22

22

ஐ.எஸ். அமைப்பைச்சேர்ந்தவர்கள் இன்றும் இலங்கையில் இருந்தால் பிள்ளையான் அதனை வெளிப்படுதல் வேண்டும் – நாடாளுமன்றத்தில் ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் !

ஐ.எஸ். அமைப்பைச்சேர்ந்தவர்கள் இன்றும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிக்கும் விடயம் உண்மையாக இருந்தால் அவர் அவ்வாறானவர்களை இனம்காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

 

ஈஸ்டர் குண்டு தாக்குதலின் சூத்திரதாரி யாராக இருந்தாலும் அவர் கண்டறியப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். எங்களால் நீதியை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் இறைவனின் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

 

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் ஐ.எஸ். பயிற்சி பெற்றவர்கள் நாட்டில் இருப்பதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் அன்று தெரிவித்தபோது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியதால் பாரியதொரு அழிவு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தற்போதும் நாட்டில் ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்திருக்கிறார்.

 

சந்திரகாந்தன் இந்த அரசாங்கத்தில் இருப்பவர். அப்படியானால் இது தொடர்பில் அவர் வெளிப்படுத்தி, அப்படியானவர்களை இனம்காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.

வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் – ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் நலன் பெறும் விதமாகவே இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் குறைந்த வருமானம் கொண்ட நிரந்தர வீடற்ற குடும்பங்களை இனங்கண்டு வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் நி”ரந்தர வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 5 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாகவும், வீடொன்றுக்கு தேவையான வசதிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இவ்வீடுகளின் கூரைகளைப் பயன்படுத்தி சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தைப் பெறுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமொனவும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது – யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் கட்டளை !

த.வி.பு உறுப்பினர் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று மதியம் (22) கட்டளை பிறப்பித்தது.

 

தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த மனுவை தள்ளுபடி செய்து, செப்டம்பர் 20 ஆம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, நேற்று (21) கொழும்பிலிருந்து ஹெலிகாப்டரில் வந்து, யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

 

இதில், தியாகதீபம் திலீபன் நினைவுநாள் அனுட்டிப்பு வன்முறை வடிவம் எடுப்பதால், அவசரமாக நினைவுநாளுக்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

 

அத்துடன், வவுனியா பம்பைமடுவில், சிவில் உடையில் வந்து வீடியோ படம் பிடித்த புலனாய்வாளர்களின் கைத்தொலைபேசி பறிக்கப்பட்டு, காட்சிகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவை நீதிபதிக்கு திரையிட்டு காண்பித்தனர்.

 

நினைவுநாள் அனுஷ்டிப்பு வன்முறை வடிவமெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு எதற்காக நினைவுநாளை தடைவிதிக்க வேண்டும், பொலிஸார் நடவடிக்கையெடுத்திருக்கலாம் அல்லவா என நீதிபதி வினவியபோது, பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன்முறை பரவலை தடுக்க நினைவு நாள் அனுஷ்டிப்பை தடை செய்ய வேண்டுமென கோரினர்.

 

இந்த மனு தொடர்பில் இன்று (22) மதியம் 1.30 மணிக்கு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என கட்டளை பிறப்பித்து நீதிமன்றம் அறிவித்தது.

மாணவனை தும்புத்தடியால் தாக்கி காலால் உதைத்து ஆசிரியர் – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் ஒருவர் தும்புத் தடியால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

 

வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு, பாடசாலையின் பகுதித் தலைவராகிய ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.

 

குறித்த மாணவன் மீண்டும் மீண்டும் தன்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டத்தற்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

எனினும், மாணவன் பெற்றோருக்கு இது தொடர்பாக எதுவும் கூறாத நிலையில் வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை கண்ட பெற்றோர் மாணவனிடம் அதுதொடர்பில் விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோர் இது தொடர்பாக வைத்தியசாலை காவல்துறையினரிடம் மாணவன் மூலம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

மாணவனின் கடிதத்தினை கொண்டு வவுனியா தலைமை காவல் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் மாணவனின் தந்தையால் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

 

இதேவளை, குறித்த ஆசிரியரால் ஏற்கனவே ஒரு மாணவன் மீது தும்புத்தடி கொண்டு தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

“சனல் 4, ராஜபக்ஷக்களுடன் பகை எனக்கூறுவது, உண்மையை மறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை.” – நாடாளுமன்றத்தில் அனுரகுமார திஸாநாயக்க!

