் சுகாதாரத்துறையை மையப்படுத்தி புனையப்பட்ட பொய்கள் – நகைப்புக்குறியயை என்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட இதர சர்வதேச ஸ்தாபனங்களிடத்தில் இலங்கையின் சுகாதாரத்துறையை மையப்படுத்தி புனையப்பட்ட பொய்களை மையப்படுத்தி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியவை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அடிப்படைகளுடன் பின்னிப்பிணைந்துள்ள சுகாதாரத்துறை, உணர்வு ரீதியான விடயம் என்பதால் அதனை பயன்படுத்தி இலகுவாக அரசியல் நன்மைகளை அடைவதற்கு பலதரப்பினரும் தீவிரமான முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சுகாதாரத்துறையானது நலிவடைந்துள்ளதோடு, பொதுமக்களுக்கான உரிய சேவையை முன்வைக்க முடியாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சும் கட்டமைப்பும் ஊழல்கள் நிறைந்தவையாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வில் பங்கேற்றிருந்த சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யப்பா பண்டார உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த நிலையில், குறித்த விடயம் சம்பந்தமாக பதிலளிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் சுகாதாரத்துறையானது, மக்களுக்கு சேவைவழங்குவதாக உள்ளது. அதனால் சுகாதாரத்துறை தொடர்பான விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் உணர்வு ரீதியாக இலகுவாக பிரசாரம் செய்யக்கூடியவையாக உள்ளன.

அதனடிப்படையில் வங்குரோத்து அடைந்துள்ள எதிர்க்கட்சிகளும், சில தொழிற்சங்கங்களும், பொய்யான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக சுகாதாரத்துறையை கையிலெடுத்துள்ளன.

அவற்றின் பொய்யான பிரசாரத்தினால் எனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமையானது அதற்கு சிறந்த உதாரணமாக காணப்படுகின்றது.

இதேநேரம், நான் சுகாதாரத்துறையை பொறுப்பெடுக்கும்போது 570 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டது. தற்போது அது 60 வரையில் குறைந்துள்ளது.

இவ்வாறான நிலைமைகள் பற்றியெல்லாம் தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் சிந்திப்பதில்லை. இலவச சுகாதாரத்துறையை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் நாட்டத்தின் மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் வகையிலும் தான் செயற்படுகின்றன.

இந்நிலையில் தான் எதிரணியினர் ஐ.நாவுக்குச் சென்று முறைப்பாடுகளை முன்வைத்திருக்கின்றனர். நாட்டின் சுகாதாரத்துறை தொடர்பில் ஐ.நாவுக்குச் சென்ற செயற்பாடானது நகைப்புக்குரியதாகும்.

சர்வதேச நாடுகள் சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்காக தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதால் அவற்றுக்கு யதார்த்தமான நிலைமைகள் நன்கு தெரியும் என்றார்.

யாழ்ப்பாணத்தில் ஆலய புனருத்தாரணப் பணிக்காக இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி செய்த யாசகர் !

யாழ்ப்பாணம் வரதராஜப்பெருமாள் ஆலய புனருத்தாரணப் பணிக்காக யாசகர் ஒருவர் 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆலய புனரமைப்பிற்கு யாசகர் நிதியுதவி | Beggar Funds Temple Reconstruction In Jaffna

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, அந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது.

இக்கட்டுமானப் பணிக்காக யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து 2 இலட்சம் ரூபாய் பணத்தை ஆலய நிர்வாகத்தினரிடம் இன்று (17) வழங்கியுள்ளார்.

 3ஆவது நாளாக சித்தாண்டியில் தொடரும் மேய்ச்சல் தரைகளை கோரிய மக்கள் போராட்டம் !

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (17) 3ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது.

பண்ணையாளர்களும்,கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிரான அறவழிப் போராட்டமாக இத் தொடர் போராட்டம் இடம்பெறுகின்றது.

மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள தங்களது மேய்ச்சல் தரைப் பிரதேசமான மயிலத்தமடு, பெரியமாதவனைப் பரப்பில் தொடரும் சட்ட விரோத குடியேற்றம் தடுக்கப்பட்டு மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தருமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இவ் அறவழிப் போராட்டத்தினை மயிலத்தமடு,பெரியமாதவனை கால்நடை வளர்ப்போர் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு கமல அமைப்புக்களால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த 15.09.2023.அன்று காலை சித்தாண்டி பிரதான வீதியில் ஒன்று கூடியவர்கள் தங்களுக்கு எதிராக இளைக்கப்படும் அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வழியாக கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் சித்தாண்டி முற்சந்தி பிள்ளையார் ஆலயத்தினை வந்தடைந்தனர்.

அங்கு பிள்ளையாரை வணங்கி தங்களது அறவழிப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என சிதறு தேங்காய் உடைத்து அறவழிப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இவ் போராட்டமானது சுழற்சியான முறையில் தொடருமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியான முறையில் கால்நடைகள் பெரும்பான்மை சமூகத்தினரால் துப்பாக்கி சூடு நடாத்தி கொல்லப்படுவதுடன் இறைச்சிக்காக வெட்டப்படுவதும் களவாடப்படுவதுமான நிலை காணப்படுவதுடன் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பொலநறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தோர் அப் பிரதேசத்திற்கு வருகை தந்து அத்துமீறிய குடியேற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது பயிர் செய்கை நடவடிக்கைக்காக கால் நடை உணவாக உட்கொள்ளும் புற்களை உழவடித்து அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரை அழிவடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இவர்களது இச் செயற்பாட்டினால் பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதுடன் கால் நடைகளை விற்று விட்டு பிரதேசத்தினை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த அறிவித்தல் வர்த்தமானியில் !

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இந்த சட்டமூலம் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, நேற்று சனிக்கிழமை (16) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டபோது, பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதனையடுத்து, அந்த சட்டமூலத்தை திருத்தியமைக்க அரசு தீர்மானித்ததன் அடிப்படையில், பல்வேறு தரப்பினரிடம்  ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்று இந்த புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு தொலைபேசியில் ஆபாச வீடியோக்கள் காட்டிய ஆசிரியர் கைது !

இரத்தினபுரி – ஓபநாயக்க பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓபநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் தெயியந்தர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபரை இன்று நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.