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிகாரிகள் யாரேனும் கடமைகளை செய்யாவிட்டால் நாடாளுமன்றுக்கு அவர்கள் அறிவித்திருக்க வேண்டும். இதன் பின்னணியில் அரசியல் காரணம் தான் உள்ளது. 2015 இல் இல்லாது போன அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ராஜபக்ஷக்கள் முயற்சித்தார்கள்.

 

மீண்டும் புலிகள் வரப்போவதாகக் கூறினார்கள். ஆனால், 2017 இற்கு பின்னர் அந்தக் கதை அப்படியே மறைந்து விட்டது. இதன் பின்னர், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்தார்கள். சிங்கள மக்களுக்காக கருகலைப்பு கொத்து வழங்கப்பட்டதாகக் கூறினார்கள்.

 

கருக்கலைப்புச் செய்யும் ஆடை உள்ளதாகக் கூறினார்கள். எங்கே இப்போது இவைகள் எல்லாம்.?முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறிவிடுவார்கள் என்றும்கூட பிரசாரம் செய்தார்கள்.

சனல் 4 ஆவணப்படம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?இது தொடர்பாக கேட்டால் ராஜபக்ஷக்களுடன் சனல் 4 விற்கு கோபம் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

 

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையும் தானே செய்தி வெளியிட்டது. அப்படியென்றால் இந்தப் பத்திரிகையும் இவர்களுடன் பகையில் தானா உள்ளது? நிரூபமா ராஜபக்ஷ தொடர்பாக பண்டோரா ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆவணத்தை வெளியிட்ட சர்வதேச நிபுணர்களும் ராஜபக்ஷவினருடன் கோபத்திலா உள்ளார்கள்?

 

எனவே சனல் 4, ராஜபக்ஷக்களுடன் பகை எனக்கூறுவது, உண்மையை மறைக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்குத் தலா 10 பேர்ச் காணிகளை வழங்க திட்டம்..? – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண

தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளில் பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகளை பொதுச் செற்பாடுகளுக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைபை விரைவுபடுத்துவது குறித்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் கலந்துரையாட வேண்டும் எனப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் அண்மையில் அவரது தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமையால் அவற்றின் கீழ் பயன்படுத்தப்படாதுள்ள பல ஏக்கர் காணிகளைப் பொதுச் செற்பாடுகளுக்குக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

 

இதனைப் பெற்றுக் கொள்வது குறித்து கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சட்ட வரைபொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் நினைவுபடுத்தினார். இதனைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

 

அத்துடன், பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்குத் தலா 10 பேர்ச் காணிகளை வழங்குவது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியன இணைந்து, கூட்டாக அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

பெருந்தோட்டத்துறையில் உள்ள ஏறத்தாழ 250,000 தொழிலாளர் குடும்பங்களில் ஏற்கனவே ஏறத்தாழ 60,000 குடும்பங்களுக்குக் காணி உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 

இதற்கமைய எஞ்சிய குடும்பங்களுக்கான காணிகளைப் பெற்றுக்கொடுக்க 5000 ஹெக்டெயர் காணி தேவைப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களில் காணப்படும் காணிகளில் விசேட செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில இடங்களில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்தில் 20 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது !

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 4 கிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட மேலும் சில போதைப்பொருட்களை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

அத்துடன் குறித்த நால்வரையும் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மீண்டெழும் தமிழரின் கல்விப் பாரம்பரியம் – இலங்கையில் முன்னிலையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் !

நடைபெற்று முடிந்த 2022ஆம் ஆணடுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாகாண மற்றும் மாவட்டங்களுக்கான பல்கலைகழக மாணவர்களின் தெரிவும் – சித்தி வீதத்தையும் அடிப்படையாக கொண்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் முதலிரண்டு இடங்களையும் பெற்றுள்ளமையானது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

கடந்த காலங்களில் குறிப்பாக 2021ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழரின் பூர்வீக பகுதிகளாக கருதப்படும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை பாரிய வீழ்ச்சி கண்டிருந்ததது. தரம் 11 மாணவர்களின் பெறுபேறுகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பாரிய சரிவை உச்சகட்டமாக எதிர்கொண்டிருந்தன.

 

இது பற்றிய முழுமையான விடயங்களை தரவுகளுடன் பேசுகிறது தேசம் திரை..;